தானாய் வந்து தண்ணருள் புரிபவர்!

அருள் பாலித்து வரும் இயற்கை விநாயகர் மெல்ல மெல்ல தன்னை வெளிப்படுத்திக் காட்டி பக்தர்களை ஈர்க்கும் வரலாறு மெய்சிலிர்க்க வைப்பதாகும். 
தானாய் வந்து தண்ணருள் புரிபவர்!
தானாய் வந்து தண்ணருள் புரிபவர்!

சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள  ஆலமரத்தில் எழுந்தருளி, அருள் பாலித்து வரும் இயற்கை விநாயகர் மெல்ல மெல்ல தன்னை வெளிப்படுத்திக் காட்டி பக்தர்களை ஈர்க்கும் வரலாறு மெய்சிலிர்க்க வைப்பதாகும். 

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கலைவாணர் அரங்கம் கட்டும் போதும்,  சட்டப்பேரவை உறுப்பினர் விடுதிகள் கட்டும் போதும், தமிழ்நாடு தேர்வாணைய அலுவலகக் கட்டடம் போன்ற கட்டுமான வேலைகள் நடக்கும்போதும் பணியாட்கள் அனைவரும் ஒன்றாக வந்து தங்கி ஓய்வெடுத்த இடம் இயற்கை விநாயகர் குடிகொண்டுள்ள ஆலமரத்தடி ஆகும்.

கட்டுமான வேலைகள் செய்வதற்கு வந்த ஆட்கள் தங்கியிருக்கும்போது, ஒருநாள் காலை கட்டுமான உபகரணங்களை மரத்தடியில் வைத்து  கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அவர்கள் கண்ணில் தட்டுப்பட்டார் இயற்கை விநாயகர். கையெடுத்து கும்பிட்ட  உழைப்பாளிகள், தாங்கள் விநாயகர் நிழலில் தங்கி இருக்கிறோம் என்ற தைரியத்தோடு துணிந்து நின்று வேலை செய்து முடித்து,   பத்திரமாக அவரவர் ஊருக்குத் திரும்பினர். 

அவர்களில் பலர் மீண்டும் சென்னைக்கு வரும்போது, தங்களுக்கு பாதுகாப்பாக இருந்த விநாயகப் பெருமானைக் கண்டு வழிபட்டுச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அரசினர் மாளிகையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் விநாயகருக்கு விளக்கேற்றி வைக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.

அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள இஷ்டலிங்கேஸ்வரர் சிவன் கோயிலில் பணி செய்யும் அர்ச்சகரும், அருகில் இயற்கை விநாயகர் இருப்பதைக் கண்டு, முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு வரும்படி கோயிலுக்கு வருவோரிடம் கூறி வந்துள்ளார். அவ்வாறு வழிபட்டு வந்தவர்களின் கோரிக்கைகள் தடையின்றி நிறைவேறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அரசினர் தோட்டத்து ஆலமரத்தடி இயற்கை விநாயகர் பிரசித்தி பெற்றார்.

தல வரலாறு: கடந்த 1968 -ஆம் ஆண்டு ஜூலை 14}இல் அரசினர் தோட்டத்திலுள்ள இஷ்டலிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை காண எதிரிலிருந்த சிம்சன் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் வந்திருந்தனர். 

அவர்களில் ஒருவர் பத்மநாபன் என்பவர். அவர் ஆலமரத்தடியை கடக்கும்போது அதன் நிழலும், குளிர்ச்சியும் அவரை ஈர்த்தது. அவர் சற்று ஓய்வு எடுத்துச் செல்லலாம் என நினைத்து வேரடியில் அமர்ந்தார். கண்ணயர்ந்த நேரத்தில் யானை ஒன்று அவரிடம் வந்து, ""இன்னும் என்ன தேடிக் கொண்டிருக்கிறாய்?  எப்போது நீ, நீயாக மாறப்போகிறாய்?'' எனக் கேள்விகள் கேட்டதும்  திடுக்கிட்டு கண் விழித்தவர், அப்போதுதான் அங்கே இயற்கை விநாயகர் குடி கொண்டிருப்பதைக் கண்டார். 

விநாயகரை கும்பிட்டு விட்டு, அன்று முழுவதும் அங்கேயே இருந்து பணிவிடைகள் செய்து வீடு திரும்பினார். மறுநாள் காலை சீக்கிரமாகக் கிளம்பி வந்து விநாயகருக்கு அபிஷேகம், ஆராதனை, விளக்கு போடுதல் போன்றவற்றைச் செய்து, ஆடு மாடுகள் உள்ளே செல்லாமல் ஒரு வேலி அடைத்து, மற்ற பக்தர்களுக்கும் உதவி செய்து வந்தார். 

நாளடைவில் தன் பணியை ராஜிநாமா செய்துவிட்டு முழுநேர பக்தனாக மாறி, இயற்கை விநாயகருக்கு தொண்டு செய்வதிலேயே தன் வாழ்நாளைக் கடத்தினார். 

சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் தினந்தோறும் இப்பெருமானை வழிபட்டு வந்தனர். இதனால் தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் சிறப்பாக நிறைவேறுவதையும், காரியம் கைகூடுவதையும் உணர்ந்தனர். 1990-க்கு மேல், பத்மநாப சுவாமிகள் மறைவுக்குப் பிறகு, இயற்கை விநாயகரை பராமரிக்கும் பொறுப்பை இந்து சமய அறநிலையத்துறை ஏற்றது.

விநாயகர் ஆலமரத்தில் அதிக மக்களுக்குக் காட்சி கொடுக்கத் துவங்கிய  தினமான ஜூலை 14-ஆம் தேதியன்று, ஆண்டுதோறும் விநாயகர் ஜயந்தி உற்சவம் மற்றும் அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  

விநாயகர் சதுர்த்தி அன்று திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம்  வழங்கப்படுகிறது. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்திசிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

மாதந்தோறும் அஷ்டமி அன்று இரவு 8 மணிக்கு இங்குள்ள பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 
2012 ஜூன் 7-இல் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்றுமுதல், இருகால பூஜைகள் தினமும் நடைபெறுகிறது.  இக்கோயிலில் தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சுவாமியை தரிசனம் செய்யலாம்.

அமைவிடம்: சென்னை, அண்ணாசாலை, சிம்சன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கிழக்கு நோக்கி நடந்து, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருக்கும் இத்திருக்கோயிலை அடையலாம். 
தொடர்புக்கு: 044 -28412840; 8939384251.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com