பொருநை போற்றுதும்! - 161

தம்முடைய கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்' என்று பெயரிட்டது குறித்து, சில ஆண்டுகளுக்குப் பின்னர், 1934-இல் வ. உ. சி. எழுதியுள்ள குறிப்பு: 
பொருநை போற்றுதும்! - 161

தம்முடைய கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்' என்று பெயரிட்டது குறித்து, சில ஆண்டுகளுக்குப் பின்னர், 1934-இல் வ. உ. சி. எழுதியுள்ள குறிப்பு: 

எனது வக்கீல் உத்தியோகத்தினை மறுபடியும் அடைய யான் சென்ற 1929-ஆம் வருடத்தில் முயற்சித்தபோது, சென்னை பெரிய நீதிமன்றத்து நீதிபதிகளுக்கெல்லாம் சிபாரிசு செய்து, எனக்கு வக்கீல் உத்தியோகம் கிடைக்கும்படிச் செய்தவரும் அந்நீதிமன்றத்தின் அக்காலத்து நீதிபதிகளில் ஒருவராயிருந்தவரும், பின்னர் உபகாரச் சம்பளம் பெற்று லண்டன் நகரில் வசித்து வருகிறவருமான ஸ்ரீ இ. எச். வாலேஸ் அவர்களுக்கு யான் நன்றியறிதல் உள்ளவனாயிருக்கிறேன்.

என் நன்றியறிதலின் ஓர் அடையாளமாக அவர் பெயரை எனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்' என்று வைத்துள்ளேன்.

இக்குறிப்பிலேயே, தமக்கும் குடும்பத்திற்கும் உதவி செய்த தில்லையாடி வேதியப்பிள்ளைக்கு நன்றியறிதலாகத் தம்முடைய இரண்டாவது மகளுக்கு "வேதவல்லி' என்று பெயர் சூட்டினார் என்பதும், டாக்டர் வரதராஜுலுநாயுடுவோடு நிரம்ப நட்பு பூண்டிருந்தார் என்பதும் தெரிகிறது.

சில காலம் கோவில்பட்டியில் வழக்கறிஞராகப் பணி செய்த வ. உ. சி, பின்னர் தூத்துக்குடிக்குச் சென்றார். 1920-இல், ஒத்துழையாமைத் திட்டம் குறித்த பரிசீலனை, கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்புக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டபோது, வ. உ. சி-யும் பங்கேற்றார்.

இருப்பினும், ஒத்துழையாமைக் கொள்கையில் இவருக்குப் பிடித்தம் இருக்கவில்லை. சொல்லபோனால், ஒத்துழையாமை என்பதை இவரும், திலகர் வழி வந்தவர்களும் சற்றே வித்தியாசமாகக் கண்டனர்.

பிரிட்டிஷ்  அரசாங்கத்தோடு எல்லா விஷயங்களிலும் ஒத்துழைக்கக் கூடாதென்று காந்தியடிகள் கூறினார். திலகரும், வ. உ. சி-யும்,  நமக்கு சாதகமான விஷயங்களில்  ஒத்துழைக்க வேண்டுமென்றும், பாதகமான விஷயங்களில் ஒத்துழைக்கக் கூடாதென்றும் எண்ணினார்கள்.

வ. உ. சி. எழுதினார்: 

ஒத்துழைத்தலும், ஒத்துழையாமையும் ஏககாலத்தில் நிகழவேண்டுமென்பதே நமது அவா.

பல்வேறு காரணங்களால் காங்கிரஸிலிருந்தும், அரசியலிலிருந்தும் ஒதுங்கியிருந்த வ. உ. சி, 1927-இல் மீண்டும் அரசியல் மேடைகளில் தென்பட்டார். எனினும், இதன் பின்னர், அரசியல் துறவறம் பூண்டு விட்டார் என்றே சொல்லலாம். 

சிறையிலிருந்து எழுதிய கடிதங்களைக் கூட கவித்துவமாகவே எழுதிய வ. உ. சி, இலக்கியவாதியாகத் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி அளப்பரியது. 

திருக்குறள் பரிமேலழகர் உரையைக் கற்றவருக்குப் பிற உரைகளையும் பயில வேண்டும் என்னும் அவா எழுந்தது. 

மிகக் கடினமான தேடலுக்குப் பின், மணக்குடவர் உரை கிட்டியது. அதனைச் சந்தி பிரித்துப் பதிப்பித்தார். 1917-இல், பெரம்பூரில் வசிக்கும் காலத்தில், சென்னை கே.ஆர். அச்சகம் வழியாகப் பதிப்பிக்கப் பெற்ற இப்பதிப்பில், இப்பதிப்பிற்கு உதவியாக இருந்த உ. வே. சா. அவர்களுக்கும், சகஜாநந்த சுவாமிக்கும், செல்வ கேசவராய முதலியாருக்கும், கனகசுந்தரம் பிள்ளைக்கும், தென் ஆப்பிரிக்க இந்தியச் சகோதரர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

திருக்குறள் பதிப்புரையில், வ. உ. சி. குறிப்பிடும் நுணுக்கம் ஒன்றினை, தமிழிலக்கியவாதிகள் என்றென்றும் நினைவுகூர வேண்டும். 

திருக்குறளின் 23-ஆவது அதிகாரம் "ஈகை' என்பது; 24- ஆவது அதிகாரம் "புகழ்' என்பதாகும். "புகழ் என்பது வெறுமே செவ்விய வாழ்க்கை வாழ்வதன்று; பிறருக்கு ஈந்து வாழ்வதே ஆகும்' என்னும் பொருள் தொணிக்க, இவ்வமைப்பினைச் சுட்டி, வள்ளியோரால் செய்யப்படுவது ஒன்றாகலின் இவ்வதிகாரம் செல்வரால் செய்யப்படும் ஈகையின் பின் கூறப்பட்டது என்று குறிப்பிட்டார். 

இவருடைய பதிப்புரையே கூட, வள்ளுவத்திற்குப் புத்துரையாகத் தென்படுகிறது. திருக்குறளுக்கு உரையும் யாத்தார். 

"மெய்யறம்' என்னும் நூல், தனிச் சிறப்புக்குரியது. ஒவ்வொரு மனிதனும், மாணாக்கனாக, இல்லறத்தானாக, அரசியலானாக, அந்தணனாக, மெய்ஞானியாகச் செயல்பட்டுப் பக்குவமடையலாம் என்பதை உணர்த்துகிறது. 

"சிவஞான போதம்' மற்றும் "இன்னிலை' ஆகியவற்றுக்கு விளக்கவுரைகள், "அகமே புறம்', "மனம் போல வாழ்வு', "வலிமைக்கு மார்க்கம்', "சாந்திக்கு மார்க்கம்' போன்ற மொழியாக்க நூல்கள்ஆகியவை தமிழுக்குப் பெருமை கூட்டுபவை. 

சித்த மருத்துவத்தில், நவீன கால ஆய்வு முறைகளை இணைத்துச் செயல்படுத்தவேண்டும் என்பது இவரின் விருப்பம். 

""எனது நீண்ட கால அனுபவத்தில், தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்கும் தமிழ்நாட்டினரின் சரீர இயற்கைக்கும் பொருத்தமான வைத்தியம் தமிழ்ச்சித்த வைத்தியமே என்று யான் கண்டுள்ளேன். 

தமிழ்ச் சித்தர்கள், தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, தமிழ் நாட்டினுடைய நிலைமையையும், தமிழ் மக்களுடைய பழக்க வழக்க ஒழுக்கங்களையும் நேரில் அறிந்து வைத்தியம் செய்து, வைத்திய நூல்கள் எழுதி வைத்தவர்கள். ஆனபடியால், அவர்கள் வைத்தியம் தமிழ் நாட்டிற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. 

இன்னமும் தமிழ் வைத்திய நூல்களெல்லாம் பாக்களாகவே இருக்கின்றன. அவற்றை வசன நடையிலே எழுதி வெளிப்படுத்துவதற்கும், தமிழ் சித்த வைத்திய மாணவர்களுக்குத் தற்கால மேனாட்டு முறைப்படி ரண வைத்தியம் இன்னும் அதிகமாகக் கற்பிக்கும்படிக்கும் அரசாங்கத்தார் ஏற்பாடு செய்யவேண்டும்!'' - இவ்வாறு தம்முடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். 

"மெய்யறிவு' என்னும் நூல், ஆன்ம முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை உரைக்கிறது. "ராஜ நிந்தனைக் குற்றத்திற்காக நாடு கடத்தல் தீர்ப்புப் பெற்றுக் கண்ணனூர்ச் சிறையில் வசித்த காலத்தில், பக்கத்தில் வசித்தவர்களுக்காகத் தாம் பாடியது' என்னும் குறிப்பையும்தந்துள்ளார். 

வழக்கறிஞராகப் பணியாற்றும்போதே இவருடைய தமிழ்த் தாகம் பல்லாற்றானும் வெளிப்பட்டது. நீதிமன்றங்களில் புழங்கப்படுகிற சிவில், கிரிமினல் ஆகிய பிரிவுகளைக் குறிப்பிடுவதற்காக, தாவா வழக்கு, தண்ட வழக்கு என்னும் தொடர்களை வ. உ. சி. பயன்படுத்தினார் என்பதை இவருடைய வரலாற்றை நூலாக வடித்துள்ளவரும், கர்நாடக உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசருமான தி. நெ. வள்ளிநாயகம் எடுத்துக் காட்டுகிறார். 

1936, நவம்பர் 18 நள்ளிரவில், சிதம்பரம் என்னும் இத்திருவிளக்கு அணைந்தது. முன்னதாக, 1935-இல், பின்னர் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் தூத்துக்குடிக்குச் செல்ல நேர்ந்தது. உடம்புக்கு முடியாமலிருந்த வ. உ. சி-யை நேரில் சென்று பார்த்தார் பாபு. 

"சிதம்பரம் வாழும் தூத்துக்குடிக்கு வர நேர்ந்தது தம்முடைய பாக்கியம்' என்று குறிப்பிட்ட பாபு, வ. உ. சி. சிறை சென்ற நிகழ்வு, தம்முடைய சுயநாட்டுப் பற்று கூடுவதற்குக் காரணமாகியது என்றே நெக்குருகினார். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com