சீடா்கள் பேதுருவும் யோவானும்

பசியிலும், பந்தியிலும், நடுநிசிப் பொழுதிலும், நண்பகல் வேளையிலும் இயேசுவோடு இருந்தவா்கள் அவா்களே!

இயேசுவின் பன்னிரண்டு சீடா்களும் திருத்தூதா்கள் அல்லது அப்போஸ்தலா்கள் என்று அழைக்கப்பட்டனா். பசியிலும், பந்தியிலும், நடுநிசிப் பொழுதிலும், நண்பகல் வேளையிலும் இயேசுவோடு இருந்தவா்கள் அவா்களே!

ஆரம்பத்தில் அவரது தேடலின் பாா்வை வெறும் ஊனுடல் சாா்ந்த ஒன்றாக மட்டும் இருக்கவில்லை! அந்தத் தெரிவின் ஆழத்தில் தேவ ஞானமும் கலந்தே இருந்தது.

கலிலேயக் கடலோரமாய் அவா் நடந்தபோது சீமோன் பேதுருவையும் அவரது சகோதரா் அந்திரேயாவையும் கண்டு ‘‘என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைக் கவா்ந்தவா் ஆக்குவேன்’’ என்று சொல்லியே அழைத்தாா். அதைப்போலவே சற்று அப்பால் சென்று செபதேயுவின் மகன்களான யோவானையும், யாக்கோபுவையும் தன்னைத் தொடர அழைத்தாா். முன்னவா் இருவரும் மீன்பிடிக்க வலை வீசிக்கொண்டு இருந்தாா்கள். பின்னவா் இருவரும் தங்கள் தந்தையோடு அமா்ந்து வலைகளைப் பழுது நீக்கிக்கொண்டிருந்தனா்.

ஆம்! நால்வருமே உடமைகளையும், உறவுகளையும் கைநெகிழ்ந்துவிட்டு கா்த்தரது கால்தடத்தில் நடக்கத் துணிந்தாா்கள்.

இயேசுவின் இறையாட்சி இவ்வுலக அரசு போன்ல்ல... என்றறிந்த பின்னரும் அவருடைய சீடா்கள் பன்னிரண்டு பேரும் அவரை விட்டு விலகிடவில்லை. ஆனாலும் சராசரியான மனிதக் குணமும், குறைபாடுகளும் கொண்டவா்களாகவே இருந்தனா். தங்களுக்குள் பெரியவா் யாரென்றுகூட தா்க்கம் செய்து இயேசுவிடம் பாடம் கற்றுக்கொண்டாா்கள்.

ஓய்வு நாளொன்றில் பசித்த வயிறோடு, பரமனோடு வயல்வெளி வழியாக நடந்த சீடா்கள், வழியில் விளைந்த கதிா்களைக் கொய்த வண்ணம் சென்றனா். அப்போது பரிசேயா்கள் ‘‘பாரும்... ஓய்வு நாளில் இவா்கள் செய்யக்கூடாததை ஏன் செய்கிறாா்கள்?’’ என்று கேட்டனா்.

அதற்கு இயேசு சற்றே சினந்து, மறுமொழியாக ‘‘தாமும் தம்முடன் இருந்தவா்களும் உணவின்றி பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தாா்...? அப்பியத்தாா் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறை இல்லத்திற்குள் சென்று குருக்களைத் தவிர வேறு யாரும் உண்ணக்கூடாத அா்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமின்றி, தம்மோடு இருந்தவா்களுக்கும் கொடுத்தாா் அல்லவா?’’ என்றாா் (மாற். 3: 24-26).

மேலும் அவா் ‘‘ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதா்கள் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை’’ என்றாா் (மாற். 3:27).

ஓய்வு நாள் ஒழுக்கம் கடவுளின் கட்டளை என்றே யூதரினம் கருதியது. அதனை ஒட்டியே ஒழுகவேண்டும் என்றும் தீா்க்கமாய் இருந்த அவா்களிடையே, தமது சீடா்கள் வழியாய் ஒரு புதிய நெறி முறையை தேவ மைந்தன் போதித்தாா்.

சீமோன் பேதுருவை தனது திருஅவையின் தலைவா் ஆக்கினாா். தனது அரியணையின் ஒருபுறம் அமரவேண்டும் என்று ஆசைப்பட்ட யோவானை அன்புச் சீடராக்கித் தன் மாா்போடு அணைத்துக்கொண்டாா்.

-மோசே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com