பொருநை போற்றுதும்! - 163

குமாரமுத்து எட்டப்பருக்கு ஏன் ‘எட்டப்பா்’ என்னும் பெயா் வந்தது? அதற்கும் ஒரு கதையைப் பேட் பதிவு செய்கிறாா். விஜயநகர சாம்ராஜ்யத்தில், குமாரமுத்துவின் முன்னோா்கள் இருந்த காலம்.
பொருநை போற்றுதும்! - 163

குமாரமுத்து எட்டப்பருக்கு ஏன் "எட்டப்பர்' என்னும் பெயர் வந்தது? 

அதற்கும் ஒரு கதையைப் பேட் பதிவு செய்கிறார். விஜயநகர சாம்ராஜ்யத்தில், குமாரமுத்துவின் முன்னோர்கள் இருந்த காலம்.  ஏதொவொரு கைகலப்பில், சோமன் என்னும் போர்க்கள வீரரும், இந்தக் குறிப்பிட்ட முன்னோரும் மோதிக் கொண்டனர். மோதலில், சோமன் தலைவெட்டப்பட்டார். சோமனுக்கு எட்டுத் தம்பிகள். 

தங்களுக்கு ஆபத்து வரக்கூடாதென்று, முன்னோரின் காலில் விழுந்து பணிந்தனராம். அவர்களை ஆரத் தழுவிக் கொண்ட முன்னோர், தாமே அவர்களுக்குப் பாதுகாப்புத் தருவதாக வாக்களித்தாராம்.  இதனால், எட்டுப் பேருக்குத் தந்தை என்னும் நிலைக்கு ஆட்படுத்திக் கொண்டமையால், "எட்டு அப்பன்' (எட்டப்பன்) ஆனார். இந்த முன்னோரின் வழியில் வந்தவர்களெல்லாம் எட்டப்ப நாயக்கர்கள் ஆயினர். 

ஒட்டப்பிடாரத்தில் எழுந்தருளியிருக்கும் உலகம்மை, "காலரா' உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்து மீட்பவளாக உலகப் பிரசித்தி பெற்றவள். 

கங்கைகொண்டான் என்னும் ஊரின் பெயர், பழைய கல்வெட்டு ஒன்றில், "கங்கை கொண்ட சோழச் சதுர்வேதி மங்கலம்' என்பதாகக் காணப்படுகிறது. ராஜேந்திர சோழப் பேரரசரின் "கங்கை கொண்ட சோழன்' என்னும் பட்டமோ, இவருடைய பெயரர்களில் ஒருவரான கங்கை கொண்ட சோழரின் பெயரோ இதற்குக் காரணமாக இருக்கவேண்டும். 

பாளையங்கோட்டையின் கோட்டைச் சிதிலங்கள், 1840 வரை இருந்துள்ளன. 1840-இல், கோட்டையின் புறமதில் கற்கள் பல, திருநெல்வேலிப் பாலக் கட்டுமானத்திற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்தன. இருப்பினும், மீதமிருந்த சுவர்களும் இடிபாடுகளும் அவ்வப்போது கீழே சரிந்து, பொது மக்களுக்கு அபாயம் விளைவித்தன.  அப்போதைய ஜில்லா கலெக்டர் ஈ.பி.தாமஸ், புறமதிலாவது முழுமையாக இடிக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்தார். ராணுவத்தினர் எதிர்த்தனர். 

பற்பல வாத-பிரதிவாதங்களுக்குப் பிறகு, 1844-இல், புறமதிலை இடிப்பதற்கான ஆணையை அரசாங்கம் வெளியிட்டது. 1851-இல் கிழக்கு மதிலும் சுவர்களும் இடிக்கப்படுவதற்கான ஆணை வழங்கப்பட்டது; இங்கிருந்து எடுக்கப்படும் கற்களைப் பிற பொதுத்துறை கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. 1860-61-இல் பிற சுவர்களும் இடிக்கப்பட்டன. 1861-இல், கோட்டை அநேகமாகக் காணாமல் போய்விட்டது. 

கற்கள் தரம் பிரிக்கப்பட்டன. மிகச் சிறந்தவை, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிற்குக் கொண்டு போகப்பட்டன. மற்றவை, பிற கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்பட்டன. 

பீரங்கிகளும் தளவாடங்களும் நிறுத்தப்பட்டிருந்த கோட்டைப் பகுதி, "டில்லரி' (ஆர்டில்லரி என்பதிலிருந்து) என்று அழைக்கப்பட்டது. 

பாளையங்கோட்டையின் "ஹை கிரவுண்ட்' என்னும் பகுதி, ஒருகாலத்தில் "டம்டம மேடு' என்று வழங்கப்பட்டது. நூறு அடி உயரமிருந்ததாகச் சொல்லப்படுகிறது. உயரமான இந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வீரர்கள், பகைவர்களோ வெளியாட்களோ தொலைவில் வரும்போதே கண்டறிந்து, முரசுகளை "டம டம'எனக் கொட்டுவார்களாம். கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு இந்த ஓசையினால் செய்தி கிட்டிவிடும். "டம்டம' போய் "மேடு' நின்று, அதுவும் "ஹை கிரவுண்ட்'ஆனது. 

பாளையங்கோட்டையில், பவுலாஞ்சித் தோட்டம் என்றொரு பகுதி இருந்தது. பார்ஸி ஒருவர் சாராயக் கடை வைத்திருந்தார். அவரின் பெயர் பவுலாஞ்சி. அவருடைய கடை இருந்த இடம், பவுலாஞ்சித் தோட்டம் என்றழைக்கப்பட்டதாம். 

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட வணிகத் துறையின்முக்கிய பணி, பருத்தி வணிகம்தான். ஜில்லாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி, கொக்கரக்குளத்தில் சேகரிக்கப்பட்டுப் பதப்படுத்தப்பட்டது. பின்னர், காயல் பட்டினம் வழியாக மதராஸூக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்டது. ஜில்லாவுக்குள்ளேயே நெசவாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள் நெய்த துணிகள், சீனாவுக்கும் பிரெஞ்சுத் தீவுகளுக்கும் அனுப்பப்பட்டன.  

நெல்லைக்கருகில் உள்ள மணப்படை வீடு, ஒரு காலத்தில் பாண்டியத் தலைநகரமாகவோ, வட்டார ராஜதானியாகவோ இருந்தது. அருகிலிருக்கும் கிராமங்கள் மற்றும் ஊர்களுக்கான நிவந்தங்கள் பலவற்றிலும், ஊர் வழக்கிலும், இவையெல்லாம் "மணப்படை வீடு பாண்டியன்' கொடுத்ததாகவே பதியப்பட்டுள்ளது. 

மணப்படை வீட்டுப் பாண்டிய அரசர்களில், இராம பாண்டியன் என்றொருவர் இருந்துள்ளார். தாமிரவருணியின் வடகரையில் இவருடைய வசிப்பிடம். 
ஒவ்வொரு நாளும் நதியை நீந்திக் கடந்து, தென்கரையிலுள்ள நெல்லையப்பர் திருச்சந்நிதியில் வழிபடுவது வழக்கம். ஒருமுறை ஆற்றில் பெருவெள்ளம் வந்த நிலையில் நீந்திக் கடக்க முடியவில்லை. 

பலநாட்கள் வெள்ளம் பாய, மன்னர் வருத்தத்தில் தோய...... ஓர் அசரீரி ஒலித்தது. 

"சிதம்பரத்திலிருந்து ஸ்தபதி ஒருவர் கொணர்ந்த நடராஜத் திருமேனி, அரண்மனைக்கு அருகே இலுப்பைக் காட்டில் புதைந்து கிடப்பதாகவும், அதனை எடுத்துத் திருக்கோயில் நிறுவும்படியும்' அசரீரி கூறியது. 

இவ்வொலி கேட்ட இராம பாண்டியனும், சிதம்பரத்தின் பொன்னம்பலம் போல், பொருநையாளின் கரையில் செப்பறை நிறுவினார். 

இவ்வாறுதான், ராஜவல்லிபுரத்தின் அருகிலுள்ள செப்பறை திருத்தலம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. 

திருநெல்வேலியிலிருந்து சங்கரநயினார்கோயில் செல்லும் பாதையில் இருக்கிறது மானூர். ஒருகாலத்தில் இங்கு 1008 அந்தண இல்லங்கள், 1008 சிவன் கோயில்கள், 1008 கிணறுகள் இருந்தனவாம்.

மானூர்அம்பலவாண சுவாமித் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அம்பலவாணர் என்னும் முனிவர் இங்கு வாழ்ந்து வந்தார். தம்முடைய திருநடனக்காட்சியை நெல்லையின் நெல்லையப்பர் இவருக்குக் காட்டியதாகவும், இவ்வாறு அம்பலவாண முனிவர் பூஜித்த நடராஜப் பெருமானே இங்கு எழுந்தருளியதாகவும் சொல்கிறார்கள். இதனாலேயே, திருக்கோயில் நடராஜ மூர்த்தத்திற்கு "அம்பலவாண சுவாமி' என்று திருநாமம். இந்தத் திருநாமத்தாலேயே கோயிலின் பெயரும் வழங்கப்படுகிறது. 

தாம் அழைத்தபோது அழைத்த இடத்திற்கு வரக்கூடியசிவனாரை நெல்லையில் வணங்க ஆசைப்பட்டாராம் கருவூர்ச் சித்தர். அவருடன் விளையாட ஆசைகொண்டசிவனார், எவ்வலவோ அழைத்தும் நெல்லையில் காட்சி தரவில்லை. ஆத்திரத்தின் வசப்பட்ட சித்தர், "எருக்கும் குருக்கும் சூழக்கடவது' என்று நெல்லைக்குச் சாபம் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார். மானூர் அருகில் வரும்போது, அம்பலவாண முனிவர் அவரின் சினத்தைத் தணித்து ஆற்றுப்படுத்தி, தாமதமானாலும் தவறாமல் சிவனார் காட்சி தருவார் என்று சொல்ல, அதன்படியே கருவூர்ச்சித்தருக்கு நெல்லையப்பரும் காந்திமதியும் மானூரில் காட்சி தந்தனர். இதனால், இவ்வூர்க் கோயில் சுவாமியும் அம்பாளும் "நெல்லையப்பர்-காந்திமதி' என்னும் திருநாமங்களையே கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com