அஷ்டமாதிபதி குரு பகவான்!
By DIN | Published On : 08th April 2022 05:34 PM | Last Updated : 08th April 2022 05:34 PM | அ+அ அ- |

அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்குமதிபதியான குருபகவான் லாபஸ்தானத்தில் சுயசாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியில் உச்சம் பெறுகிறார்.
பதினொன்றாம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதை "ஏகாதச பிரகஸ்பதி'' என்று ஜோதிட நூல்கள் சிலாகித்துக் கூறுகின்றன. அதிலும் பதினொன்றாம் வீட்டில் குருபகவான் ஆட்சி பெற்றிருப்பது அதி உன்னத அமைப்பாகும். குருபகவான் புத்திர காரகர், தன காரகராகி மிகச் சிறப்பு வாய்ந்த மூன்றாவது
தனஸ்தானத்தில் அதாவது பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பது பொருளாதாரத்தில் உச்சநிலை உண்டாகும் என்று பொருள்படுகிறது. இதனால் தன வரவு, பிரபுத்துவம், ராஜயோக அதிகாரம், நஷ்டமான பொருள் கை வந்து சேருதல், விலகிப் போன உறவினர்களின் சேர்க்கையால் லாபம், வம்பு வழக்குகளில் வெற்றி, நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், திருத்தல யாத்திரை செய்தல், கணவர் (மனைவி), குழந்தைகளால் மகிழ்ச்சி, செய்தொழிலில் அபிவிருத்தி, கால்நடைகள் சேர்க்கை, எதிரிகள் நட்பாகுதல் ஆகிய சிறப்பான
பலன்கள் உண்டாகும். குருபகவான் ராசியிலும் நவாம்சத்திலும் பலம் பெற்றிருப்பதால் ""பருத்தி புடவையாய் காய்த்தது போல்'' என்பார்களே அப்படி சிறப்பான யோக பலன்கள் உண்டாகும்.
குருபகவானின் ஐந்தாம் பார்வை தைரியஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீது படிகிறது. இதனால் தன்னாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். சிறிய முயற்சியில் பெரிய ஆதாயங்கள் கிடைக்கும். சிறு பயணங்களை அடிக்கடி செய்ய நேரிடும். இதனால் செய்தொழிலில் முன்னேற்றம், பொருளாதாரத்தில் உயர்வு ஆகியவை உண்டாகும். குருபகவானின் ஏழாம் பார்வை பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீது படிகிறது. சமயோஜித புத்தியால் தக்க நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வாய்ப்புண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். ஸ்பெகுலேஷன் துறையின் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். பழைய கால பிரச்னைகளுக்குத் தக்க தீர்வு காண்பீர்கள். எதிர்காலத்திற்கு சீரிய வழிகளில் முதலீடுகளைச் செய்வீர்கள்.
குருபகவானின் ஒன்பதாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீது படிகிறது. இதனால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். நண்பர்களுடன் இணக்கமாக உழைப்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் அன்பினால் குடும்பத்தினரை கவருவீர்கள்.