கருணைக் கடல் கடவுள்!
By DIN | Published On : 08th April 2022 05:06 PM | Last Updated : 08th April 2022 05:06 PM | அ+அ அ- |

கொலை கொள்ளையில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ரவுடியை, மற்ற ரவுடிகள் சேர்ந்து அவனை கொடூரமாகத் தாக்கி குற்றுயிராக போட்டுவிட்டு ஓடிவிட்டனர். ரவுடி மருத்துவமனையில் அமைதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்த நிலையில் அவனுக்குள் ஒரு மனமாற்றம் ஏற்பட்டது. நானும் மற்றவர்களை இப்படித்தானே இரக்கமின்றி துன்புறுத்தியிருக்கிறேன். நான் செய்தது பெரிய பாவம், கடவுளே என்னை மன்னியும் என்று மனமுருகி வேண்டி, மன்னிப்பைப் பெற்றவனாக புதிய மனிதனாக வெளியே வருகிறான்.
பிழைத்து வந்த ரவுடியைக் கண்ட மக்கள் இவன் செத்துத் தொலைஞ்சிருக்கலாமே என்று அவன் மீது வெறுப்பை கொட்டித்தீர்த்தனர். இதுதான் மனித மனம், ஆனால் இறைவனின் மனமோ வேறுவிதமாக இருக்கின்றது. இதனை பழைய ஏற்பாட்டு யோனா நூலில் ஒரு நிகழ்வு விளக்குகிறது.
அசிரிய தேசத்தின் நினிவே நகர மக்கள் அனைவரும் நெறிதவறி பாவவாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அந்நகருக்கு அழிவு வரப்போவதை யோனா எனும் இறைவாக்கினரைக் கொண்டு எச்சரிக்கும்படி நினிவே நகரத்திற்கு அனுப்பி வைத்தார் இறைவன். யோனாவின் எச்சரிப்பு முழக்கத்தைக் கேட்ட நினிவே மக்களில் அரசன் முதல் ஆண்டி வரையிலும் மனம் வருந்தி திருந்தி வாழ. உடலிலே சாம்பலைப் பூசிக்கொண்டும், சணல் உடையை உடுத்திக்கொண்டும் இறைவனுடைய இரக்கத்தை வேண்டி மன்றாடினர். இறைவன் நினிவே மக்கள் மீது இரக்கத்தைப் பொழிந்து நகரத்தை அழிக்காமல் காப்பாற்றினார்.
இதைக் கண்ட யோனா ஆண்டவர் மீது சினம் கொண்டு, நான் உம்மை நன்கு அறிவேன், "அழிக்க நினைப்பீர், மக்கள் மன்னிப்புக் கோரி மன்டியிட்டுவிட்டால் உம்மனத்தை மாற்றிக்கொள்வீர் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறிவிட்டு, நகருக்குக் கிழக்கே போய் அமர்ந்துகொண்டார். அப்பொழுது ஆண்டவர் ஆமணக்குச் செடி ஒன்றை வளரச்செய்து, யோனாவிற்கு நிழல் தந்து சோர்வையும் நீங்கச் செய்தார். யோனா செடியைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். ஆனால் மறுநாளே அச்செடியைக் கருகச் செய்துவிட்டார் ஆண்டவர். யோனா மீண்டும் ஆண்டவர் மீது சினம் கொண்டார்.
ஆண்டவர் யோனாவை நோக்கி, "அந்தச் செடி ஓர் இரவில் முளைத்து மறு இரவில் முற்றும் கருகிப்போனது. நீ அதற்காக உழைக்கவும் இல்லை, வளர்க்கவும் இல்லை, அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே, இந்த நினிவேயில் லட்சத்து இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கைக்கும் இடக்கைக்கும் வேறுபாடு அறிந்திராத இந்த மக்களுக்கு இரக்கம் காட்டாமல் இருப்பேனோ? எப்படி அழிக்க நினைப்பேன்." என்றார்.
இதுதான் இறைவனின் கருணை உள்ளம், மனிதன் தன் சகமனிதனின் அழிவைக்காண ஆசைப்படுகிறான். இறைவனோ தன் முன்னே மண்டியிட்டு கதறும் மாந்தரை ஒருபோதும் தண்டிப்பதில்லை. மன்னிப்பை வழங்கவே விரும்புகிறார். அவர் கருணைக்கு அளவும் இல்லை, எல்லையும் இல்லை, நல்லவர் தீயவர் என்ற வேற்றுமையும் இல்லை, இறைவனின் பேரிக்கத்தைப் பெற்று பெருவாழ்வு வாழ்வோம்.
- மு.சே.அருள்ராஜன்