பொன்மொழிகள்!
By DIN | Published On : 08th April 2022 04:58 PM | Last Updated : 08th April 2022 04:58 PM | அ+அ அ- |

சந்தனமரத்தில் வசித்தாலும் பாம்பு தனது விஷத்தை விடுவதில்லை. அதுபோல் நல்ல சாதுக்களின் நட்பைப் பெற்றாலும், சிலர் தங்கள் தீய இயல்புகளை விடுவதில்லை.
மகான் துளசிதாசர்
சத்தியமே பேசுபவர்கள், பிறருக்கு நன்மை செய்பவர்கள், பொறுமையுள்ளவர்கள், பிறருடைய வேலையை ஆர்வத்துடன் செய்து முடிப்பவர்கள், மனதில் எப்போதும் பிறர் நலத்தையே நினைப்பவர்கள், அடக்கத்தையே ஆபரணமாக உடையவர்கள் ஆகியவர்களிடம் மகாலட்சுமி மகிழ்ந்து வசிக்கிறாள்.
விஷ்ணு ஸ்மிருதி
செல்வத்தைப்போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை. உயர்ந்த கல்விபோல் துணையாக இருப்பது வேறில்லை. வறுமைபோல் துன்பமானது வேறில்லை. ""இல்லை'' என்று சொல்லாமல் கொடுப்பதைப் போன்று உயர்ந்தது வேறு இல்லை.
நான்மணிக்கடிகை, 32
சான்றோர்களுக்கும், சான்றோர் அல்லாதவர்களுக்கும் தங்களது இயல்புகள் எப்போதும் குறைவதில்லை. வெல்லத்தை யார் தின்றாலும் கசக்காது. தேவரே தின்றாலும் வேப்பங்காய் கசக்கும். நல்லவர்கள், தீயவர்கள், அவரவர் இயல்புகள் மாறாது.
நாலடியார், 112
இறைவன் திருநாமத்தை நெஞ்சில் ஒரு விநாடி நினைத்தாலும் போதும். அது அறுபத்தெட்டுப் புண்ணிய ஷேத்திரங்க ளுக்கும் யாத்திரை சென்று வருவதற்குச் சமமாகும்.
மகான் கபீர்தாசர்
கற்பூரம் தன்னைக் கரைத்துக்கொண்டு ஒளியைத் தருகிறது. ஊதுபத்தியும் தன்னை அழித்துக்கொண்டே நறுமணம் தருகிறது. ஆன்மாவை மூடியுள்ள ஆணவமும் இவ்வாறு கரைந்து அழிந்தால்தான் பரம்பொருளாகிய இறைவனை நாம் அனுபூதியில் உணர முடியும்.
இந்து மதம்
சாஸ்திரம் விதிக்கும் நல்ல கர்மங்களைப் பற்றின்றிச் செய்வதால் பாவம் நீங்கி மனம் பரிசுத்தமடையும். அப்போது ஆத்மஞானம் தானே உள்ளத்தில்
உதிக்கும்.
விவேக சூடாமணி
தன் வீட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும் அல்லது நதிக்கரையில் இருந்தாலும், பிரம்மத்திடம் ஒன்றுபட்ட யோகி ஒருவர் எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறார். பாலைவனத்தில் நீர் ஊற்றைக் கண்டவர் போன்று அவர் பெரிதும் உவகைக் கொள்கிறார், ஒப்பற்ற இறைவனோடு ஒன்றுபடுகிறார்.
ஸ்ரீ நாராயண குரு
தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்