தேவியின் திருத்தலங்கள் 68: திருபுவனம் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி!

வாழ்வில் பயம் இல்லாத மனிதர்களே இல்லை. வாழ்தல் குறித்த கவலையே பயத்துக்குக் காரணம் ஆகிறது.
தேவியின் திருத்தலங்கள் 68: திருபுவனம் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி!

ரணே ஜித்வா தைத்யா னபஹ்ருத சிரஸ்ûத்ர கவசிபி:
நிவ்ருத்தைச் சண்டாம்ச த்ரிபுரஹர நிர்மால்ய விமுகை

- செளந்தர்யா லஹரி

வாழ்வில் பயம் இல்லாத மனிதர்களே இல்லை. வாழ்தல் குறித்த கவலையே பயத்துக்குக் காரணம் ஆகிறது. பல்வேறு விபரீத கற்பனைகள், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று புரியாத நிலையே, பயம் உருவாகக் காரணம். அடிப்படை எதிர்காலம் குறித்த கவலைதான்.

நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்தாலும் நம் எதிர்பார்ப்புகள் எதிர்காலத்தை நோக்கியே இருக்கிறது. அது நிறைவேறுவதில் தடங்கல் ஏற்பட்டால் அச்சம் ஏற்படுகிறது. கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம் என்று  அவைகளே பயத்திற்குக் காரணம் ஆகிறது.

அந்த உணர்வு தலை தூக்கும்போது நாம் கடவுளிடம் அடைக்கலம் ஆகிறோம். அந்த உணர்வை தடுக்க, தெய்வ நம்பிக்கையே துணை நிற்கிறது. நம் மதம் ஒவ்வொரு உணர்வுகளுக்கு, அதிலிருந்து மீண்டு வருவதற்கு, நாம் அடைக்கலம் புக ஒரு வழியைக் காட்டுகிறது.

இந்த தெய்வத்தை இறுக்கமாகப் பற்றிக் கொள், இந்த தெய்வம் பயம், இது திருமணம் நடக்க, இது குழந்தைப் பேற்றுக்கு என்று அது கை காட்டுகிறது. எல்லையற்ற பரம்பொருளின் அம்சம் அனைத்து தெய்வங்களும் என்றாலும், சிறப்பாக சில உருவங்கள் கூப்பிட்டதும் ஓடி வந்து நம்மை அரவணைக்கிறது.

உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன் உன்பாதம் சாட்சியாக என்கிறது காமாட்சி அம்மன் பதிகம்.

உன் நிழலே உறுதியாக இருக்க, வேறொன்று அறியேன் அன்னையே} என்கிறார் ஒரு கவிஞர். தன் குழந்தைக்கு ஒரு மனவேதனை என்றால் அம்பிகை உடனே 
அய்யனிடம் இறைஞ்சுகிறாள்.

என் குழந்தையின் பயத்தை நீக்கி அவனைக் காப்பாற்று  என்ற அன்னையின் வேண்டுகோளை ஏற்று இறைவன் ஓடோடி வருகிறார். தன் பக்தர்களின் நடுக்கத்தை நீக்க, அம்பிகையின் கோரிக்கையை ஏற்று சரபேஸ்வரராக திருபுவனம் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கிறார் அய்யன். அவருடன் இணைந்து அறம் வளர்க்கும் நாயகியாக காட்சி அளிக்கிறாள் அம்பிகை.
சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற மூன்று அசுரர்கள், பொன், வெள்ளி, இரும்புக் கோட்டை அமைத்து, தேவர்களை, உலக மக்களைத் துன்புறுத்தி வந்தனர். தன்னைச் சரணடைந்த தேவர்கள், முனிவர்களைக் காக்க, தன் புன்னகையின் மூலமே திரிபுரங்களையும் அழித்தார். அதனால் அனைவரின் வாழ்விலும் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது.

ஒரு பிஞ்சுக் குழந்தையை கொடூரமாகத் துன்புறுத்திய இரண்யனை அழிக்க, மகாவிஷ்ணு நரசிம்மராக அவதாரம் எடுத்தார். அவரின் ஆக்ரோஷத்தில் உலக உயிர்கள் நடுங்கின. அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று, ஈசன் சரபேஸ்வரராக வடிவெடுத்து வந்து அவர்களின் அச்சத்தை நீக்கினார். எனவே நடுக்கம் தீர்த்த பெருமான் என்று ஈசன் அழைக்கப்படுகிறார்.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரம்மாண்டமாய் காட்சி அளிக்கிறது. ஏழு நிலைகளைக் கொண்ட இந்தக் கோபுரம் முழுவதும், பல்வேறு புராண நிகழ்வுகள் சுதைச் சிற்பமாக விளங்குகிறது. கொடிமரம், பலி பீடம் கடந்து உள்ளே சென்றால் மூன்று நிலை கோபுரம் காணப்படுகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் அம்பாள் சந்நிதி இருக்கிறது. 
ஈசனுக்கு இடது புறம் தனிச் சந்நிதியில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தைத் தீர்த்த பின் அறம் வளர்க்கும் அன்னையாக அவள் இங்கு குடி கொண்டிருக்கிறாள். அறங்கள் வளர்ப்பதன் மூலம் தர்மம் செழிக்கவும், மக்கள் தவறு செய்வதிலிருந்து அவர்களைக் காக்கவும் அன்னை இங்கு எழுந்தருளி இருக்கிறாள்.

அம்பாள் ஒட்டியான பீடம் என்ற பத்ம பீடத்தில் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறாள். நான்கு கைகளுடன், அட்சர மாலை, தாமரைப் பூ வைத்து அபயம் அளிக்கும் கருணா மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறாள். அன்னையை வணங்கினால் கல்வி, ஆரோக்கியம், ஆயுள், மனம் விரும்பும் வாழ்வு, தம்பதியர் ஒற்றுமை, குழந்தைப் பேறு என்று பெண்கள் விரும்பும் அனைத்தும் அருள்வாள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பாவங்கள் நீங்கும்.

அம்பிகையை வணங்கினால் அனைத்து நலன்களையும் அருள்வாள் என்பது கண்கூடான நிஜம். தங்கள் கோரிக்கை நிறைவேறிய பக்தர்கள் அம்பிகைக்கு சேலையும், ஈசனுக்கு வஸ்திரமும் அணிவித்து, மாலைகள் சாற்றியும், அபிஷேக ஆராதனைகள் செய்தும் தங்கள் நன்றியைத் தெரிவிக்கிறார்கள். ஆலயத்தின் கருவறை விமானம் சச்சிதானந்த விமானம் எனப்படுகிறது. அமைதியும், ஆனந்தத்தையும் அளிக்கும். போர் வெற்றிகளைக் கொண்டாட, மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய கோயில்.  இங்குள்ள சிற்பங்கள் கலை அழகு நிரம்பியதாக உள்ளது.

பங்குனி மாதம் பிரம்மோற்சவம் பதினைந்து நாட்கள் வெகு விமர்சிகையாகக் கொண்டாடப் படுகிறது. அம்பிகை கொலுவிருக்கும் நவராத்திரியும், பெüர்ணமி, திரு விளக்கு பூஜைகளும் இங்கு சிறப்பு. இங்குள்ள அய்யனையும், அன்னையையும் வணங்கினால் தீராத நோய்கள் தீரும்.துன்பங்கள், துயரங்கள், தீவினைகள் அகலும்.

வில்வம் தல விருட்சமாக இருக்கிறது. முக்கிய தீர்த்தமாக சரபேஸ்வரர் தீர்த்தம் விளங்குகிறது. 

சோழர் கால கட்டடக் கலைக்கு உதாரணமாக, தஞ்சை பெரிய கோயில், தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம், திருபுவனம் கோயில்களையே குறிப்பிடுகிறார்கள். 

வரகுண பாண்டியன் என்ற மன்னன் போருக்குச் செல்லும்போது குதிரை வேகமாகச் செல்கிறது. அதை அடக்குவதற்குள் விதிப்பயன் காரணமாக ஒரு அந்தணன் அதன் காலில் மிதி பட்டு இறந்து விடுகிறான். அந்தணன் ஆவி பிரம்மஹத்தியாக மன்னனைப் பிடித்துக் கொள்கிறது.

திருவிடை மருதூர் சென்று தன் தோஷத்தை நீக்கிக் கொண்டாலும் அவனுக்குள் ஏற்பட்ட பயம், நடுக்கம் நீங்கவில்லை.திருபுவனம் வந்த மன்னனின் நடுக்கத்தை ஈசன் நீக்கியதால் அவர் நடுக்கம் தீர்த்த பெருமான் என்றும் அழைக்கப் படுகிறார். அம்பிகையின் பல்வேறு வடிவங்கள் சரபேஸ்வரரின் உருவில் உள்ளது. அம்பிகையே காளி, துர்க்கை. அவளே பயம் போக்கும் பிரத்யங்கரா.

ஈசன் யாழி முகமும், மனித உடம்பும் எடுக்க, எட்டுக் கால்கள், நான்கு கைகளுடன் காட்சி அளிக்கிறார். அதில் ஒரு இறக்கை பிரத்யங்கரா என்ற பத்ரகாளியாகவும், ஒரு இறக்கை சூலினி என்ற துர்க்கையாகவும் உருவெடுத்து இறைவனுடன் இனைந்து பக்தர்களின் பயத்தைப் போக்குகிறாள்.

சிவசக்தி ரூபம் என்பதால் ஒருவரில் மற்றவர் ஐக்கியம். ஒருவரை வழி பட்டாலே, மற்றொருவரை வழிபட்ட பலன் நமக்குக் கிடைத்து விடுகிறது. சரபேஸ்வரர் ரூபத்தில் எல்லாத் தெய்வங்களும் இருப்பதால் அவரை வணங்கினாலே அனைத்து தெய்வங்களை வணங்கிய பலன் கிடைத்து விடுகிறது.

பிட்சாடனர். தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சந்நிதிகளும் தனித் தனியே உள்ளது. இங்கு இறைவன் இறைவிக்கு உரிய எல்லா தினங்களும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

பிரும்மாண்டமாகக் காட்சி தரும் சரபேஸ்வர், எதிரில் அமைதியும், சாந்தமும் தவழ அம்பிகை நின்றிருக்கிறாள். தன் கடைக்கண் பார்வையால், தன் பக்தர்களின் பயங்களை ஈசனிடம் தெரிவிக்கிறாள். தன் சொல் கேட்டு உடனுக்குடன் தன் குழந்தைகளின் பயங்களைப் போக்கும் கணவனை நினைத்து, பெருமிதமும், மந்தகாசமும் அவள் முகத்தில் புன்னகையாக விரிந்திருக்கிறது.

"காத்துக் கிடந்தேன் உன் கடைவிழி பார்வைக்கு, 
                    கடினமான தருணங்களைக்
கடந்து வந்தேன் உன் கருணையால், பூத்து வந்தேன் 
                    புவனம் முழுவதும் 
உன் புன்னகை சிந்தும் எழில் வதனம் கண்டு, 
                   மீட்டிங்கே வந்தென்னை 
காப்பாய் உன் அருட் கரங்களால் 
                   என்னை அனைத்தே'
- என்றே பக்தர்கள் வேண்டுகிறார்கள்.

அவளின் பாதங்களை அடி பணியவே மனிதர்கள் மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து பூமிக்கு வருகிறார்கள்.

"சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னி வைக்க 
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியமற்ற 
 உறக்கம் தர வந்துடம்போடு உயிர் உறவற்றறிவு
மறக்கும் பொழுதென்முன்னே வரல் வேண்டுமே வருந்தியுமே'.

என்கிறார் அபிராமி பட்டர்.

மனிதர்கள் வஞ்சகமே ஊற்று எடுக்கும் கிணறாக இருக்கிறார்கள். எனவேதான் துன்பக் கடலில் மூழ்கி, வறுமைக்கு இடமாகி, மனதை வருத்தும், கர்ம வினைகளுக்கு இருப்பிடமாகிறார்கள். அதனால் பலவித நோய்கள், தோல்விகள், துன்பம், என்று உழன்று அதன் காரணமான பயத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.

இது அகல நம் மனதை தெய்வத்தின் பக்கம் திருப்ப வேண்டும். அந்த நினைவோடு, இருந்தால் அவளே நம் மனதில் அமர்ந்து எது நல்லது? எது கேட்டது என்று உணர்த்துவாள். அவள் நினைவோடு இருந்தால் தவறு செய்யவோ, பாவம் செய்யவோ நமக்குத் தோணாது. அந்த எண்ணத்தையும் அவளே தருவாள்.

மரணம் என்ற ஒன்றே அதிக பயம் தருவது. அம்பிகையின் நினைவு மட்டுமே அதைப் போக்க வல்லது. எனவே எப்போதும் அவள் திருவடிகளைச் சிந்தையில் வைத்திருந்தால் அவள் எப்போதும் துணை நிற்பாள் என்பது சத்தியம்.  
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com