எல்லையில்லா பேரழகன்!

ராமன் இலங்கைப் போருக்கு புறப்பட்டுச் சென்ற பாதையில் தில்லைவனம் ஒன்று குறுக்கிடவும் அதனில் ஒரு பர்ணசாலை தெரிய சற்று தாமதித்தான்.
எல்லையில்லா பேரழகன்!

ராமன் இலங்கைப் போருக்கு புறப்பட்டுச் சென்ற பாதையில் தில்லைவனம் ஒன்று குறுக்கிடவும் அதனில் ஒரு பர்ணசாலை தெரிய சற்று தாமதித்தான். உள்ளிருந்து  தகவல் அறிந்த பரத்வாஜ முனிவர் அவசரமாக நடந்து வந்தார். 

ராமனை நெருங்கி தன் பர்ணசாலையில் சிறிது தங்கி ஒருவேளை உணவுண்டு செல்ல கேட்டார். ராமன் தன் நோக்கம் அவசரமானதாக இருப்பதால்  இயலாத சூழலை விளக்கி வென்று வரும்போது வருவதாகத் தெரிவித்தான். அதன்படி ராவணனை வென்று சீதாராமன் விஜயராமனாக  திரும்பும் போது பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் சிறிது தங்கி புறப்பட்டதாக  வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த இடம்  தில்லைமரக் காடாகும். ராமனும் சீதையும் தங்கி ராமன் சிவபூஜை செய்து சென்ற இடம் பரத்வாஜ  முனிவர்  ஆசிரமம் இருந்த பகுதி வளாகம் என வழங்கப்பட்டு இன்று தில்லைவிளாகம் என மருவி வழங்கப்படுகிறது.  

கட்டமுது: ராமன் அங்கிருந்த அனுமனை அழைத்து தன் சகோதரன் பரதன் சிதை மூட்டி அதனில் இறங்க ஆயுத்தமாகி வருவதாக தகவல்கள் வருகின்றன. அதன் காரணமாக நீ கடுகிச் சென்று நாங்கள் வரும் தகவல்களை முன்கூட்டி தெரிவிப்பாய் எனக் கூறினான். அனுமன் கிளம்ப ஆயுத்தப்பட  சீதை தன் கணவணின் நோக்கம் நிறைவேற வேண்டும். உணவுக்காகக் கூட அனுமன் எங்கும் தாமதிக்கக்கூடாது என நினைத்து உணவு தயார் செய்து அதனைக் கட்டு அமுதாக்கி  அனுமனிடம் கொடுத்தனுப்பினாளாம் ஆதனால் அனுமன் விரைந்து சென்று பரதனிடம் தகவலைச் சொல்லி  ராமனின் எண்ணம் நிறைவேற வழி செய்தானாம்.

ராமன் பூஜை செய்த தலம்: ராமன் தில்லை வனத்தில்  வளாகத்தில் தங்கியதன் காரணமாக பக்தர்கள் அவ்விடத்தில் ஒரு கோயில் அமைத்து வழிபட்டனர். நாளடைவில் ராமன் சிவபூஜை செய்து வழிபட்ட சிவன் கோயிலும் ராமன் கோயிலும் மண்மூடிப் போயிற்று.  ஆனால் தலைமுறை தலைமுறையாக அந்தப்பகுதி கோயில்மேடு எனவும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.  

கோயில் பணி துவக்கம்
 1860}ஆம் ஆண்டளவில்  வேளூர்தேவர் எனும் ராமபக்தர் கனவில் ராமர் மடம் ஒன்று  கட்டச்சொல்லி உத்தரவாகியது.   பலரையும் கலந்து ஆலோசித்து, விவரம் பெற்று கோயில்மேடு என்னுமிடத்தில்  கோயில் கட்ட முடிவு செய்து   சிறிய சந்நிதி மட்டும் கட்ட முடிவு செய்து இடம் தேர்வு செய்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார்.

பூதேவி வெளிக்கொணர்ந்த விக்கிரகம்: தேர்வு செய்யப்பட்ட இடத்தில்  அஸ்திவாரம் தோண்ட  தொடக்கத்தில்  செங்கற்கள் தெரிந்தன. மேலும் சிறிது  தோண்டியதும் ஒரு கோயிலே சிதைந்து புதைந்து கிடப்பதைக் கண்டார். 1862} இல் சிறியதாக மண்டபம் போன்ற கோயில் ஒன்றை எழுப்பினார். மேலும் பணி தொடரும்போது அதே ஆண்டு கார்த்திகை மாதம் 12}ஆம் தேதி 10 அழகான பஞ்சலோக விக்கிரகங்கள்  பூமாதேவியிடமிருந்து  வெளிவந்தன. 

பூமியிலிருந்து வெளிப்பட்ட கம்பீரமான சுமார் 5 அடி உயரமுள்ள  "ஸ்ரீ வீர கோதண்டராமர்'அவருக்கு ஏற்ற வில் மற்றும் ஸ்ரீராமசரம், இலக்குவன், சீதை, அனுமன், செல்வர், சக்கரத்தாழ்வார், ருக்மணி சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணர், சந்தான கிருஷ்ணன், ஆகிய விக்கிரகங்கள்  வெளிவந்தன. அந்தத் திருமேனிகளை  எழுந்தருள்வித்து  வழிபாடு  துவங்கினர். ராமனின் பிரும்மாண்டம் மற்றும் பரிவாரங்கள் மக்களிடம் எழுச்சியை உண்டாக்க 1905}க்குப் பின்னர் கோயில் விரிவாக்கப்பணி துவங்கி 1913}இல் முழு அளவில் சம்ப்ரோக்ஷ்ணம் நடந்தது. அப்போது பூமியிலிருந்து வந்த செப்பு விக்கிரகங்களை மூலஸ்தானத்தில் கருவறை தெய்வங்களாக  பிரதிஷ்டை செய்து சுமார் 2  அடி உயரமுள்ள ராமர் வகை விக்ரகங்கள்  தயார் செய்து உற்சவராக பயன்படுத்தத் துவங்கினர்.

விரிந்த கோயில்: கிழக்கு நோக்கியுள்ள  இக்கோயிலில் கொடிமரம் பெரிய திருவடி கருடாழ்வார், அடங்கிய வெளிச்சுற்று அமைந்துள்ளது.    சிலாவிக்கிரகம் இல்லாத செப்பு விக்கிரகமே வழிபாட்டில் கருவறை உள்ள ராமர் கோயில் இதுவாகும். 

தீர்த்தம்: பின்புறம்  ராம தீர்த்தம், தெற்கில் சீதா தீர்த்தம், வடக்கில் அனுமன்  தீர்த்தம் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் தை, ஆடி அமாவாசைகளில் பெருந்திரளாக பக்தர்கள் புனித நீராடி பலன் பெறுகின்றனர். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

சிவனுடனுறை வீரகோதண்டராமர்: நடராஜருக்கும் இந்தக் கோயிலில் சந்நிதி உள்ளது. பழைமையான  இத்தில்லை விளாகம் கோயிலில் சிவனையும், பெருமாளை யும் ஒருசேர தரிசிக்கலாம். பகை விலக, புத்திர தோஷம் நீங்க தில்லைவிளாகம் வீரகோதண்டராமரை வணங்குகின்றனர்.

 பரத்வாஜர் ஆசிரமத்திலிருந்து பரதனுக்கு தகவல் சொல்ல அனுமன் பறந்து சென்றதன் காரண அடிப்படையில் இங்கு ஒரு வித்தியாசமான கட்டமுது பிரார்த்தனை நடைபெறுகிறது. தான் வந்து கொண்டிருக்கின்றேன் என்ற  தகவல் சொல்ல   அனுமன் கைகட்டி வாய் பொத்திச்  செல்லும்போது தயிர்சாதம் கட்டி எடுத்துச் சென்றதாகவும் அதனால் எல்லாம் நன்மையில் முடிந்ததாகவும் மக்கள் நம்பிக்கை. இங்கே பிரார்த்தனைசெய்து கொள்பவர்கள்  அது  நிறைவேற  வேண்டிக் கொண்டு அனுமன் கையில் கட்டமுது கட்டி வேண்டிக் கொள்ளுகிறார்கள். பிரார்த்தனையும்  நிறைவேறுகிறது உரிய பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

திருப்பெயர்கள்: பூமியிலிருந்து வந்த அழகான  விக்கிரகமே கருவறைத் தெய்வமாக இருப்பதால் வீரகோதண்டராமர் என்பது போக "வில்லேந்தி வந்த வீரன்' எனவும் "எல்லையில் பேரழகன்' எனவும் காரணப்பெயரால்  தில்லைவிளாக ராமர் போற்றி வழிபடப்படுகிறார். ராம நவமி, அனுமத்ஜெயந்தி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, திருக்கார்த்திகை, நவராத்திரி வைகுண்ட ஏகாதசி, தை, ஆடி அமாவாசை போன்ற திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இருவகை வழிபாடுகள்: பாரத நாட்டில் வரலாற்றின் அடிப்படையில் 2 வகையாக ஸ்ரீராம நவமி கொண்டாடப்படுகிறது. ராமன் பிறக்கும் ஸ்ரீராம நவமிக்கு முன்பாக  உற்சவம்  துவங்கி   ஸ்ரீராமநவமியை இறுதிநாளாக கொண்டு அவ்வாண்டுக்கான உற்சவம் நடைபெறும்.  இது "கர்ப்போற்சவம்' எனப்படும். அதேபோல்  ஸ்ரீராமநவமியை முதல்நாளாகக் கொண்டு அடுத்துவரும் 10 நாள்களை பிரம்மோற்சவம் நடக்கும்.  இவ்வகை  கோயில்கள் "ஜனனோற்சவம்' கோயில்கள்  என அழைப்பர்.

இத்திருக்கோயிலில் ஜனனோற்சவ முறையில்  இவ்வாண்டு  ஸ்ரீராமநவமியான ஏப்ரல் 10}ஆம் தேதி கொடியேறி 11 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. தினமும் திருமஞ்சனம் நடந்து வாகனப்புறப்பாடு நடைபெறுகிறது.  15}ஆம்தேதி திருக்கல்யாணமும், 18}ஆம் தேதி திருத்தேரும்,19}ஆம் தேதி பட்டாபிஷேகமும், 20-ஆம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது. 
தில்லைவிளாகம் கோதண்டராமர் திருக்கோயில் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் முத்துப்பேட்டையிலிருந்து  7 கிலோ மீட்டர் தொலைவில்  அமைந்துள்ளது. திருக்கோயில் தரிசன நேரம் காலை,8.30}12.30 மாலை 5.00} 8.15

மேலும் விவரங்களுக்கு: 8056856894 

கட்டுரை , படம் - இரா. இரகுநாதன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com