பொருநை போற்றுதும்! - 190

வெள்ளையத் தேவரைத் தொடர்ந்து அவருடைய மகன் வலங்காப்புலித் தேவர் ஆட்சி பெற்றார்.
பொருநை போற்றுதும்!
பொருநை போற்றுதும்!

வெள்ளையத் தேவரைத் தொடர்ந்து அவருடைய மகன் வலங்காப்புலித் தேவர் ஆட்சி பெற்றார். தொடக்கத்திலிருந்தே தவறான நடவடிக்கைகளுக்காகப் பெயர் பெற்றார். கப்பம் கட்டுவதில் ஏராளமான பிரச்னைகள். இவருடைய காலத்தில், பேஷ்கஷ் முறையாகச் செலுத்தப்படவில்லை என்பதற்காக, எட்டு முறை, இந்தப் பாளையத்தின் சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது மட்டுமில்லை; அரசாங்கக் கருவூலக் கொள்ளையிலும் வலங்காப்புலித் தேவர் (இவருடைய பெயரை இப்படித்தான் பிரிட்டிஷார் பதிவு செய்கின்றனர்; ஒருவேளை, வணங்காப்புலி என்றிருந்திருக்கக்கூடுமோ?) சம்பந்தப்பட்டார். 1814}இல், தென்காசிக் கருவூலத்திலிருந்து 20000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. நேரடியாகச் சிக்கவில்லையாயினும், உடனிருந்தவர்களின் சாட்சியப்படியும், அடுத்தடுத்து நேர்ந்த சில மரணங்களின் அடிப்படையிலும், வலங்காப்புலியிடமே இந்தப் பணம் சேர்ந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதன்பிறகு, சொக்கம்பட்டிப் பாளையம் தலைதூக்கவே இல்லை. 

சொக்கம்பட்டிக்கு அருகில், செண்பகராமப்பேரி என்றொரு சிற்றூர் இருந்துள்ளது. இங்கொரு கிராமம் இருந்திருக்கக்கூடுமென்பது, ஒருபக்கம் சிவன் கோயிலும் இன்னொரு பக்கம் திருமால் கோயிலுமாக இருந்த சிதிலங்களிலிருந்து ஊகிக்கப்பட்டது. இந்தச் சிற்றூரும் இதன் சிதிலங்களும் இப்போதும் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. 
வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டியின் வரலாறு இது மட்டுமன்று, இன்னமும் நெடியது!

14}ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், செம்பியன் நாட்டைச் சேர்ந்த சில வீரர்கள், தென்காசியை அடைந்தார்கள். செம்பியன் நாட்டைத் (அதுதான், சோழ நாடு; சோழனுக்குச் செம்பியன் என்றுமொரு பெயர் உண்டு) துறந்து வந்தார்கள். இவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நேரடி அரச வாரிசாக இல்லாமல், துணைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சோழ அரசனோடு ஏதோ முரண்பட்டு வந்தவர்கள் போலும்! 

இவர்களின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்த தென்காசிக் குலசேகரப் பாண்டிய மன்னர், "செம்பியப் புலி' என்னும் பட்டத்தை வழங்கினார். காலப்போக்கில், இதுவே "செம்புலி' என்று மாறியதாகத் தெரிகிறது. 

வடகரைப் பகுதி இவர்களுக்கு வழங்கப்பட்டது. 15} ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில், செம்புலி சிவனணைஞ்சாத் தேவர், முதல் பட்டமாக வடகரையை ஆண்டுள்ளார். தொடர்ந்து, 1750}கள் வரை, இவ்வாறே இவர்களின் வம்சாவளி தொடர்ந்துள்ளது. 

இந்தப் பகுதியின் அருகில் சேரநாடு (மலையாள நாடு), வேணாடு, திருவிதாங்கூர் ஆகிய அரசுகள் இருந்தபடியால், செம்புலிகளுக்கும் அண்டை நாட்டினருக்கும் அவ்வப்போது உரசல்களும் போர்களும் நிகழ்ந்துள்ளன. 

1750-களில்தான், கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்ப்பதில், வடகரை பாளையத்தார் முன்னணியில் நின்றனர். திருக்குற்றாலநாதர் திருக்கோயிலுக்கு, இப்பரம்பரையினர் ஏராளமான திருப்பணிகளைச் செய்துள்ளனர். சித்ரசபையை எங்கள் சின்னணைஞ்சாத் தேவன் செப்போடு வேய்ந்த முன்னாள் என்று இந்த வம்சத்தின் பெருமையைக் குறத்தியின் வாயிலாக வெளிப்படுத்துகிறார் குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூட ராசப்பக் கவிராயர். இவருமேகூட, வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி ஜமீனின் ஆஸ்தானப் புலவராக இருந்தவர். 

தென்காசிக்குக் கிழக்காக, பட்டாக்குறிச்சி, சுந்தரபாண்டியபுரம், சுரண்டை போன்ற ஊர்கள். சுரண்டையும்கூட ஒருகாலத்தில் பாளையமாக இருந்துள்ளது. 1874}வாக்கில், ஊற்றுமலை ஜமீன்தார், இதனை வாங்கித் தம்முடைய ஜமீனோடு சேர்த்துவிட, தனிப் பாளையமாக இது இருந்த கதை பலருக்கும் மறந்தே போனது. ஜனவரி முதல் மார்ச் வரை, பலவகையான வாத்துகளும் கிளுவைகளும் இப்பகுதி குளங்களிலும் நீர்நிலைகளிலும் களித்து நீந்தியதை, பிரிட்டிஷ் ஆசிரி யர்கள் நிரம்பவே பதிவு செய்கிறார்கள். 

சுந்தரபாண்டியபுரம், சுரண்டைக்குச் சற்றே தென்கிழக்காகவும், பாவூர்ச்சத்திரம், கீழப்பாவூருக்கு வடகிழக்காகவும், மேலைப்பாவூருக்கு நேர் கிழக்காகவும் இருக்கிறது வெள்ளக்கால். 
கால்நடை மருத்துவரும் தமிழ்ப் பேரறிஞரும் பற்பல நூல்களை யாத்தவரும் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவருமான ராவ் சாஹிப் வெள்ளக்கால் பழனியப்ப சுப்பிரமணிய முதலியார் அவர்களின் சொந்த ஊர். சுற்றிலும் அடர்த்தியாக மரங்கள் அமைந்ததால், இவ்வூர் குளுகுளுவென்று இருந்ததாம். 

மேற்குமலைத் தொடர்ச்சியின் இடையிலுள்ள கடவு, சாரல் காற்றை இங்கு தூவும்.  இவற்றால், இவ்வூருக்கு வந்த தமிழ்த் தாத்தா உ வே சா அவர்கள், "இது மலையாளம் போன்றுள்ளதே' என்று சிலாகித்தாராம். 

குட்டி மலையாளம் என்றே வெள்ளக்காலை அழைப்பதுண்டு. வேளாண்மையும் சடம்பு, நார் ஆகியவற்றால் செய்யப்படும் கைத்தொழிலும் பிரதானமாக இருக்க, பத்து ஏக்கர் நத்தம் (குடியிருப்புப் பகுதிக்கு இப்பெயர்) மட்டுமே கொண்டு, மொத்த மக்கட்தொகை  882ஆக இருந்த வெள்ளக்காலைப் பற்றி, 1956 } 57 வாக்கில், கலைமகள் இதழில் கட்டுரை எழுதியிருக்கிறார் வெள்ளக்கால் முதலியார். இக்கட்டுரையின் இரண்டு தகவல்கள் நம்முடைய உள்ளங்களை ஈர்க்கின்றன: 

அ. புழைக்கடைகளில் காவல் செய்யப்படவில்லையானாலும், பாத்திரம் பண்டங்களும் வேட்டி சேலைகள் முதலியவைகளும் போட்டது போட்டபடியே கிடக்கின்றன; களவு போவதில்லை;    
ஆ. ஊரில் வடிகால் வசதியும், மண்ணடி வடிகால் வசதியும் நிரம்பவே உள்ளன. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னரே, சீராக இருந்த வசதிகள்; சீராக இருந்த மனங்கள்! சிற்றாற்றாள் சிரிக்கிறாளோ? 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com