கேடில்லா வாழ்வளிக்கும் கேடி!

தன வணிகன் சமுத்திரகுப்தன் . தீயவழியில் தன் செல்வம் அனைத்தையும்  இழந்து பிச்சைக்காரனானான். 
கேடில்லா வாழ்வளிக்கும் கேடி!

தன வணிகன் சமுத்திரகுப்தன் . தீயவழியில் தன் செல்வம் அனைத்தையும்  இழந்து பிச்சைக்காரனானான். 
மீண்டும் இழந்தவற்றைப் பெற வேண்டும் என்ற நிலையில் பலநாடு, ஊர்கள் சுற்றி கைப்பொருளும் இழந்து பிச்சை கூட கிடைக்காத நிலையில் அவ்வூர் கோயிலைச் சுற்றியுள்ள   வீதிகளில் 3  முறை சுற்றிச் சுற்றி வந்தான். எங்கும் எதுவும் கிடைக்காத நிலையில் மயக்க நிலையில் கால்கள் தடுமாற  
வந்தான்.
கோயில்மணி ஒலித்ததும்  அங்கு பிரசாதம் கிடைக்குமென  எண்ணி உள்ளே வந்து கொடிமரத்தினருகே  நிற்கக்கூட முடியாமல் மயங்கி வீழ்ந்தான். 
அவன் பிச்சைக்காரனாக 3 முறை  கேடிலியப்பரை  வலம் வந்து கொடிமரத்தில் விழுந்து வணங்கினான் என்றே கருதி, கருவறையிலிருந்த இறைவன் தன்னெதிரில் இருந்த  குபேரனை அழைத்து கீழே விழுந்தவனுக்கு  மீண்டும் வேண்டிய செல்வம் அனைத்தும் அருளக் கூறினார் என்பது தொன்மையான புராண வரலாறாகும்.
திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பத்மாவதித் தாயாருடனான தன் திருமணத்திற்காக ஆயிரம் கோடி வராகன் பொற்காசு குபேரனிடமிருந்து  கடனாக பெற்றார். அதனை அடைக்க  தனக்கு வந்த காணிக்கையை எல்லாம் வட்டியாக இன்றுவரை குபேரனுக்குச் செலுத்திக் கொண்டிருக்கிறார் எனப்படுகிறது. பெருமாளுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு குபேரனுக்கு செல்வம் வந்த வரலாறும் உண்டு.
தன் செல்வங்கள் அனைத்தும் இழந்த ஸ்ரீ குபேர பகவான் கேடிலியப்பரை தவமியற்றி வழிபட்டான்.  ஒரு அட்சய திருதியை திருநாளில் இறைவன் இவரை வடதிசைக்கு அதிபதியாக்கி நவநிதிகளையும் அளித்து அழகாபுரி எனும் குபேரபுரியை ஆளும் உரிமையையும்  வழங்கியவர் கீழ்வேளூரில் குடியிருக்கும்  கேடிலியப்பர் என்ற பெயரையுடைய ஸ்ரீ அட்சலிங்க சுவாமியாகும் .
தேவாசுரர்கள்  பாற்கடலைக் கடைந்தபோது அமிர்த கலசம் வந்தது. அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி அமிர்தம் இரண்டாகப் பிரிந்து விழுந்தது. அதன் ஒரு பகுதி  இப்பாரத புண்ணிய பூமியின் வடக்கிலும் தெற்கிலும் விழுந்து இலந்தை வனங்களாக உருவெடுத்தன. (இலந்தையை  பத்ரி என்பர்) வட இந்தியாவில் உருவான இலந்தை வனம் உத்தர பத்ரி காரண்யம் என திருமால் உறையுமிடமாகவும், தமிழகத்தில் உருவான  இலந்தை வனம் தக்ஷிணபத்ரிகாரண்யம் எனப்பட்ட இந்த வனமே திருக்கீழ்வேளூர் எனப்படுகிறது.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின்தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரையில் அமைந்த 84-ஆவது திருத்தலமாகும். திருஞானசம்பந்தர் கீழ்வேளூர் திருத்தலத்தை பெருந்திருக்கோயில் என்று பாடியுள்ளார். 
சூரபத்மர்களை சம்ஹாரம் செய்ததால்  திருச்செந்திலாண்டவர்க்கு  ஏற்பட்ட வீரஹத்திதோஷம் நீங்க, பாலசுப்ரமண்யராக தவமியற்றி வழிபட்ட   தலமாகும். 
தேவருலகில் முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் 'ஞானஸ்கந்தபுரி' மேல்வேளூர் எனப்படுகிறது. அவர் தவமியற்றிய இத்தலம் 'கீழ்வேளூர்' எனப்படுகிறது.
யுகம் முடிவில்  மகாபிரளயம் ஏற்பட்டு, உலகம்  நீர் சூழ்ந்து கிடக்கும்போது  சிவபெருமான்   இங்கிருந்து மீண்டும் உயிர்களைப் படைக்கத் தொடங்கினார். தனது சிவ வழிபாடு தடைப்படக் கூடாதென  ஸ்ரீமார்க்கண்டேய முனிவர் இங்கு  தங்கி   விடாது தொடர்ந்து நடத்தி முடித்தார்.
குற்றமிலாதவன்:  மூலவர்  அட்சயலிங்கம் என வணங்கப்படும் சிவலிங்க வடிவாகும்  .  அப்பர், "கீழ்வேளூராங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே!" என்கிறார். "க்ஷயம்' என்றால் கேடு. "அக்ஷயம்' என்றால் கேடில்லாதது.  இத்தலத்தில் இறைவர் அஷ்டவசுக்கள், நவநிதிகளும் அருளும்  அக்ஷய பாத்திரத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். தானும் குறைவில்லாதவர். தன்னை வணங்கும்  அனைத்து ஜீவராசிகளுக்கும் குறைதீர்த்து காப்பவர். அருள்மிகு கேடிலியப்பர் எனத் தமிழிலும், ஸ்ரீ அக்ஷயலிங்க சுவாமி என வடமொழியிலும் வணங்கப்படுகிறார்.
இறைவன் எழுந்தருளியுள்ள சந்நிதி 5 நிலைகள் கொண்ட கற்றளியாகும்.  . ஜாதகத்தில் ஐந்தாமிடமாகிய பூர்வபுண்ணிய ஸ்தான தோஷமிருப்பவர்கள் அட்சயலிங்கசுவாமியை வழிபட்டால்   சித்திரகுப்த சிரவணர்களால் நீக்கம் பெற்று    நற்கதி பேறு கிடைக்கும் .
அம்பிகை வனமுலைநாயகி என்னும் சுந்தரகுஜாம்பிகையாகும். ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் தனது  கீர்த்தனையில் "பதரிவன மூல நாயகி'என்று குறிக்கிறார். குழந்தைச் செல்வம் வேண்டுவோர் , மணமகன் ,மணமகள் வேண்டுவோர் இவளிடம் வேண்டுதல் செய்து பலன் பெறுகின்றனர்.
 விநாயகர் "பதரிவிநாயகர்' எனவும், இளம்பிள்ளை முருகப்பெருமான் கட்டுமலையின் மீதே பத்து திருக்கரங்களுடன் அகத்தியருக்காகக் கால்மாறி ஆடிய நடனராசன்  எழுந்தருளியுள்ளார் .  இந்திரனின் சாபம் தீர்த்த சித்ர கூடம் என்னும் கட்டுமலை மீது எழுந்தருளியுள்ள  இறைவன் தேவ நாயகராக காட்சியருளுகிறார்.  
திருக்கோயில் அமைப்பு: சோழ சக்கரவர்த்தியான கோட்செங்கட்சோழன், "சிலந்திச்சோழன் எனப்பட்ட சோழமன்னன் எடுத்த மாடக்கோயிலாகும். நான்கு திசையிலும் வாயில்கள் அமைய கிழக்குத் திசையில் ஏழுநிலைகளுடன் இராஜகோபுரம்  திகழ்கிறது .  கட்டுமலை மீது சென்று  கேடிலியை தரிசிக்க 18 புராணங்களே 18 திருப்படிகளாகத் திகழ்கிறது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி  தீட்சிதர் இந்த அட்சயலிங்கப் பெருமானை "அக்ஷரஸ்வரூபோ' என்று பாடுகிறார். அதாவது இத்தல இறைவனே எழுத்துக்களின் (அக்ஷரங்களின்) வடிவமாக விளங்குபவர் என்று குறிப்பிடுகிறார். 
கல்வி, கேள்வி, இசை, வித்தை, பரதக்கலை உள்ளிட்டவைகளில் சிறப்புடன் திகழ வழிபட வேண்டிய திருத்தலம். இத்தலத்தில் ஞான குருவாய் விளங்கும் தென்முக கடவுள்  வீணாதர தெட்சிணாமூத்தியாக தரிசனம் தருகிறார்.
குபேரனுக்கு அருளியவர்: வடக்குப் பிரகாரத்தில், தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் அட்சயலிங்கப் பெருமானைத் தொழுதவண்ணம் நிற்கிறார்  ஸ்ரீ குபேர பகவான். 
ஒரு அட்சய திருதியை திருநாளில்  இங்கு வந்து கேடில்லா வாழ்வளிக்கும் கேடிலியப்பரை தவமியற்றி வழிபட்டதால்   இறைவன் இவரை வடதிசைக்கு அதிபதியாக்கி (சங்கநிதி, பதுமநிதி, கச்சநிதி, கற்பநிதி, நந்தநிதி, நீலநிதி, மகாநிதி, முகுந்தநிதி, மகாபத்மநிதி என்னும்) நவநிதிகளையும் அளித்து அளகாபுரி எனும் குபேரபுரியை ஆளும் அருளை வழங்கினார் என்பது வரலாறு.
சுகம்  அனைத்தும் தரும் கேடிலி: அட்சய திருதியையன்று கேடிலியப்பரையும் குபேரனையும் தரிசிக்க அனைத்து சுகங்களும் கிடைக்கும் . அன்றுவர முடியாதவர்கள் எந்த திருதியையிலும் சென்று பிரார்த்தனை செய்து பலன் பெறலாம்.
சாபம் நீங்கப்பெற்ற சந்திரன்: விநாயகப் பெருமானால் சாபம் பெற்ற சந்திரன் சாபம் நீங்க பொருட்டு,இங்கு வந்து சந்திர தீர்த்தம் உண்டாக்கி அட்சய திருதியை நன்னாளில்  அட்சயலிங்கப் பெருமானை வழிபட்டு  கேடுகள் நீங்கினார்.
அட்சய திருதியை: அட்சய திருதியைக்கு சிறப்பான இக்கோயிலில் அன்று   சிறப்பு வழிபாடுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 
வழக்கப்படி எதிர்வரும்  மே 3-ஆம் தேதி அக்ஷய திருதியை அன்று இத்திருக்கோயிலில் 8:00 மணிக்கு நவகலச பூஜை, 1008 சங்கு பூஜை  ஆகியவை துவங்கி, ஹோமம் நடைபெறும். 10 மணி அளவில் மஹாபிஷேகமும்,  11.00 மணியளவில்  பூர்ணாகுதி நடைபெற்று  அருள்மிகு அட்சயலிங்க சுவாமிக்கு இருபத்தொரு வகை பொருட்களால் அபிஷேகம் செய்து தொடர்ந்து 1008 சங்கு அபிஷேகம் -அலங்காரம்12 மணிக்கு மேல் பஞ்சமுகார்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, சோடச உபசாரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெறும்.
மாலை 7 மணிக்கு மகாலட்சுமி 
ஸ்ரீ குபேரர் ஆகியோருக்கு அபிஷேகம் நடந்து இரவு 8.00 மணிக்கு  லட்சுமி பூஜை தொடர்ந்து அக்ஷய குபேரருக்கு அலங்காரம் செய்து மகா தீபாராதனையைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்.  
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர் - நாகப்பட்டினம் தேசிய  நெடுஞ்சாலையில் 12 கி.மீ.இல் அமைந்திருக்கும்  தலம் கீழ்வேளூர். 
மேலும் தகவலுக்கு  - 04366296999; 9943171417
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com