நாகமான் - எலீசா

நாகமான் - எலீசா

சிரியா நாட்டில் நாகமான் என்றொரு படைத்தலைவன் மிகுந்த செல்வக்குடையவனாக இருந்தான். இறைவன் அவன் வழியாக சிரியா நாட்டிற்கு பல வெற்றிகளைக் கொடுத்திருந்தார். ஆனால் இந்த நாகமான் ஒரு தொழுநோயாளி. நாகமான் வீட்டில் இஸ்ரவேல் நாட்டின் சிறு பெண் அவன் மனைவிக்குப் பணிப்பெண்ணாக பணிவிடை செய்து வந்தாள். அவள் தன் எஜமானியிடம் நாகமானை சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் எலிசாவிடம் அனுப்பிவைத்தால் குணமடைவார் என்று தெரிவித்தாள். அவளும் தன் கணவன் நாகமானிடம் தெரிவிக்க, அவரும் ஒப்புக்கொண்டு சிரியா அரசனிடம் இஸ்ரவேல் அரசனுக்கு கடிதம் பெற்றுக்கொண்டு, வெள்ளி, பொன், விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை எடுத்துக்கொண்டு இஸ்ரவேல் அரண்மனையை அடைந்தான்.
இஸ்ரவேல் ராஜாவோ தொழு நோயைக் குணப்படுத்த நான் என்ன கடவுளா? என்று கேட்டு சினமடைந்தான். அப்பொழுது எலிசா நாகமானை தன்னிடம் அனுப்பும்படி வேண்டினான். அப்படியே நாகமான் தன் பரிவாரங்களுடன் எல்லா பொருள்களுடனே எலிசா வீட்டின் முன் வந்து நின்றான். அப்பொழுது எலிசா தன் பணியாளனை அனுப்பி, நாகமானை யோர்தான் நதியில் ஏழுதரம் மூழ்கி குளித்தெழுந்தால் தொழுநோய் நீங்கி சுத்தமாகும் என்று சொல்லச் சொன்னான்.(2 ராஜா.5:10) 
அதற்கு நாகமான் கடுஞ்சினம் கொண்டு சிரியாவில் தண்ணீர் இல்லாமலா இங்கு வந்தேன் என்று சொல்லி மிகுந்த கோபத்துடன் திரும்பிப்போனான். நாகமானின் ஊழியக்காரன் ஒருவன் அருகில் வந்து, எலிசா கடினமான பெரிய காரியங்களைச் செய்யச் சொல்லியிருந்தால் நீரும் சிரமேற்கொண்டு செய்திருப்பீர் அல்லவா? (ராஜா.5:13) இந்த அற்ப காரியத்தைச் செய்வதில் தடையென்ன? என்று வினவியதும் தன் தவறை உணர்ந்து நாகமான் யோர்தான் நதியில் ஏழுதரம் மூழ்கி எழுந்தபோது அவன் உடல் முழுவதும் தொழுநோய் நீங்கி, சிறு பிள்ளையின் உடலைப் போல மாறியதைக் கண்டு "இதோ இஸ்ரவேலில் இருக்கிற தேவனைத் தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்"என்று கூறி(2ராஜா.5:15)
இறைவனைப் புகழ்ந்து போற்றியபடி தன் நாடு திரும்பினான்.
நாகமான் எதிர்பார்த்து வந்தது இறைவாக்கினன் எலிசா தன் உடல் முழுவதும் கைகளினால் ஏதேனும் எண்ணெய்யைப் பூசி, இறைவனிடம் மன்றாடி பல மணிநேரம் போராடிய பின்னரே தனக்கு சுகம் கிடைக்கும் என்று எண்ணினார். ஆனால் இறைவனோ இறைவாக்கினர் வழியாக அன்றாடம் செய்யக்கூடிய, நீரில் குளித்து முழ்கி எழுந்தாலே போதும் என்ற அற்ப காரியத்தைக் கூறக்கேட்டதும் மனம் ஏற்க மறுக்கிறது. நாமும் கூட இவ்வாறே கடின செயல்களான நடைப்பயணமோ, உடலை வருத்திக்கொள்வதோ, ஓத்தல் முயற்சிகள் மேற்கொண்டுவிட்டாலோ இறைவனிடமிருந்து அற்புதங்களைப் பெற்றுவிடலாம் என்று எண்ணுகிறோம். 
ஆனால் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஆழ்ந்த இறைநம்பிக்கையும், சிறிய காரியங்களிலும்கூட கீழ்ப்படிய வேண்டும் என்பதே. ஏனெனில் அற்பகாரியங்களிலும்கூட அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வது இறைவனுக்கு மிகமிக எளிது. இறைவனை நம்புவோம். கீழ்ப்படிவோம். நோயற்ற சுகவாழ்வு வாழ்வோம்.! 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com