உலகின் இரண்டாவது பெரிய சிலை!

இந்தியா உலகுக்கு அளித்த மிகப் பெரிய கொடை ஆன்மிகம். இந்தியாவில் தோன்றிய ஆன்மிக குருக்களின்..
உலகின் இரண்டாவது பெரிய சிலை!


இந்தியா உலகுக்கு அளித்த மிகப் பெரிய கொடை ஆன்மிகம். இந்தியாவில் தோன்றிய ஆன்மிக குருக்களின் கருத்துகளை உலகெங்கும் உள்ளவர்கள் ஏற்றுக் கொண்டனர். அப்படித் தோன்றியவர்களில் வைணவ குருமார்களில் ஒருவரான ராமாநுஜர்.

அவருக்கு தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் ரூ.1,000 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாய் ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது உயரமான சிலை என்ற பெருமையைப் பெற உள்ளது இந்தச் சிலை! 

11-ஆம் நூற்றாண்டில் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்த மகான் ராமாநுஜர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர், உலகமெங்கும் பக்திமார்க்கமும், வைணவமும் பரவ பாடுபட்டார். வைணவ குருமார்களில் முக்கியமானவரான ராமாநுஜருக்கு 216 அடி உயர சிலை ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான ஷம்ஷாபாதில் 45 ஏக்கர் நிலப்பரப்புடைய வளாகத்தில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளது. 

ராமாநுஜர் இந்தப் பூமியில் 120 வருடங்கள் வாழ்ந்ததை நினைவுகூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. 

கருவறை அமைந்துள்ள உள் அறையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 13}ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். 

கருவறை தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . 

இச்சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான "பஞ்சலோக' சிலையாக நிறுவப்பட்டுள்ளது. ராமாநுஜர் சிற்பம் மேல் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமாநுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்கார்ந்த நிலையில் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப்பெரிய சிலையாக இருந்து வருகிறது.  

இதற்கடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய சிலை என்ற பெருமையை ராமாநுஜரின் 216 அடி உயர சிலை பெறவுள்ளது. சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், வைணவத்தின் 108 திவ்ய தேசங்கள், ஆழ்வார்கள், தமிழ்த் துறவிகளின் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள விஷ்ணு கோயில்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

இதே வளாகத்தில் "பத்ரா வேதி' எனப் பெயரிடப்பட்ட 54 அடி உயர அடித்தளக் கட்டடம், வேதங்களுக்கான எண்ம (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம், பண்டைய இந்திய நூல்கள் அடங்கிய நூலகம், ஒரு கல்விக் கூடம் ஆகியவற்றுடன் ஒரு திரையரங்கு போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

ராமாநுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 2014}ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது.  கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இப்பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், "சமத்துவத்துக்கான சிலை' என வர்ணிக்கப்படும் இச்சிலையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 5-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். முன்னதாக, பிப்ரவரி 2-ஆம் நாள் முதலே ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. 

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், புகழ்பெற்ற ஆன்மிக குரு சின்ன ஜீயர் சுவாமியுடன் இணைந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்றும் சிலையின் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. 

இதற்காக 144 யாக சாலைகளில்  1,035 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 108 திவ்ய தேசங்களின் பெருமாள் விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்ச்சிகள் தொடர்ந்து பிப். 14-ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிப். 8 மற்றும் 9}ஆம் தேதிகளில் நாடு முழுவதும் இருந்து 400 பீடாதிபதிகள், மடாதிபதிகள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். 13-ஆம் தேதி வரை யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன. 14-ஆம் தேதி பூர்ணாஹுதி நடைபெற உள்ளது. தினமும் 3 லட்சம் பேர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமாய் ஓங்கி உயர்ந்து  எழிலுற கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்ட ராமாநுஜரின் சிலை திறப்பு விழாவில் 8}ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, 9-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்  உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 15 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.

விழா நடைபெறும் நாள்களில் தினமும் காலை 6.30 முதல் 7.30 மணி வரை உலக நன்மைக்காக ஜெபம் நடைபெறும். காலை 8 மணி முதல் 12.30 மணி வரை ஹோமம் நடைபெறும்.  சுமார் 10 கோடி மகா மந்திரங்கள் உச்சரிக்கப்பட உள்ளன.

மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் சுமார் 5,000 வேத விற்பன்னர்கள் பங்கேற்று ஹோமங்களை நடத்த உள்ளனர்.

இந்த மாபெரும் விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள், ஆன்மிக பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஆர்.வேல்முருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com