Enable Javscript for better performance
கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே!

    By DIN  |   Published On : 25th February 2022 04:44 PM  |   Last Updated : 25th February 2022 04:44 PM  |  அ+அ அ-  |  

    KODIKA091705

     

    "ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அதன் பொருட்டு கர்வம் கொள்ளுதல் ஆகாது' என்ற கருத்தினைத் தெரிவிக்கும் தலபுராணத்தைப் பின்னணியாகக் கொண்டு திகழ்கிறது, திருக்கோடிகா என்று அழைக்கப்படும் திருக்கோடிக்காவல். 

    ஒரு சமயம் மூன்று கோடி, மந்திர தேவதைகளும் "சாயுஜ்ய' முக்தி (ஞான முக்தி) அடைவதற்கு தங்கள் மந்திர வலிமை ஒன்றே போதும் என்று தங்களை சந்திக்க வந்த துர்வாச மகரிஷியிடம் கர்வம் மேலோங்கக் கூறினர். ஆனால் மகரிஷியோ அவர்களிடம் "குருவிற்கு பணிவிடை செய்து, பிரம்ம ஞானம் பெற்று, பரமேஸ்வரன் அனுக்கிரகத்தில் மட்டும் தான் முக்தி சாத்தியமாகும்!' என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார். 

    அவரது கூற்றை மந்திர தேவதைகள் ஏற்றுக்கொள்ளாததால் மகரிஷியின் சாபத்திற்கு ஆளாயினர். சாபநிவர்த்தி வேண்டி மந்திர தேவதைகள் பல்வேறு தலங்களுக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டனர்.  ஆனால் சாபநிவர்த்தி எளிதில் கிட்டவில்லை.  அவர்களுக்காக ஸ்ரீமன் நாராயணன், மகா கணபதி, துர்வாச முனிவர் ஆகிய மூவரும் ஈசனிடம் முறையிடுகின்றனர். இந்நிலையில் மந்திர தேவதைகள் திருக்கோடிகா என்ற திருத்தலத்தை அடைந்து அங்குள்ள நந்தியின் கொம்பினால் உண்டான சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி, ஈசன் அருளினால் சாபநிவர்த்தி பெற்று சாயுஜ்ய பதவியடைந்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது. 

    அவ்வாறு அவர்கள் சாபநிவர்த்தி பெற்றது ஒரு சிவராத்திரி அமாவாசை நாளாகும். மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கும் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் நீங்கியதால் "திரிகோடிக்கா' என்று பெயர் உண்டாயிற்று.    இத்தலம் கிருதயுகத்தில் "பில்வவனம்' (வில்வம்) என்றும், திரேதா யுகத்தில் "சமீவனம்' (வன்னி) என்றும், துவாபரயுகத்தில் பிப்லவனம் (அரசு) என்றும், கலியுகத்தில் வேத்ரவனம் (பிரம்பு) என்றும் திகழ்வதாக ஐதீகம். 

    திருக்கோடீஸ்வரர்: மூல மூர்த்தி, சதுர பீடத்தில் உயர்ந்த பாணம் கொண்டு காட்சியளிக்கிறார். கிழக்கு நோக்கிய சந்நிதி, மூன்று கோடி மந்திர தேவதைகளுடன், மூன்று கோடி ரிஷிகளும், மூன்று கோடி தேவர்களும் பூஜித்தமையால் திருக்கோடீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். திருக்கோடிநாதர் என்ற திருநாமமும் உண்டு.

    திரிபுர சுந்தரி: அம்பிகை, வடிவாம்பிகை எனும் திரிபுர சுந்தரி தனி சந்நிதியில் அருள் பாலிக்கிறாள். இந்த அம்பிகைதான் ஒரு சமயம் கைகளில் சங்கு சக்ராயுதங்களை ஏந்தி ஸ்ரீவத்ஸமும், கௌஸ்துப மாலையும் தரித்து வேங்கடவனாக துர்வாசருக்கும் பன்னீராயிரம் முனிவர்களுக்கும் காட்சி தந்தாள் என்ற வரலாறும் கூறப்படுகிறது.

    புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமைகளில் திரிபுர சுந்தரிக்கு "திருவேங்கடவனாக' அலங்காரம் செய்யப்படுவது சிறப்பு. இதைத்தவிர, "காட்சி கொடுத்த அம்பாள்' என்ற பெயரில் மகா மண்டபத்தில் துர்வாசகர் சிலைக்கும், சுவாமி சந்நிதிக்கும் இடையில் ஒரு அம்பாள் பிரதிஷ்டையாகியுள்ளாள். "தன்னுடைய திருமேனிக்கு சமமாக பெருமை கொண்ட பூமி இது' என இறைவனே அறுதியிட்டு கூறிய தலம். 

    பாடல் பெற்ற தலம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடிப்பரவிய காவிரியின் வடகரைத் தலங்களுள் 37}ஆவது தலமாகும். "கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே!' என்று அப்பர் பெருமான் தனது பதிகத்தில் போற்றிப்பாடுவார். இன்றிருக்கும் அல்லது நாளை வரும் சுகவாழ்க்கையை பெரிது என்று எண்ணாமல், என்றும் அழியாத இன்பத்தில் ஆழும் முக்தி நிலையை அடைய இத்தலம் வருமாறு சம்பந்தப்பெருமான் "இன்று நன்று, நாளை நன்று' என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தில் குறிப்பிடுவார். 

    வழிபாட்டுப் பலன்கள்: இக்கோயிலில் சுவாமி அம்பாள் சந்நிதிகளிலும், ஸ்ரீ வடுகபைரவப் பெருமான் சந்நிதியிலும் நடைபெறும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று  குடும்ப நலம் பெருகவும், மனக்குழப்பங்கள் நீங்கவும் மக்கள் வேண்டிக்கொள்கிறர்கள். உடல் நலம் பெருகி நீண்ட ஆயுள்பெற இத்தலத்தில் "ஆயுஷ்ய ஹோமம்' செய்து கொள்கிறார்கள். இத்தல புஷ்கரணியிலும், காவிர நதியிலும் தீர்த்தமாடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.

     விழாக்கள்: மாசி அமாவாசையன்று மந்திர தேவதைகள் முக்தி பெற்ற நாள் ஒரு ஐதீக விழாவாக தீர்த்தவாரியுடன் நடைபெறுகின்றது. 

    இவ்வாண்டு மார்ச் 1}ஆம் தேதி சிவராத்திரியன்று இரவு நான்கு காலங்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகளும், 2 }ஆம் தேதி அமாவாசையன்று தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 
    அமைவிடம்: தஞ்சை மாவட்டத்தில் திருவிடை மருதூர் வட்டத்தில் கல்லணை } பூம்புகார் சாலையில் கும்பகோணத்திற்கு கிழக்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. நவகிரகத் தலங்களுள் ஒன்றான கஞ்சனூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

    தொடர்புக்கு: 91595 14727 / 96299 42881.

    -எஸ்.வெங்கட்ராமன்


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp