இறைவன் குடியேறிய உள்ளம்!

எரிக்கோ நகரத்தின் ஒரு வீதி, திரளான மக்கள் கூட்டம், நடுவில் இயேசு வருகிறார்.
இறைவன் குடியேறிய உள்ளம்!

எரிக்கோ நகரத்தின் ஒரு வீதி, திரளான மக்கள் கூட்டம், நடுவில் இயேசு வருகிறார். அதே நகரில் வரி வசூலிக்கும் ஆயக்காரத் தலைவனும், செல்வந்தனுமாயிருந்த சகேயு என்ற மனிதன், இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருந்தான். அவர் எப்படிப்பட்டவர் என்று அறிய அவரைக்காண மிகுந்த வேட்கை உடையவனாயிருந்தான்.

இயேசுவோ ஜனத்திரளுக்கு நடுவே இருந்தார். சகேயு சற்று முன்னே ஓடி, ஒரு காட்டத்தி மரத்தின் மீது ஏறிக்கொண்டான். இயேசு காட்டத்தி மரத்தினருகே வந்தபோது, மரத்தின் மேலிருந்த சகேயுவை நோக்கி "நீ விரைவாக இறங்கி வா! இன்று உன் இல்லத்திலே தங்கப்போகிறேன்!' என்றார் (லூக் }19:5). 

சகேயு மகிழ்ச்சியுடன் இயேசுவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். இதைக்கண்ட மக்கள் "இவர் இந்தப் பாவியின் வீட்டில் தங்கப்போகிறாரே!' என்று முணுமுணுத்தார்கள்.
மக்களின் குற்றச்சாட்டைக் கேட்ட சகேயு, இயேசுவை நோக்கி, "ஆண்டவரே! என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். யாரிடத்திலாவது எதையாவது அநியாயமாய் வாங்கியிருந்தால், அதற்கு ஈடாக நான்கு மடங்காகத் திரும்பச் செலுத்துகிறேன்!' என்றான் (லூக் }19:8).

இவ்வார்த்தைகளைக் கேட்ட இயேசு, "இன்று இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே... இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனிதகுமாரன் வந்திருக்கிறார்!' என்றார்.

ஒரு மனிதன் எப்படிப்பட்ட பாவியாயிருந்தாலும், இறைவனை தன் முழு உள்ளத்தோடு நினைத்துவிட்டால், இறைவன் அவன் உள்ளத்திற்குள் வந்துவிடுவார்; அவர் அவனோடு பேசிவிட்டாலோ, பாவியான மனிதனாக இருந்தாலும், முற்றிலுமாக மனமாற்றம் அடைந்து, புதிய பிறப்பாக மாறிவிடுகிறான் சகேயுவைப் போல.

ஆம்! அநியாயமாய் ஏழை எளிய மக்களிடம் வரி வசூலித்த ஆயக்காரன் சகேயு, இன்று அன்பில் நிறைந்தவனாய், ஏழைகளுக்குத் தன் செல்வத்தில் பாதியை வழங்கும் வள்ளலாக மாறுகிறான். அநியாயமாய் அபகரித்த பிறருடைய செல்வத்தையும் நான்கு மடங்காக திருப்பித் தந்து விடுவதாக வாக்களிக்கிறான். 

காரணம், அதீத பொருளாசையும் செல்வச் செருக்கும் குடியிருந்த உள்ளத்தில் இறைவன் குடியேறிவிட்டார். இறைவன் தன் பிள்ளைகள் பாவத்தில் அழிவதை ஒருபோதும் விரும்புவதில்லை. ஆத்தும அழிவை விரும்பாதவர் இறைவன். எனவேதான் இழந்து போனதைத் தேடி மீட்கவே மனிதகுமாரனாக இயேசு வந்தார் இப்பூமிக்கு.

-மு.சே.அருள் ராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com