சிவராத்திரிக்கென்றே ஒரு க்ஷேத்திரம்

அம்பிகைக்கு விசேஷமான நாள்கள் என்றால் அது நவராத்திரி தான். அதுபோல் சிவபெருமானுக்கு விசேஷமான நாள்கள் என்றால் அது சிவராத்திரிதான்.
சிவராத்திரிக்கென்றே ஒரு க்ஷேத்திரம்

அம்பிகைக்கு விசேஷமான நாள்கள் என்றால் அது நவராத்திரி தான். அதுபோல் சிவபெருமானுக்கு விசேஷமான நாள்கள் என்றால் அது சிவராத்திரிதான்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு, மாத சிவராத்திரி ஆகும். அதிலும் மாசி மாதத்தில் அமையும் மகா சிவராத்திரி மிகவும் விசேஷமானது. மாசி மாத அமாவாசையிலிருந்து, பதினான்காம் நாள், சதுர்த்தசிஅன்று இம்மங்கள நாள் அமைகிறது. மகா சிவராத்திரி சம்பந்தப்பட்ட சில புராண விவரங்களைப் பார்ப்போம். 

ஒரு சமயம் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்கிற என்கிற கருத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் மோதலாக மாறி பிரபஞ்சத்தையே அச்சுறுத்தியது. 

தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட  அவர் பெரும் ஜோதி பிழம்பாகக் காட்சி கொடுத்தார். அப்பொழுது அவரது அடியும் முடியும் காணக் கிடைக்காததால் , அவர் அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே உயர்ந்தவர் என்று கருதப் படுவார் என்று சிவபெருமான் தீர்ப்பளித்தார். 

அதன்படி பிரம்மாவானவர் அன்னப்பறவையாக சிரசைத் தேடியும், விஷ்ணுவானவர் வராகமாக பூமியைப்  பிளந்து, திருவடியைத் தேடியும் சென்றனர். இருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. 

அனைவரும் போற்றித் துதித்து வேண்டி நிற்க, நெருப்புப் பிழம்பின் நடுவில், மான், மழுவோடு, அபய , ஹஸ்த முத்திரைகள் தாங்கி சிவபெருமான் லிங்கோத்பவராகக் காட்சியளித்தார். இது நிகழ்ந்ததும் ஒரு மகாசிவராத்திரியன்று தான்.

ஒருமுறை பார்வதிதேவி  சிவபெருமானின் இரண்டு கண்களையும் மூடி விளையாடிய பொழுது  உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய சந்திரர்களான அவருடைய கண்கள் மறைக்கப்பட்டு எங்கும் காரிருள் சூழ்ந்தது. 

உடனே சிவபெருமான், நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்த பொழுது, எல்லோருமே பயந்து நடுங்கினர்.தன் தவறை உணர்ந்த உமையவள், பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாள் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில் இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை அந்நாளை, சிவராத்திரி என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

கயிலையில் நடந்த சுவாரசியமான கதையைப் பார்ப்போம். கைலாயத்தில், ஒரு நாள்,  ஒரு வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து, சிவபெருமான், பார்வதிதேவிக்கு ஆகமங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது அந்த மரத்தின் மேல் ஒரு குரங்கு அமர்ந்திருந்தது, இரவு முழுவதும் கண்விழித்து, மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகக் கொய்து, கீழே போட்டுக் கொண்டிருந்தது. மரத்தில் இருந்து இறங்கிய குரங்கு, இருவரையும் வலம் வந்து வணங்கி நின்றது. 

அப்பொழுது சிவபெருமான், தெரிந்தோ தெரியாமலோ வில்வ இலைகளால் மகா சிவராத்திரியன்று எங்களை நீ பூஜித்தாய். ஆகையால் நீ ஏழு உலகங்களையும் ஆளும் சக்கரவர்த்திகளில் ஒருவனாக அடுத்த பிறவியில் பிறக்கக் கடவது' என்று ஆசீர்வாதம் செய்தார்.

அந்த ஆசீர்வாதத்தால் அக்குரங்கு, பூலோகத்தில் முகுந்த சக்கரவர்த்தி என்னும் பிறவியினை எடுத்தது .நாம் அறியாமல் செய்யும் சில விஷயங்களுக்கும் அதற்கு உண்டான பலன் நிச்சயமாக கிடைக்கும் என்பதை அடுத்து வரும் ஒரு சம்பவத்தின் மூலம் பார்ப்போம்.  இது வேறு எங்கும் நடந்துவிடவில்லை. இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் தான் நடந்திருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில், "திருவைகாவூர்' என்னும் புண்ணிய க்ஷேத்திரம் உள்ளது. இத்தலம் மகாசிவராத்திரி úக்ஷத்திரம் என்றே அறியப்படுகிறது. இத்தல மகிமையைப் பற்றி, "அருள்மிகு சர்வஜன ரட்சகி அம்பாள் உடனுறை வில்வவனேஸ்வரர்' திருக்கோயில் குருக்கள் ரவிச்சந்திரன் கூறுவதைப் பார்ப்போம்.

"இந்தக் கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. எமபயம் நீக்கும் இந்தத் தலம் மகா சிவராத்திரி úக்ஷத்திரம் என்றே அழைக்கப்படுகிறது. தவநிதி என்னும் ஒரு முனிவர், இந்த திருவைகாவூரில் இருந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டு வந்தார்.

வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் வேடர்கள் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு வேடன் ஒரு மானைத் துரத்திக் கொண்டு வந்த பொழுது அந்தமான் இந்த முனிவரிடம் தஞ்சம் அடைந்தது. 

மானுக்கு தஞ்சம் அளித்த முனிவரின் மேல் கோபம் கொண்ட வேடன், அவரைத் தாக்க முயன்றான். முனிவர்  சிவனை வேண்டி நின்றார். சிவபெருமான்,  ஒரு புலியின் ரூபம் ஏற்று,  வேடனைத் துரத்தலானார். புலிக்குப் பயந்த வேடன், அங்கிருந்த வில்வ மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான். மரத்தில் இருந்த வில்வ இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான்.  அத்தனை வில்வ இலைகளும் புலியின் ரூபத்தில் இருந்த சிவபெருமானின் மேல் விழுந்தன. மறுநாள் வேடனுக்கு ஆயுள் முடியும்  காலமாக இருந்தது.

வேடனின் உயிரை பறிப்பதற்காக, எமன், அத்தலத்திற்குள் நுழைய முற்பட்ட பொழுது  சிவபெருமான்  ஒரு கோல் எந்திய தக்ஷிணாமூர்த்தி ரூபத்தில் எமனை விரட்டினார். அசிரத்தையாக இருந்த நந்தியும் விழித்துக்கொண்டு தன் மூச்சுக் காற்றினால், எமனை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினார். அதனால் இந்தக் கோயிலில் நந்தியம்பெருமான், ஆண்டவனை நோக்கி இல்லாமல், வாயிலை நோக்கிய வண்ணம் திரும்பி இருப்பார்.

நான்கு ஜாமத்திலும், அன்னம், நீர், உறக்கம் இல்லாமல் விழித்திருந்து , சிவனுக்கு வில்வ தளங்களை சமர்ப்பணம் செய்ததால், அந்த வேடனுக்கும், தன் அடியாரான தவநிதி முனிவருக்கும் மோட்ச பிராப்தியை அளித்தார், சிவபெருமான். எமன்,  வாயிலில் ,தானே ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தி , ஸ்நானம் செய்து சிவபெருமானை வழிபட்டதால், அக்குளம் எம தீர்த்தம் எனப்படுகிறது. இங்கு மூர்த்தி சுயம்பு லிங்கம் ஆகும்.

இப்படி பல விதங்களில் மேன்மை பெற்ற இத்தலம், எமபயம் நீக்கும் தலமாகவும், குழந்தைகள் இல்லாதவர்களுக்கு, புத்திர பாக்கியத்தை அளிக்கும் தலமாகவும் விளங்குகிறது. எல்லோரும் அவசியம் இத்தலத்திற்கு வந்து, ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு, எல்லா நலன்களையும் பெறவேண்டும்!'' என்றார். 

மகா சிவராத்திரியன்று, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, சுவாமி படங்களுக்கு பூச்சரம் சாற்றி, நெற்றியில் விபூதி தரித்துக் கொண்டு, சுத்த உபவாசம் இருந்து, ஓம் "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை பாராயணம் செய்து, சிவ சுலோகங்களைப் படித்து சிவ சிந்தனையோடு இருத்தல் வேண்டும். அன்று இரவு கோயிலுக்குச் சென்று நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொள்ளலாம்.

அன்று கோயிலில் அபிஷேகத்திற்கு உண்டான சாமான்கள்,  புஷ்பம், வில்வதளங்கள் போன்றவற்றை சக்திக்கேற்ப கொடுக்கலாம். மறுநாள் சிவராத்திரி பாரணை என்று கூறப்படும் சிவராத்திரி அன்னதானத்தை ஒருவருக்காவது கொடுத்துவிட்டு, நம் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். மகா சிவராத்திரி மகிமையை அறிந்து கொண்டு, விரதம் இருப்போம். சிவ கடாக்ஷத்தை பரிபூரணமாகப் பெறுவோம்.

மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com