பொருநை போற்றுதும் - 183

பாஞ்சாலங்குறிச்சி ஜமீன்தாரான அந்த மனிதரோ, ஆஷின் ரயில் பெட்டிக்கு நேர் எதிரிலேயே சற்று எட்டத்தில்..
பொருநை போற்றுதும் - 183

பாஞ்சாலங்குறிச்சி ஜமீன்தாரான அந்த மனிதரோ, ஆஷின் ரயில் பெட்டிக்கு நேர் எதிரிலேயே சற்று எட்டத்தில் நின்று, யாருக்கோ கை காட்டி அழைத்தார். ஆஷின் மனைவி அவரை ஐயத்துடன் பார்த்தவுடன், என்ன நினைத்தாரோ, நண்பர்களுடன் வெயிட்டிங் அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார்.

கலெக்டர் பெட்டிக்கு வெளியில் காவலாக நின்றார் கலெக்டரின் டபேதார் காதர் பாஷா. ஸ்டேஷன் மாஸ்டர் அருள்நாதம் பிள்ளையின் மகன்களான 14 வயது ஆரோக்கியசாமியும் 12 வயது மரியதாஸýம், நடைமேடை ஓரத்தில் நின்று, கண்களை விரித்துக் கலெக்டரையும் அவர் மனைவியையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

பெட்டிக்குள்ளே, கையில் எதையோ வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்கு அருகில் அமர்ந்துகொண்டார் ஆஷ். பஞ்சகச்ச வேஷ்டியைச் சற்றே மேலேற்றிக் கொண்டு, பிஸ்டலைப் பச்சைக் கோட்டுக்குள் மறைத்துக் கொண்ட வாஞ்சியும், சட்டையில்லாமல் தோளில் அங்கவஸ்திரம் மாத்திரம் அணிந்திருந்த சங்கரகிருஷ்ணனும், நடைமேடையில் நடந்தார்கள். 

முத்துசாமியும், சிதம்பரம் பிள்ளையும் சற்று தள்ளி நின்றுகொண்டிருக்க, வாஞ்சியும் சங்கரகிருஷ்ணனும் முதல் வகுப்புப் பெட்டியை நெருங்கினார்கள். அப்படியே கடந்து செர்வண்ட்ஸ் கம்பார்ட்மெண்ட் பக்கமாக சங்கரகிருஷ்ணன் நகர, வாஞ்சி மட்டும் முதல் வகுப்புப் பெட்டியின் இடத்திலேயே நின்றுவிட்டார். 

பச்சைக் கோட் ஆசாமி அங்கு நிற்பதை ஸ்டேஷன் மாஸ்டரின் புதல்வர்கள் கண்டார்கள். பச்சைக் கோட்டுக்குள்ளேயிருந்து சரேலென்று பிஸ்டலை உருவிய வாஞ்சி, ஆஷை நோக்கி அதனை நீட்டினார். அதை கவனித்துவிட்ட ஆஷ், மிகுந்த பதற்றத்துடன், தன்னுடைய தொப்பியைக் கழற்றி வாஞ்சி மீது வீசினார். தொப்பி நடைமேடையில் விழுந்து உருள, வாஞ்சியின் விரல்கள் பாய்ச்சிய ரவை, ஆஷின் வலது மார்பில் பாய்ந்து, நுரையீரலைத் துளைத்தது. 

கலெக்டரைச் சுட்டவரைப் பிடிப்பதற்குக் காதர் பாஷா முயல, அவரோ, நடைமேடையின் மூலையிலிருந்த பயணிகள் கழிப்பறைக்குள் புகுந்துவிட்டார். சுட்டவரைத் தப்பிக்க விடக்கூடாது என்னும் நோக்கத்துடன், போலீஸ்காரர்கள் பலர் கழிப்பறையைச் சூழ்ந்துகொண்டனர். கையில் துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் ஒருவர் உள்ளே நுழைய முற்பட, அதற்குள்ளாக உள்ளேயிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது. 

தம்முடைய வாய்க்குள் துப்பாக்கியை வைத்துத் தம்மைத் தாமே வாஞ்சி சுட்டுக்கொண்டுவிட்டார். ஆமாம், சொன்னதுபோல, அம், மரிக்கப் போய்விட்டார்; மரித்தும் போய்விட்டார் (வாஞ்சிக்கு மலையாளமும் நன்றாகத் தெரியும்; "அமெரிக்கப் போகிறேன்' என்று முந்தைய நாள் அழகப்பப் பிள்ளையிடம் கூறியதை, சப்த ரீதியாகப் பிரித்தால், அம்=நான்,  மரிக்க=சாக, போகிறேன் என்று வரும்).

சங்கரகிருஷ்ணன் எதிர்த்திசையில் ஓடிவிட, பிளாட்பாரம் அல்லோல கல்லோலப்பட்டது. பலரும் ஓடிவர, மருத்துவ உதவியாளர் ஒருவர் தன்னால் முடிந்ததைச் செய்தார். 

உயிருடன் போராடிக்கொண்டிருந்த ஆஷுக்கு மேலும் சிகிச்சையளிக்க, ரயில் திருநெல்வேலிக்குத் திருப்பப்பட்டது. வேறு திசையில் போகவேண்டிய பயணிகள் தவித்தனர். கங்கைகொண்டான் அருகே ரயில் வந்தபோது, மனைவியின் கரங்களில் உயிரை விட்டார் ஆஷ். 

வரலாற்றின் விந்தை, ஆஷைச் சுட்ட வாஞ்சி, ஆஷ் உயிர் துறப்பதற்கு முன்னரே வீரசுவர்க்கத்தை அடைந்திருந்தார்.  வாஞ்சியின் உயிரற்ற கரத்திலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட ஆட்டோமேட்டிக் பிஸ்டலில் வேறு ரவைகள் இருக்கவில்லை. இரண்டு ரவைகளை மட்டுமே வாஞ்சி அதில் இட்டிருந்தார். ஒன்று, ஆஷுக்கு; மற்றது, தனக்கு! 

வாஞ்சியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், திருநெல்வேலிக்கு அதனைக் கொண்டு சென்றனர். கோட்டின் ஒருபக்கத்து ஜேபியில், விக்டோரியா ராணியின் படம் போட்ட, ஃபிரான்ஸில் செய்யப்பட்ட பர்ஸ் ஒன்றிருந்தது; அதற்குள், திருநெல்வேலி பாலத்திலிருந்து மணியாச்சி வரைக்குமான இரண்டாம் வகுப்பு டிக்கெட். உள்ளே அணிந்திருந்த சட்டை ஜேபியில், தேதியிடப்படாத சிறிய கடிதம் ஒன்று

பாரத தர்மத்தைக் கால்களுக்கடியில் நசுக்கிவிட்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு விரட்டப்படவேண்டும். ................இதற்காக, சிறியவனான நான், இன்று இதனைச் செய்துவிட்டேன். இந்தியாவில் உள்ள அனைவரும் செய்யவேண்டிய கடமை இது. இதுதான், இக் காகிதத்திலிருந்த சாராம்சம். 

இதே காகிதத்தில், "ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் கையொப்பமிட்டிருந்தது. இந்தக் கையொப்பத்தை வைத்துத்தான் போலீஸôர் செங்கோட்டைக்குச் சென்றனர். இல்லையெனில், சுட்டவர் யார் என்பதற்கான எந்தத் துப்பும் அங்கிருக்கவில்லை. 

ஆஷைச் சுட்டுவிட்டு வாஞ்சி தன்னையும் சுட்டுக் கொண்டதைக் கண்ட நண்பர்கள், திசைக்கொருவராகப் பறந்தனர். சங்கரகிருஷ்ணன் எதிர்திசையில் ஓடித் தப்பினார். முத்துசாமி, அன்றிரவே நெல்லைக்குத் திரும்பி, வீரராகவபுரம் சங்கரையர் உண்டியக் கடை நாரயணையரிடம் நடந்ததைக் கூறிவிட்டுத் தலைமறைவானார். 

மடத்துக் கடை சிதம்பரம் பிள்ளை, மணியாச்சியிலிருந்து நேரடியாகத் தென்காசி சென்று, அப்போதுதான் பிரசவித்திருந்த மனைவியைப் பிரசவ அறைச் சாளரத்தின் வழியாக நோக்கிவிட்டுத் தலைமறைவானார். ரவணசமுத்திரத்தில் நடந்துகொண்டிருந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்குச் சென்றார் சங்கரகிருஷ்ணன். 

திருநெல்வேலியில் வாஞ்சியின் உடலை, மாவட்ட மருத்துவ அதிகாரி ராமராவ் பிரேதப் பரிசோதனை செய்தார். வாய்க்குள்ளிருந்து பாய்ந்த ரவையானது, கழுத்து வழியாக முதுகெலும்பின் மேல் பாகத்திலும் மண்டையோட்டின் அடியிலும் ஊடுருவியிருந்தது. 


(தொடரும்)  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com