175. பொருநை போற்றுதும்! செங்கோட்டை பெயர்க்காரணம்!
By டாக்டர் சுதா சேஷய்யன் | Published On : 01st January 2022 05:10 PM | Last Updated : 01st January 2022 05:10 PM | அ+அ அ- |

டாக்டர் சுதா சேஷய்யன்
செங்கோட்டை: கோட்டைகள் கட்டப்பட்ட, அரச வம்சங்களின் வசிப்பிடங்களாக இருந்த பகுதிகளும் ஊர்களும் "கோட்டை' என்னும் பெயர் பெற்றன. செங்கோட்டையில் அப்படியென்ன கோட்டை இருந்தது?
இந்த ஊரின் மேற்குப் பகுதியில் நல்லூர்கால் என்னுமோர் இடம் உண்டு. நல்லூர்ராஜா என்றொருவர் இருந்தாராம்.
இவர் இங்கு அரண்மனை கட்டி, குளம் அமைத்து, சிவபெருமானுக்குத் திருக்கோயில் கட்டுவித்தார். இந்த வளாகத்திற்கு அரண் அமைத்தார். இந்த அரணே கோட்டையாக அமைந்ததால், இந்த ஊருக்கும் "செங்கோட்டை' என்னும் பெயர் ஏற்பட்டது.
ஐந்து வயதில் மேடையேறி, எட்டு வயதிலேயே புகழ்மிக்க இசைவாணராக மிளிர்ந்த கங்காதரன் கிட்டப்பா, செங்கோட்டையில் பிறந்தவர். செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா என்பதே எஸ்.ஜி.கிட்டப்பா என்றானது.
1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் நாள், கங்காதர ஐயருக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாக, பத்துப் பிள்ளைகளுக்கு நடுவில் பிறந்தவர் கிட்டப்பா. ராமகிருஷ்ணன் என்பதுதான் பெற்றோர் இட்ட பெயர். இருந்தாலும், சகோதர சகோதரியரும் பிறரும் "கிட்டா' என்று (ராமகிருஷ்ணன் என்பதன் கிருஷ்ணனைச் சுருக்கி) செல்லமாக அழைக்க, அதுவே மேடைகளில் கிட்டப்பா ஆகிவிட்டது.
பதின்மப் பருவத்திலேயே, தம்முடைய இசையால் அனைவரையும் வசீகரித்துக் கொடிகட்டிப் பறந்தார் கிட்டப்பா. இசைப் போட்டியாளராகச் சந்தித்து, பின்னர் மனத்திற்கு உகந்த காதலியான கே.பி.சுந்தராம்பாளை 1927-இல் கரம்பிடித்தார்.
தனித்தனியாகவும் இருவரும் இணைந்தும் தேச எழுச்சிப் பாடல்களைப் பாடியபோது, சுதந்திர தாகத்தின் வேட்கையினை உலகம் உணர்ந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியின் நிறைவிலும், காந்தியடிகளின் உள்ளம் கவர்ந்த "ரகுபதி ராகவ ராஜாராம்' பாடலைப் பாடுவது கிட்டப்பாவின் வழக்கம். உப்புச் சத்தியாகிரகத்திற்கு நிதி திரட்டுவதற்காகத் தம்முடைய பேனாவை நாடக அரங்கில் ஏலம் விட்டார்; அப்போதைய காலத்தில் (1930-இல்) 50 ரூபாய்க்கு அந்தப் பேனா ஏலம் எடுக்கப்பட்டது!
தம்முடைய 28 வயதில், 1933 டிசம்பர் 2-ஆம் நாள், இந்தச் சங்கீதக் குயிலின் நாதம் ஒடுங்கிவிட்டது என்றாலும், இன்றுவரை இவரின் மேன்மையை எதுவும் மங்கடிக்கச் செய்யவில்லை. சிற்றாற்றுச் செங்கோட்டைக்குப் பொருநையாளின் ஹரிகேசநல்லூர் புகழாரம் சூட்டி மகிழ்ந்த கதையும் நடந்தது.
தியாகையரின் பிரபலமான கீர்த்தனங்களில், தேவாம்ருதவர்ஷிணி ராகத்தில் அமைந்த "எவரனி' என்னும் கீர்த்தனமும் ஒன்று. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இந்தப் பாடலை அதியற்புதமாகப் பாடுவார். சற்றே வித்தியாசமான, கூடுதல் கடினமான தேவாம்ருதவர்ஷிணியைப் பாடுவது அவ்வளவு சுலபமன்று. முத்தையா பாகவதரின் இசை நுட்பமும் வித்தகமும் ஊரறிந்தவை. "எவரனி' கீர்த்தனத்தை பாகவதர் பாடி, இடைத் தட்டாகப் பதிவு செய்து வெளியிடவேண்டும் என்னும் விருப்பம் பலருக்கும் இருந்ததால், அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பாகவதரும் பாடினார்; பாடல் பதிவும் நடைபெற்றது; இசைத்தட்டு கூடிய விரைவில் வெளிவரும் என்னும் நிலையில், அதற்கான சன்மானத்தையும் பாகவதர் பெற்றுவிட்டார். இசைத்தட்டு விரைவில் வரப்போகிறது என்னும் மகிழ்ச்சியுடன், பிறர் பாடிய இசைத்தட்டுகள் பலவற்றைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இசைத்தட்டு ஒன்றில், "எவரனி' பாடல்.....சுநாதமோ சுநாதம்.... தேவாம்ருதமே நேரடியாக வர்ஷிப்பதுபோல் இருந்தது....... பாடியிருப்பவர் யார்?........ பெயரைப் பார்த்த பாகவதருக்கு வியப்பு....... வேறு யார்? சாட்சாத் கிட்டப்பாதான்!
கிட்டப்பாவை அழைத்து மகிழ்ந்து உபசரித்த பாகவதர் சொன்னாராம்: "நல்லவேளை, நீங்கள் நாடகத் துறைக்குப் போய்விட்டீர்கள்; இல்லையென்றால், சங்கீதக்காரர்கள் பாடு திண்டாட்டம்!' அது மட்டுமில்லை, தம்முடைய இசைத்தட்டு வெளிவரவேண்டாம் என்று தடை செய்து, வாங்கிய சன்மானத்தையும் பாகவதர் திருப்பிக் கொடுத்தார். சகோதரப் பெருமையைக் கண்டு களித்துப் பெருமிதப்படுவதுதானே பொருநைக் கரையின் மாண்பு.
பல்லாண்டுகளுக்கு முன்னர்... அதுவொரு சனிக்கிழமை மாலை. தூத்துக்குடி தபசு மண்டபத்தில் இளைஞர்கள் சிலர் கூடியிருந்தனர். தணிந்த குரல்களில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்; யாராவது சுற்றுமுற்றும் இருக்கிறார்களா என்று இங்கேயும் அங்கேயும் பார்த்துக் கொண்டும் இருந்தனர்.
திகில் ஏற்படுத்தும்படியான விஷயத்தை அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர் என்றாலும், அது நடக்கவேண்டும் என்று அவர்கள் அனைவரும் ஆசைப்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு அது அச்சமூட்டும் ஒன்றாக இருக்கவில்லை.
இதற்கிடையில், அன்றிரவு, திருநெல்வேலி வீரராகவபுரத்திலிருந்த சங்கரையர் கடைக்கு வந்த முத்துசாமி, காலையில் நடந்த ஒரு சம்பவம் குறித்துப் பரபரப்புடன் கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டார்.
முத்துசாமி யாரிடம் சேதி சொன்னாரோ, அந்த நாராயணையர், "அடடா, இந்தப் பாழாப் போன டிரங்க் பெட்டியால எனக்கு ஆபத்து வந்துவிடுமே' என்று பதறினார்.
சிதம்பரம் பிள்ளை என்பவர், தென்காசிக்குச் சென்றார்; தம்முடைய மனைவிக்கு அன்றுதான் பிறந்திருந்த பெண்குழந்தையைக் காண்பதற்கு ஆசையிருந்தும், சிக்கிக் கொண்டுவிடக்கூடாதே என்று, பிரசவ அறையின் வெளிப்பக்கத்தில் நின்று, ஜன்னல் வழியாக மனைவியின் முகத்தில் ஒரு துளி மட்டும் பார்த்துவிட்டு இருட்டில் சென்று மறைந்தார்.
சங்கரகிருஷ்ணன், ரவணசமுத்திரத்தில் நடந்துகொண்டிருந்த சொந்தக்காரர் வீட்டுக் கல்யாணத்திற்குச் சென்று கூட்டத்தோடு கூட்டமாக ஒளிந்துகொண்டார்.
செங்கோட்டையிலிருந்த கஸ்பா அழகப்ப பிள்ளை, நாவெழாமல் வியப்படைந்தார். நடந்ததை நினைக்க நினைக்க, நெஞ்சம் தவித்தது; கண்ணீர் முட்டியது. "அடேய், என்னடா உன் சாதுரியம்! இப்படியொரு அர்த்தத்தைப் பூடகமாக வைத்துப் பேசினாயாடா?' எண்ணும்போதே அழுகை அடக்கொண்ணாமல் பீறிட, தாம் நடத்திவந்த வாசகசாலை சுவரில் மாட்டியிருந்த பாரத மாதா படத்தின்மீது சாய்ந்து கதறினார்.
"நீ கொடுத்த படம்டா!' நினைக்கும்போதே ஏதோவொன்று நெருடியது. நண்பர்கள் எழுதியிருந்த ரகசியக் கடிதங்கள் பலவும் வாசகசாலைப் பெட்டியிலிருப்பது நினைவு வர, வேக வேகமாக அவற்றைத் தேடியெடுத்துக் கிழித்துப் போட்டுவிட்டுத் தலைமறைவானார்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை செங்கோட்டை அம்பிகாபுரம், அம்பாள் கோயில் மாட வீதியில், தம்முடைய வீட்டிற்குப் போலீஸார் வந்ததைக் கண்ட ரகுபதி ஐயர், ஒன்றும் புரியாமல் திணறினார். 12 வயது மகன் கோபாலகிருஷ்ணனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
அவருடைய மகள்களுக்கெல்லாம் திருமணம் ஆகிப் புக்ககம் சென்றுவிட்டனர்; மனைவியும் சில நாட்கள், தன்னுடைய தாய்வீட்டிற்குச் செல்கிறேன் என்று சென்றுவிட்டாள். சின்னப் பிள்ளையும் அவரும் மட்டுமே வீட்டில்!
நான்குப் பெண்களையும் இரண்டு மகன்களையும் பெற்ற ரகுபதி ஐயர், தம்முடைய மூத்த மகனைச் செங்கோட்டை இங்கிலீஷ் மீடியப் பள்ளியிலும் திருவனந்தபுரம் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியிலும் படிக்க வைத்திருந்தார்.
அந்தப் பிள்ளை, பரோடா சென்று, மரவேலைத் தொடர்பான படிப்பையும் படித்தான். ஆங்கிலம், தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நல்ல புலமையோடு விளங்கினான்.
அவனுக்கு, முன்னீர்பள்ளம் சீதாராமையரின் மகள் பொன்னம்மாளைத் திருமணம் செய்து வைத்திருந்தார். நல்ல பிள்ளை நல்ல பெண்; மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள்; பொன்னம்மாள் முதல் பிரசவத்திற்காகத் தாய் வீடு சென்றிருந்தாள். ஆனால், துரதிருஷ்டம் பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது.
ஆறு மாதங்களாகிவிட்டன. மனைவியைப் பார்க்கக்கூட அந்தப் பிள்ளை வருவதில்லை. "அட, சங்கரா, சர்க்கார் வேலையையும் விட்டு விட்டு, என்னடா செய்கிறாய்?' என்று தம்முடைய மூத்த மகன் சங்கரனைப் பற்றி ரகுபதி ஐயர் எண்ணிக் கொண்டிருந்த வேளையில்தான் போலீஸார் வந்தனர்.
காரணம் சங்கரன் என்று பெற்றோரால் பெயர் சூட்டப்பெற்று, அண்ணா என்றும் வாஞ்சி (நாதன்) என்றும் பலராலும் அழைக்கப்பட்ட அந்தப் பிள்ளை, முந்தைய நாள், அதாவது, 1911, ஜூன் 17-ஆம் தேதி, மணியாச்சி ரயில்வே ஜங்ஷனில், கலெக்டரின் பணியாளர்களான டபேதார் காதர் பாஷாவும், அமீர் கானும் பதறிப் பதைபதைத்து விரட்ட, அம்மைநாயக்கனூர் (கோடைக்கானல் ரோடு) செல்லும் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியிலிருந்த திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுவிட்டு, பிளாட்ஃபாரத்தின் ஓரத்திலிருந்த கழிப்பறையில் புகுந்து தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்து போயிருந்தான்.
(தொடரும்)