பொருநை போற்றுதும்!

வாஞ்சிநாதனைக் குறித்தும், மணியாச்சி நிகழ்வு குறித்தும் இன்றளவில் ஏராளமான பதிவுகள் வந்துவிட்டன. 
166. பொருநை போற்றுதும்! வியப்புக்குரிய களக்காடு
166. பொருநை போற்றுதும்! வியப்புக்குரிய களக்காடு

வாஞ்சிநாதனைக் குறித்தும், மணியாச்சி நிகழ்வு குறித்தும் இன்றளவில் ஏராளமான பதிவுகள் வந்துவிட்டன. 

ஆயின், 1916}இல் வெளிவந்த, ஹெச்.ஆர்.பேட் தொகுத்தெழுதிய திருநெல்வேலி மாவட்ட கெஸட்டீரில் காணப்படுகிற பதிவு நம்முடைய கவனத்திற்குரியது.

அந்த ஆங்கிலப் பதிவின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழ்க்காணுமாறு: 
      "1911, ஜூன் 7}ஆம் தேதி, டின்னவேலி (திருநெல்வேலி) கலெக்டரான மிஸ்டர் ஆர் டபிள்யூ டி'எஸ் ஆஷ், மாவட்டத்திலேயே, மணியாச்சி ரயில்வே நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். 

டிராவான்கூரில் (திருவாங்கூர்) உள்ள செங்கோட்டையைச் சேர்ந்த பிராமணரான கொலையாளி, ஆடோமேட்டிக் ரிவால்வர் ஒன்றைப் பயன்படுத்தியிருந்தார்; அதே துப்பாக்கியைப் பயன்படுத்தி, பின்னர் தன்னையும் சுட்டுக் கொண்டார். 

குற்ற விசாரணையில், தேசத் துரோகச் சதி ஒன்று இருந்தது தெரியவந்தது. பத்திரிகைத் துறையில் அனுபவமிக்க, 21 வயது இளைஞரான தஞ்சாவூர் பிராமணர் நீலகண்டன் ஐயர் இந்தச் சதிக்கு வித்திட்டவர். 

பாண்டிச்சேரியிலிருந்து வெளியான "சூர்யோதயா' என்னும் உள்ளூர்ப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த வாய்ப்பை, தென் மாவட்டங்கள் முழுவதும் தேசத் துரோகக் கட்டுரைகளைப் பரப்புவதற்கு இவர் பயன்படுத்திக் கொண்டிருந்தார். 

எனினும், 1910 மார்ச்சில், அரசாங்கம் இந்தப் பத்திரிகையைத் தடை செய்தது. எனவே, தங்களின் பிரசாரத்தைத் தொடர்வதற்கு நீலகண்டன் ஐயருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் வேறு முறைகள் தேவைப்பட்டன. 
திருவாங்கூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி பகுதிகளுக்கு இவர் (நீலகண்டன்) பயணப்பட்டார்; இந்த மாவட்டத்திற்கு (திருநெல்வேலி) இவர் புதியவரல்ல என்று தெரிகிறது. 

தூத்துக்குடி, தென்காசி, செங்கோட்டை ஆகிய ஊர்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்து, தன்னுடைய கருத்துகளைப் பரப்பிவிட்டார். சுருக்கமாகச் சொன்னால், "நாட்டின் துயரகரமான நிலையையும், அதற்குக் காரணமான அரசாங்க அநீதிக்கும் தீர்வு, பிரிட்டிஷாரை விரட்டுவதும் சுயராஜ்ஜியத்தைப் பெறுவதுமே' என்பதாக இவை இருந்தன. 

பிரசாரம் செய்தல், துண்டு நோட்டீஸ்கள் விநியோகித்தல் போன்றவை பயன் தராத நிலையில், புதியதான தீவிர முறை ஒன்றைச் செய்யவேண்டும். இந்தத் திட்டங்களுக்காகத் திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆட்களின் செயல்திட்டத்தில், குறிப்பிட்ட ஐரோப்பியத் தனிநபரைக் கொல்கிற எண்ணம் இருந்திருக்கவில்லை. 

ஆனால், திருவாங்கூர் சதியாளர்களுக்கிடையில் (இவர்களில் உண்மையான கொலைக் குற்றவாளியான வாஞ்சி ஐயரும் ஒருவர்) இப்படியொரு திட்டம் இருந்தது. 

சதி மற்றும் கொலைக்கு உடந்தை என்னும் வகையில், உயர்நீதி மன்றத்தின் சிறப்பு டிரிப்யூனலுக்கு முன்னர் பதினான்கு நபர்கள் விசாரிக்கப்பட்டனர். ஒன்பது பேர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு, ஒன்று முதல் ஏழாண்டுகள் வரையான சிறைத்தண்டனை பெற்றனர்'. 

நடந்தது குறித்த சுருக்கமான பதிவாக இது தெரிந்தாலும், இதன் தொனி சங்கடம் தருகிறது. நாட்டின் (அப்போதைய, சுதந்திரமற்ற) துன்பகரமான நிலை குறித்தும், அதற்கு (பிரிட்டிஷ்) அரசாங்கத்தின் அநீதியே காரணம் என்பது குறித்தும் தேசப் போராட்ட வீரர்கள் சிந்தித்ததே தவறு என்பது போன்ற தொனி. 

வாஞ்சியின் பெயரைக் குறிப்பிட விரும்பாமல், ஏதோ போகிற போக்கில் வேறு வழியில்லாமல் குறிப்பிட்டிருப்பதைக் கண்டால், இந்த நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரலாற்றில் பதிவு செய்ய பிரிட்டிஷார் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

காரணம், இது அவர்களுக்கொரு பேரிடி; அவர்களின் ஆட்சிப் பாதுகாப்புக்குச் சவால். எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று பிரிட்டனில் இருந்த மேலாட்சியாளர்களுக்குக் காட்ட விழைந்ததன் தொனிதான் இது! ஜூன் 17}ஆம் நாள் நடந்த நிகழ்ச்சியானது, 7}ஆம் தேதி என்று காணப்படுவதுகூட அச்சுப் பிழையாலா, வேண்டுமென்றேவா என்பதும் புரியவில்லை. 

வ. உ. சி}யும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டு, நெல்லைச் சீமை கொதித்து அடங்கிய நிலையில், ஒரு சில காலத்திற்கு அமைதி திரும்பியதைப் போன்ற சூழல் நிலவியது. 

1908 நவம்பர்}டிசம்பர் வாக்கில் நெல்லைப் பகுதிகளில் பயணம் செய்த மதராஸ் கவர்னர் ஆர்தர் வென்லக் லாலி, "கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அனைத்துச் சம்பவங்களின் நினைவுகளையும் என் மனத்திலிருந்து அழிக்கும்படியாக இப்போதைய நிலை இருக்கிறது!' என்றே சிலாகித்தார்.

பொறுமையும் சகிப்பும் வெளியே தீற்றியிருக்க, உள்ளுக்குள்ளே அக்னி கனன்று கொண்டிருந்தது. திருநெல்வேலியின் இளைஞர்கள் பலர் சேர்ந்து "பாரத மாதா சங்கம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்திருந்தார்கள். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், செங்கோட்டை போன்ற ஊர்களிலிருந்து இதன் முக்கிய உறுப்பினர்கள் ஜகந்நாத ஐயங்கார், ஹரிஹர ஐயர், வாஞ்சி ஐயர், வேங்கடாசலம் என்று அழைக்கப்பட்ட பிச்சுமணி ஆகியோர் மிக மிக முக்கியமானவர்கள். 

இந்தியா என்னும் நாட்டின் இறையாண்மையும் ஆட்சி உரிமையும், இங்கிலாந்து அரசருக்கு மறுக்கப்படவேண்டும் என்பதே இச்சங்கத்தாரின் குறிக்கோள். 

தங்களுக்குள் கடிதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது, சிவப்பு நிறக் காகிதங்களையும் உறைகளையும் இவர்கள் பயன்படுத்த முனைந்தார்கள் என்பதைக் கொண்டு, இவர்கள் ரத்தத்தைத்தான் குறித்தார்கள் என்று பிற்காலத் தகவல் ஒன்று பரப்பப்பட்டுவிட்டது. 

இதே காலகட்டத்தில், வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தியர்கள், இந்திய விடுதலைக்கான ஆதரவை ஒன்று சேர்க்க முனைந்து கொண்டிருந்தனர். 

இந்திய தேசபக்தர்களைத் தேவையில்லாமல் கைது செய்தல், தக்க காரணம் இல்லாமல் (அவர்கள் தேசத்தின் நலன் குறித்தும் பொதுவாக தேசத்தின் தன்னாட்சிக்குப் பாடுபடுவது குறித்தும் பேசினார்கள் / எழுதினார்கள் என்பது தவிர) தேசியவாதிகளை நாடு கடத்துதல் போன்ற செயல்பாடுகள், உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்திருந்தன. 

பிரிட்டிஷாரின் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிரான குரல்கள், இங்கிலாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், அமெரிக்கா போன்ற இடங்களில் ஒலிக்கத் தொடங்கியிருந்தன. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com