புரந்தரதாசரைப் போற்றுவோம்!

நமது பாரத கலாசாரத்தின் அடிநாதமாகத் திகழ்வது தெய்வபக்தி. அவ்வப்போது பாரதத்தின்..
புரந்தரதாசரைப் போற்றுவோம்!

நமது பாரத கலாசாரத்தின் அடிநாதமாகத் திகழ்வது தெய்வபக்தி. அவ்வப்போது பாரதத்தின் பல பகுதிகளிலும் பல மகான்கள் தோன்றி பக்தி மார்க்கத்தை வளர்த்தெடுத்து வந்திருக்கின்றனர். 

பாரதத்தில் மக்கள், பல கடவுள் வடிவங்களைப் பின்பற்றினாலும், எல்லா கடவுள்களுமே தங்களுக்குள் ஒரு உறவைக் கொண்டிருப்பதால், பாரத தேச மக்களின் ஒற்றுமைக்கே அது ஒரு சக்தியாக விளங்குகிறதென்பது மறுக்க முடியாத உண்மை. 

இத்தகைய மகான்களை அவ்வப்போது ஆண்டு கொண்டிருந்த மன்னர்களும் ஆதரித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய மகான்களில் தன் இசை மற்றும் பாடல்கள் மூலம் மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் புரந்தரதாசர் ஆவார்.  

ஸ்ரீ மத்வர் உருவாக்கிய துவைத சித்தாந்தத்தில் வந்த ஸ்ரீ வியாசராயரின் பிரதம சீடர் புரந்தரதாசர். பாடல்கள் மூலமாக மக்களின் அறியாமையை அகற்றி, அவர்களை பக்தி மார்க்கத்திற்குத் திருப்ப வேண்டுமென்ற தன் குருவின் கட்டளையை ஏற்று, எண்ணற்ற பாடல்களைப் பாடியவர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஹரிதாசர்கள் என்பவர்கள் பரம்பரையாய் உள்ள சந்நியாசிகளையும், துறவிகளையும் போன்றவர்கள். இவர்கள் மகாவிஷ்ணுவின் அவதாரமான பாண்டுரங்கன் மீது மிகுந்த பக்திப்  பிரேமை கொண்டவர்கள். இவ்வழியில் வந்தவர்தான் புரந்தரதாசர்.

சுமார் 500 வருடங்களுக்கு முன்னர், புணேவிற்கு அருகிலுள்ள "புரந்தா கட' என்னும் ஊரில் மாதவராவ், ரத்னா பாய் என்ற மனமொத்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு வெகு காலம் மக்கட்செல்வம் இல்லாமல் இருந்ததால், திருப்பதிக்குச் சென்று ஸ்ரீநிவாசப் பெருமாளை வேண்ட, பெருமாள் அருளால், 1484}இல் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. 

ஸ்ரீநிவாசப் பெருமாளின் அருளால் குழந்தை பிறந்ததால் அக்குழந்தைக்கு "ஸ்ரீநிவாச நாயக்' என்றே பெயரிட்டனர். இவர் சீனப்பா, திம்மப்பா, திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். 
பிற்காலத்தில் விட்டலர் மீது பக்தி ஏற்பட்டதால் "புரந்தரவிட்டலன்' எனும் பெயரும் வழங்குதலாயிற்று. தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

வைர வியாபாரம் செய்து வந்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் புரந்தரதாசர் மிகவும் சிக்கனமாகவே இருந்தார். ஒன்பது கோடிக்கு அதிபதியாக இருந்ததால், "நவகோடி நாராயணன்' என்ற பட்டப் பெயரைப் பெற்றார். ஆனால் அவருடைய மனைவி சரஸ்வதிபாய் மிகவும் தாராளமான மனமுள்ளவராகத் திகழ்ந்தார். அவரைத் தன்பால் திருப்ப, இங்கு பாண்டுரங்கன் தன் லீலையைத் துவக்கினான்.

ஒரு நாள் இறைவன் முதியவராய் ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீநிவாச நாயக்கின் கடைமுன்பாக வந்து நின்று, தன்னுடைய பையனுக்கு உபநயனம் செய்விக்க பண உதவி செய்யவேண்டும் என்று கேட்க, கருமியான ஸ்ரீநிவாச நாயக் மறுத்துவிட்டார். 

அந்த அந்தணர் ஸ்ரீநிவாச நாயக்கின் வீட்டிற்கே போய், சரஸ்வதிபாயிடம் யாசிக்க, கருணை உள்ளம் கொண்ட அவர், தன்னுடைய ரத்தினக்கல் மூக்குத்தியைக் கழற்றி, அவரிடம் கொடுத்துவிட்டார்.
அந்தணர் அந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு மீண்டும் ஸ்ரீநிவாசனிடம் சென்று, அந்த மூக்குத்தியை வைத்துக் கொண்டு அதற்குரிய பணம் தருமாறு கேட்டார். 
மூக்குத்தி தன் மனைவியுடையது எனப் புரிந்து கொண்ட ஸ்ரீநிவாசன் மிகுந்த கோபத்துடன் வீட்டிற்கு வந்து, சரஸ்வதிபாயிடம் அவளுடைய மூக்குத்தியைக் கேட்க, செய்வதறியாமல் திகைத்த சரஸ்வதிபாய் விட்டலனைத் துதிக்க, இறைவன் அவளுக்கு இன்னொரு மூக்குத்தியைக் கொடுத்தார்.

குழப்பமடைந்த ஸ்ரீநிவாசன் கடைக்குப் போய் பார்த்தால், அந்தணர் கொடுத்த மூக்குத்தி (மிகக் கவனமாகப் பூட்டி வைத்திருந்தது) மாயமாக மறைந்து போயிருந்தது! அந்தணரையும் காணவில்லை. உடனே ஓடிப்போய் தன் மனைவியிடம் அனைத்தையும் கூற, அவளுக்குப் புரிந்துவிட்டது இது கடவுளின் லீலை என்று. 

அப்போது ஓர் அசரீரி கேட்டது "எல்லா செல்வங்களையும் வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்? தான தர்மம் செய்யாமல் வாழ்ந்தால் எப்படி நற்கதி கிடைக்கும்? செல்வங்களைத் தானம் செய்து  புண்ணியம் தேடிக் கொள். இறைவனைப் பாடு. ஸ்ரீகிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீவியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு உபதேசம் செய்வார்...!' என்று. 
மாயையிலிருந்து விடுபட்ட அவர், தன் எல்லா செல்வங்களையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார். தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி நகருக்குச் சென்று ஸ்ரீவியாசராயரை சரணடைந்தார். 

வியாசராயர், விஜய நகர சாம்ராஜ்யத்தில் முக்கிய பதவியில் இருந்ததோடு, திருப்பதி வேங்கடவனின் ஆலயத்தில் பல காலங்கள் சேவை புரிந்தவருமாவார். அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப்பின் ரகசியத்தைச் சொல்லி, அவருக்கு ஞான உபதேசம் செய்தார். அவரே ஸ்ரீநிவாச நாயக்கிற்கு அவருடைய ஊரின் பெயரால் "புரந்தரதாசர்' என்று பெயரிட்டார். 

அந்த குரு பின்னாளில் தன் சிஷ்யனைப் பாராட்டி ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் என்பது பெருமைக்குரியதல்லவா? அதுமட்டுமல்லாமல் பாகவதம் மற்றும் உபநிஷத்துகளின் சாரமாகக் கருதப்படும் ஸ்ரீ புரந்தரதாசரின் பாடல்களைத் தொகுத்து அவற்றிற்கு "புரந்தரோபநிஷத்' என்று பெயரிட்டார் வியாசராயர்.

பண்டரிபுரத்தில் இருந்த ஒரு தாசி மிகவும் அருமையாக பாண்டுரங்கன் மீது பாடல்களைப் பாடுவாள். அவளது குரலிலும், பாட்டிலும் மயங்கிய இறைவன் ஒருமுறை புரந்தரதாசர் வேடத்தில் அவள் வீட்டிற்குச் செல்ல, அந்த தாசி பதறியவளாய் "சுவாமி! இந்த பாவப்பட்ட இடத்திற்குத் தாங்கள் வரலாமா? என்னால் எப்படித் தங்களை வரவேற்க முடியும்?' என்று கண்ணீர் சிந்த, அதற்கு இறைவன் "உன் அழகான பாட்டைக் கேட்கத்தான் வந்தேன்!' என்றார். 

அவளும் பக்திப்பூர்வமாகப் பல பாடல்களைப் பாட, பகவான் மகிழ்ச்சியுடன் தன்னிடமிருந்த தங்கக் கங்கணத்தை அவளுக்குப் பரிசளித்தார். மறுநாள் காலை கோயிலில் பண்டரிநாத சுவாமியின் ஒரு கையில் கங்கணத்தைக் காணாமல் எல்லோரும் தேட, இறுதியில் தாசியினிடத்தில் அது இருப்பதைக் கண்டனர். 

அவளோ தனக்கு புரந்தரதாசர் அளித்தது என்று கூற, அனைவரும் புரந்தர தாசரை ஒரு தூணில் கட்டி வைத்து நையப்புடைத்தனர். தாசர் அந்த அடியைப் பொறுக்காமல் பண்டரிநாதனை வேண்ட, பகவான் அசரீரியாக "தாசரை அடிக்கவேண்டாம்!!' என்றும், தானே அவ்வாறு லீலை செய்ததாகவும், தாசரைக் கட்டி வைத்த தூணுக்கு அன்று முதல் பூஜை செய்யும் படியும் கூறினார். 

பகவான் சொன்னபடியே தாசரைக் கட்டி வைத்த தூணுக்கு பண்டரிபுரத்தில் இன்றும் வழிபாடு நடக்கிறது.

பாரதத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தன் சங்கீதத்தின் மூலம் பக்தியைப் பரப்பிய, கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று போற்றப்படும் ஸ்ரீபுரந்தரதாசர், நான்கு லட்சத்திற்கும் அதிகமாக ஸ்வராவளிகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள், கீர்த்தனைகள் ஆகியவைகளை இயற்றியிருக்கிறார். 

புரந்தரதாசர், பரமாத்மா கிருஷ்ணனைப் பார்த்தது, அவருடன் விளையாடியது, அவருடைய நட்பை அனுபவித்தது, இந்த இடையறாத்தொடர்பு எப்பொழுதும் வேண்டும் என்று நினைத்து உருகியது, இவற்றையெல்லாம் தன்னுடைய கீர்த்தனங்களில் சித்தரித்துள்ளார். 

ராதாவின் தெய்வீகக் காதலிலும் ஒரு புதிய கோணத்தை காட்டியுள்ளார். விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப்பற்றி அவருடைய பாடல்களில் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார். "கோகுல தௌகோர்வ' என்ற கீர்த்தனையில் இந்த விவரங்களைக் காணலாம்.  வைகுண்ட தரிசனக் காட்சியை "வேங்கடாசல நிலையம், வைகுண்ட புரவாசம்...!' என்ற பாடலில் தாசர் விவரிக்கிறார்.

"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா!' என்ற புகழ்பெற்ற பாடல் அவருடையதே. மஹாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு! அவருடைய "ஜகதோ தாரணா...!'வும் கேட்கக் கேட்க பக்தியை நம் மனதில் விதைப்பவை.
ஸ்ரீபுரந்தர தாசர் 80 வருடங்கள் வாழ்ந்தார். 1564 }இல் ரக்தாக்ஷி வருடம் தை அமாவாசை சனிக்கிழமை அன்று அவர் இறைவனுடன் கலந்தார். இந்த தை அமாவாசை தினம் (31.01.2022) அவர் சித்தியான தினமாகும். அன்று நாம் முன்னோர்களை ஆராதிக்கும்போது, அவரையும் நினைவு கூர்ந்து பிரார்த்திப்போமாக!

-ரஞ்சனா பாலசுப்ரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com