கலாசாலை கண்ட அழகிய நரசிங்கப்பெருமாள்

எண்ணாயிரம்  வரலாற்று சிறப்புமிக்க ஊர். சிலேடைக்கவி காளமேகம் பிறந்த ஊர். ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல்  இரண்டும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதே லக்ஷ்மி நாராயண தத்துவம்.
கலாசாலை கண்ட அழகிய நரசிங்கப்பெருமாள்

எண்ணாயிரம்  வரலாற்று சிறப்புமிக்க ஊர். சிலேடைக்கவி காளமேகம் பிறந்த ஊர். ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல்  இரண்டும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதே லக்ஷ்மி நாராயண தத்துவம்.  உக்ரமூர்த்தியாக வலம் வந்த ஸ்ரீநரசிங்கப் பெருமானிடம்  சென்று மஹாலக்ஷ்மி  வணங்கி அவரது மடி மீது அமர   எம்பெருமான்  ஆலிங்கனம் செய்து  உக்ரம் குறைந்து சாந்தமானார்.

விழுப்புரத்திலிருந்து வடக்கு பக்கமாக 20 கிலோ மீட்டர் தொலைவிலும், செஞ்சிக்கு தென் கிழக்காக 16 கிலோ மீட்டர் தொலைவிலும் எண்ணாயிரம் அமைந்துள்ளது. பல்லவர் காலத்துக்கு முன்பே  கோயிலும் ஊரும் இருந்திருக்கிறது. ஆனால் அப்போது பருத்திக் கொல்லை என்ற பெயரில் இவ்வூர் புழக்கத்தில் இருந்திருக்கலாம். எண்ணாயிரம் என்ற கிராமப் பெயர் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.  பல்லவர் காலத்திருந்த இவ்வூரும் பெருமாள் கோயிலும் சோழ மன்னர்கள் விஜயாலயன்,  ஆதித்தன், பராந்தகன் காலத்திலிருந்தே  சிறப்பு பெற்றிருக்கிறது.  கோயில் முழுவதும் பக்தியின் வெளிப்பாடாக மீண்டும் ராஜராஜ சோழன் காலத்தில் எடுத்துக் கட்டப்பட்டு உள்ளது. 

கல்விச்சாலை கண்ட கோயில்: தந்தைக்குப்பிறகு மகன் முதலாம் ராசேந்திரன் காலத்தில் எண்ணாயிரத்தில் இருந்த  கல்லூரியில்  வேதம், வியாகரணம், மீமாம்சம், வேதாந்தம் ஆகியவை கற்பிக்கப்பட்டன.  இந்தக் கல்லூரி மாணவர்களுக்குத் தனியாக விடுதியும்  இருந்துள்ளது.  மாணவர்களின் பயிற்சிக்களமாக அழகிய நரசிங்கப்பெருமாள், சிவன் கோயில்கள் இருந்திருக்கின்றன.

இக்கோயிலுடன் இணைந்த  கல்லூரியில் ரிக், யஜுர், சாமம் ஆகிய 3 வேதங்கள் உட்பட 11 வகையான பாடங்கள் கற்பிக்கப்பட்டன.  இந்தக் கோயில் தஞ்சை ராஜராஜேஸ்வரத்தைப் போலவே நான்கு அடி உயரமுள்ள பீடத்தின் மீது தரைத்தளமாக உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது . கருவறையில் அழகிய நரசிங்கப்  பெருமாள் அமர்ந்த கோலத்தில்  காட்சியளிக்கின்றார்,

இப்போது  ஒரே ஒரு சந்நிதியும் விமானமுமான  இக்கோயிலில் உள்ள முதலாம் ராசேந்திரன் கல்வெட்டு மூலம் ஸ்ரீமூலஸ்தானம் உடையார், இராஜராஜ விண்ணகர ஆழ்வார், குந்தவை விண்ணகர ஆழ்வார், சுந்தர சோழ விண்ணகர ஆழ்வார், ஆகிய கோயில்களைக் குறிக்கின்றது. இராசராச விண்ணகர் ஆழ்வார் கோயில் தற்பொழுது அழகிய நரசிங்கப்பெருமாள் கோயில் என்று வழங்குகிறது. இக்கோயிலில்  ஸ்ரீஅழகியநரசிம்மர், ஸ்ரீவைகுண்டவாசப்பெருமாள் ஆகியோர்  ஒரே சந்நிதியில்   எழுந்தருளியுள்ளனர்.

ஸ்ரீலக்ஷ்மி வராஹ சதுர்புஜ வேணுகோபாலன் ஆகிய இரு மூர்த்திகளும் முன் மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். பருத்திக் கொல்லையம்மாள் வசித்த இடத்தில் ஸ்ரீ ராமானுஜர் திருவடி பிரதிஷ்டை செய்யப்பட்டு ஒரு மண்டபம் அமைத்து  வழிபாடு செய்யப்படுகிறது.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வேணுகோபாலனிடம் வேண்டிக்கொண்டு பலன் பெற்று பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர்.ஸ்ரீ லக்ஷ்மி  வராகரை திருமணம் வேண்டி பிரார்த்தனை செய்து பலன் பெறுகின்றனர். விழுப்புரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்துகள் பிடாரிப்பட்டு என்னுமிடத்துக்கு  எண்ணாயிரம் வழியாகச் செல்கிறது .
விவரங்களுக்கு 9787104244; 93445 03897.

-இரா.இரகுநாதன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com