சுயம்புவாய் வந்த சுமங்கலி

தொடக்கம் முதலே வட பகுதியிலிருந்து  சென்னைக்கோ அல்லது அந்த வழியே செல்லும் வணிகர்கள் அங்கு இறைசக்தி உறைந்திருப்பதை உணர்ந்து வணங்கி விட்டுச்  செல்வார்கள் .
சுயம்புவாய் வந்த சுமங்கலி

தொடக்கம் முதலே வட பகுதியிலிருந்து  சென்னைக்கோ அல்லது அந்த வழியே செல்லும் வணிகர்கள் அங்கு இறைசக்தி உறைந்திருப்பதை உணர்ந்து வணங்கி விட்டுச்  செல்வார்கள் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்தில் உள்ள பலிஜா நாயுடு இனத்தைச் சேர்ந்த வளையல் விற்பவர்கள் மூட்டைகளைத் தலையில் சுமந்தபடி இந்த வழியே கால்நடையாகவே செல்வார்கள். பெண்களின் கையில் வளையல் போட்டு மங்களக் குறியாக, அந்தப் பெண்களுக்கு மஞ்சள்,  குங்குமம் கொடுப்பார்கள்.

ஒரு வளையல் வியாபாரி,  சென்னையில் இருந்து நடைப் பயணமாக ஆந்திர மாநிலத்துக்குத் திரும்பி சென்றுகொண்டிருந்தார். ஆரணி ஆற்றுப்பகுதியில் மதிய உணவு உண்டு வேப்ப மரத்தடியில் வளையல்  மூட்டையை பக்கம் வைத்து சற்று நேரம் தூங்கிக் கண் விழித்தார். வளையல் மூட்டைகள் காணாததை அறிந்து அதிர்ந்தார். 

 அவரது கண்ணில் பெரிய பாம்பு புற்று தென்பட, புற்றுக்குள் எட்டிப் பார்த்து வளையல் மூட்டையைக் கண்டு எடுக்க  முடியாததால், ஆந்திரத்தில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார்.  அன்றிரவு அவர்தூங்கிக் கொண்டிருந்தபோது,  அவரது கனவில் "பவானிஅம்மன்' தோன்றினார்.  ""நான் ரேணுகாதேவி.  புற்றில் சுயம்புவாக பவானி என்ற பெயருடன் அவதரித்து கோயில் கொண்டுள்ளேன். அங்குபக்தர்கள் வழிபடகோயில்எழுப்பு''  என்று உத்தரவிட்டாள்.

மறுநாளே வளையல்,  மஞ்சள்,  குங்குமம் மூட்டைகளுடன் தற்போது கோயிலுள்ள இடத்திலிருக்கும் புற்றுக்கு அவ்வூர் மக்களை அழைத்து, அம்மன் உத்தரவைக் கூறினார்.  மக்கள் கடப்பாரையை எடுத்து வந்து புற்றை இடிக்க "ணங்'' என்று சத்தம் கேட்டது.  புற்றில் இருந்து ரத்தம் வழிந்து பூமியே ரத்தத்தால் சிவந்து போனது. மக்கள் பயத்துடன் புற்றை அகற்றிப் பார்க்க, சுயம்பு அம்மன் மேல் பகுதியில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் பீறிட்டு வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது.

கோயிலும், ஊரும்...:

அதே இடத்தில் சுயம்பு அம்பிகைக்கு கோயில் கட்டப்பட்டது.  அவள் தன்னை பவானி என வழிபட வேண்டும் எனச் சொன்னபடி பெரியபாளையத்து பவானியம்மன்  என்ற திருநாமத்தோடு ஒரு கையில் சக்ராயுதமும், மற்றொரு கையில் கபாலக் கிண்ணமும் ஏந்தியவாறு அருளுகிறாள். இதில்,  மகாலட்சுமி, துர்க்கை,  சரஸ்வதி ஆகிய மூவரும்அடங்கிஇருப்பதாக பக்தர்களிடம்நம்பிக்கை.  அதனால் உலக வாழ்க்கைக்குத் தேவையான செல்வம்,  கல்வி,  உடல் சக்தி  (வீரம்)  மூன்றையுமே அன்னை வழங்குகிறாள். முப்பெரும் தேவிகளும் இவளுடன் இருப்பதால் இவளுக்கு பெரியவள் என்று பெயரோடும் நம்பி,  நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறார்.

15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மன்னராட்சி ஒழிந்து குறுநிலமன்னர்கள் கோலோச்சத் துவங்கினர், அவர்களின் குறுநாடுகள் பாளையம், பட்டு, ஜமீன் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன. அவ்வகையில் பாளையங்களில் பெரியது என்ற அளவில் பெரியபாளையம் அமைந்தது. அதோடு பெரியவளான பவானியம்மன் குடி கொண்டிருப்பதாலும் பெரியபாளையம் என அழைக்கப்பட்டது.

கோயில் அமைப்பு: பெரியபாளையத்தில் ஆரணியாற்றங்கரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் பவானி அம்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தை மூலமாகக் கொண்டு கோயில் ஒவ்வொரு  காலகட்டத்திலும் வளர்ச்சி பெற்றது.  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கூட  இந்தக் கோயில் கருவறை,  ஒரு மண்டபத்துடன் மட்டுமே இருந்தது. தற்போது கருவறையில் மூலவர் பவானி அம்மன் கழுத்தில் கருகமணி, காதில் கனகதோடு, கதம்ப மலர் மாலை,  மஞ்சள்,  குங்குமம், பூமாலையைத் தரித்து,அபய முத்திரையும் உள்ளவளாய், அருளுகிறாள். உள் சுற்றுப் பிரகாரத்தில் பவானி அம்மன் உத்ஸவர் சந்நிதி உள்ளது.

விநாயகர் சன்னதி, அதன்பின் மாதங்கி அம்மன், வள்ளி- தெய்வானை சமேத முருகர்,  பெருமாள்,  தாயார்,  ஆஞ்சநேயர், பரசுராமர்,  புற்று மண்டபம் உள்ளது.  கோயில் கருவறை,  சன்னதிகள் மீது விமானங்கள் உள்ளன.

பிரார்த்தனைகள்:  வேண்டுதலை அடைந்த பலன்களுக்காக, பக்தர்கள் மொட்டைஅடித்தல்,  அங்கப் பிரதட்சிணம்,  அடிதண்டம்,  கோழி, சேவல், ஆடு, கால்நடைகள் காணிக்கை அளித்தல், வேப்பஞ்சேலை உடுத்துதல், பொங்கல் வைத்து கரகம் எடுத்தல் என பலவழிகளில் நேர்த்திக் கடன்களைச் செலுத்துகிறார்கள்.

வழிபாடு: ஆடிப் பெருவிழா  முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடர்ந்து 14 ஞாயிற்றுக்கிழமைகள் பக்தர்களால் சிறப்பு நாள்களாக வழிபடப்படுகின்றன. 

விவரங்களுக்கு: 04427927177, 9444487487.
-இரா. இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com