வானமே கூரையாக வாழும் வெக்காளி அம்மன்

காளி கருணையின் வடிவம்.  ஞானத்தின் திருவுருவம்.  அறியாமை எனும் இருளைப் போக்கும் அவள் நேர்மையின் வடிவம்.
வானமே கூரையாக வாழும் வெக்காளி அம்மன்

காளி கருணையின் வடிவம்.  ஞானத்தின் திருவுருவம்.  அறியாமை எனும் இருளைப் போக்கும் அவள் நேர்மையின் வடிவம். தீமைகளை அழித்து, வெற்றியைத்  தருபவள்.  எந்தவிதத் துன்பங்களிலிருந்தும்  பக்தர்களைக் காத்து,  அவர்களின் பயத்தை நீக்கி தைரியம் தருபவள். 

திருச்சிக்கு அருகில் உள்ள உறையூர் திருத்தலத்தில் வடக்கு நோக்கி யோகப் பீடத்தில் அமர்ந்து,  நான்கு கரங்களில் திரிசூலம், உடுக்கை,  பாசம்,  அட்சய பாத்திரம் ஆகியவற்றை ஏந்தி, அருள் பொங்கும் முகத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறாள் வெக்காளியம்மன். கழுத்தில் திருமாங்கல்யமும்,  முத்தாரம்,  அட்டிகை,  தலையில் பொன்முடி,  கையில் வளையல்கள் அணிந்து,  இடுப்பில் யோகப் பட்டத்துடன்,  பீடத்தில் வலது காலை மடித்தும்,  இடது காலை அசுரன் மீது வைத்தும் அருள்பாலிக்கிறாள் அம்பிகை.  அவள் ஏன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள்? தன் பக்தர்களின் துயரத்தை தன் துயராக ஏற்றுக் கொண்டு அவர்களுக்காகவே தவமிருக்கிறாள் அன்னை!

சிறப்புப் பெற்ற உறையூரை ஆண்டு வந்த பராந்தகச் சோழன் காலத்தில், அங்கு வசித்த சாரமா முனிவர் அபூர்வமான அழகிய பூச்செடிகளைக் கொண்ட நந்தவனத்தை அமைத்து, அதில் மலரும் மலர்களை அருகே உள்ள தாயுமானவ சுவாமிக்கு நாள்தோறும் சமர்ப்பித்து வந்தார். அழகான பூக்களைக் கண்ட ஒரு வணிகன் இந்தப் பூக்களை மன்னனிடம் கொடுத்தால் அவரின்  ஆதரவைப் பெறலாம் என்று நினைத்து,  முனிவருக்குத் தெரியாமல் அங்கிருந்து தினமும் மலர்களை திருட்டுத்தனமாக பறித்து மன்னனிடம் கொடுக்க, மன்னனும் அழகான அம்மலரை தன் பட்டத்து அரசியான புவனமாதேவிக்குச் சூடி அழகுபார்த்தார்.  ஒரு நாள் முனிவர் இதனைக் கண்டறிந்து,  மன்னனிடம் சென்று முறையிட்டார். ஆனால் மன்னன் வணிகன் கொண்டுவரும் பூவின் அழகில் மயங்கி, முனிவரின் முறையீட்டை அலட்சியப்படுத்தினார்.

இதனால் மனமுடைந்த சாரமா முனிவர், திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று எண்ணி, தாயுமானவ சுவாமியை வணங்கி அவரிடம் தன் குறையக் களைய வேண்டினார்.  தன் அடியவர் படும் துயரைத் துடைக்கும் எண்ணத்துடன், கோபக்கனல் கொண்டு அவ்வூரை நோக்கித் தன் பார்வையைத் திருப்ப, உறையூரில் கடும் வெப்பத்துடன் மண் மழை பொழிந்து, எல்லாம் அழிந்தது. அங்கு வசித்த மக்கள் செய்வதறியாது காளியிடம் சரண் புகுந்தனர்.

அம்பிகை, தம் மக்களுக்காக தாயுமானவரிடம் வேண்ட, மண் மாரி பொழிவது நின்றது.  இந்த மழையில் கர்ப்பிணியாய் இருந்த புவனமா தேவியும் சிக்கிக் கொண்டாள். வெப்பம் தாங்காமல் அருகில் ஓடிய காவிரியாற்றில் குதிக்க, நீரால் இழுத்துச் செல்லப்பட்டு உத்தமச்சேரி என்ற இடத்தில் ஒரு அந்தணனால் காப்பாற்றப்பட்டாள். அங்குதான் கரிகால் பெருவளத்தான் பிறந்தான். காளியின் கருணையால் காப்பாற்றப்பட்டு, சோழர் குலம் தழைத்ததால், புவனமாதேவி அவளின் பக்தையாக மாறினாள். 

அம்பிகையின் கோயில் சிறு கோபுரத்துடன் கூடிய ஒரு எழிலான மண்டபமாகக் காட்சி தருகிறது.  வெட்ட வெளியில் நடுநாயகமாக வடக்கு முகமாய் அருள்காட்சி வழங்கும் அன்னையைச் சுற்றிலும் வல்லப கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி } தெய்வானை சமேத மயூர முருகன், காத்தவராயன், புலி வாகனத்துடன் கூடிய பெரியண்ணன், மதுரை வீரன், உத்ஸவர் வெக்காளி, வடக்கு சுவரில் துர்க்கை, பொங்கு சனீஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். 

அம்மன் சந்நிதியின் எதிரே நடப்பட்டுள்ள சூலங்களில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை சீட்டில் எழுதி அதனை அம்மனிடம் வைத்து எடுத்து, சூலத்தில் கட்டி விடுகின்றனர். இதனால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக அமைந்துள்ளது. 

கோயில் திருக்குடமுழுக்கு அண்மையில் நடைபெற்றது.  விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: 0431}2761869. 

-அபிராமி மைந்தன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com