கார்த்திகை மாத நாயகன்

இலவஞ்சி அரசன் மகள் பூரணாம்பிகையும்,  நேபாள  அரசன் பிகரஞ்சன் மகள் புஷ்கலாம்பிகையும்  ஐயனாரின் வலது இடது புறங்களில் அமர்ந்து தனித்தனி மூர்த்தங்களாக...
கார்த்திகை மாத நாயகன்

இலவஞ்சி அரசன் மகள் பூரணாம்பிகையும்,  நேபாள  அரசன் பிகரஞ்சன் மகள் புஷ்கலாம்பிகையும்  ஐயனாரின் வலது இடது புறங்களில் அமர்ந்து தனித்தனி மூர்த்தங்களாக  ஒரே பீடத்தில் அமர்ந்து  இயற்கைச் சூழலில் வனத்தின் நடுவே அமைந்து இருக்கும் சக்தித் தலம் கீழ்புத்துப்பட்டு அருள்மிகு மஞ்சனீஸ்வரர் கோயில்.  சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பாக தந்திணீஸ்வரத்தில் இருந்து எயிற்பா பட்டினம் வரை ஆட்சி செய்த குலோத்துங்க சோழனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது.

இந்த ஊர் புதுச்சேரியில் இருந்து  15 கி.மீ. தொலைவிலும்,  திண்டிவனத்தில் இருந்து   40 கி.மீ. தொலைவிலும், மரக்காணத்தில் இருந்து  16 கி.மீ தொலைவில்  உள்ளது .

ஒருநேரம் பகாசுரன் சிவனிடம்  தவம் செய்து, "தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாக  வேண்டும்'  எனக் கேட்க, அவரும் அருளினார்.   சோதித்துப் பார்க்க விரும்பி,  சிவன் தலையிலேயே கை வைக்கப் போனான். அவனிடமிருந்து விலகி, பச்சைப்பட்டுக்குடை போலிருந்த  வேல மரவனத்தில்    ஒரு புற்றில் தவம் செய்ய சென்று அமர்ந்தார் சிவன்.  வேல வனம் புற்றுகள் நிறைய இருந்தால் புற்றுப்பட்டு "புத்துப்பட்டு' என அழைக்கப்பட்டது.  அங்கும் பகாசுரன் தொடர்வதை  அறிந்த சிவன்  வேல மரத்தில் தொங்கும் காய்களில்  ஒன்றாக உருமாறினார்.   பகாசுரன் வேலங்காயை உண்ணும் ஆடாக மாறி,  அனைத்து காய்களையும் கடித்து உண்ணத் துவங்கினான்.

நிலைமை உணர்ந்த சிவன், திருமாலை துணைக்கு அழைக்க, வந்த திருமாலும் அழகிய பெண்ணின் உருவில் மோகினியாக உருமாறி நிற்க,  அந்த அதிரூப சுந்தரியின் உருவைக் கண்டு மிகு காமம் கொண்டான்.

மோகினியிடம்  இச்சையோடு நெருங்க , காட்டில்  கடும்தவம்  புரிந்து வரும் அவனை சுத்தப்படுத்திக் கொண்டு வரச் சொன்னாள். பகாசுரன் அருகில் இருந்த கழுவெளியில் சென்று தண்ணீரை கையால் தொட்டு கழுவிக் கொண்டு இருந்தான். பெற்ற வரம் மறந்து மெல்ல  தலைக்குக் கையைக் கொண்டு சென்று தண்ணீரைத் தொட்டு துடைத்தான்.  அடுத்தகணம்  சிவனிடம் பெற்ற வரத்தால் தீப்பற்றி எரிந்து பகாசுரன் பஸ்மாசுரன் ஆனான்.

வேல மரத்தில் யோகத்தில் இருந்த சிவன் வெளிவந்தார்.  மக்களைத் துன்பங்களில் இருந்து விடுவித்து  நல்லதை அருள  சிவ-விஷ்ணு சக்திகள் ஒன்றிணைந்து மக்களைக் காக்கும் மற்றொரு சக்தியாக புத்துப்பட்டில் உருவாயிற்று. அந்த சக்தி மேகம் போல் (மஞ்சு - மேகம்) மஞ்சனி என்ற பெயரோடு உருவாகியது. 

காவல் தெய்வம்:   "ஐயனார் மக்கள் பகலில் புரியும் பூஜைகளை ஏற்கிறார். இரவு நடை அடைத்தபிறகு  விண்ணுலகம் சென்று தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், நாகலோகத்து நாகர்களின் பூஜைகளை ஏற்று கிளம்புவார்.  நள்ளிரவில்  தனது வெள்ளைக் குதிரையில்,  பரிவாரங்கள், மலையாளத்தார் ஆகியோருடன் தேச மக்களைக் காக்க  "மஞ்சு' என்னும் மேகங்களூடே சென்று மக்களின்  குறைகளைத்தீர்த்து, மறுநாள் காலை  மக்கள் தரும் பூஜையை  ஏற்க வருகிறார்'  என வரலாறு கூறுகிறது.  மஞ்சு எனும் மேகத்தை அணியாகக் கொண்டு சென்று மக்கள் குறை தீர்த்து வருவதால் மஞ்சு +அணி +ஈஸ்வரன் மஞ்சனீஸ்வரர் பேச்சுவழக்கில் வழங்குகிறது.

பலியும் புலியும் கிடையாது: புத்துப்பட்டில்  மால்- ஈஸ்வர யோக ஞான சக்திகளின் ஒருங்கிணைப்பினால் உருவானதால் புலி வாகனம் கிடையாது. ஞானத்தின் குறியீடாக  வெள்ளைக்குதிரையும் சக்தியின் அடையாளமாக யானையும் உண்டு . பலி போன்றவை காட்டின் நுழைவாயிலில் உள்ள மலையாளத்தாருக்கு மட்டுமேயாகும். மக்களால் மஞ்சனீஸ்வரருக்கு பொங்கல் மட்டுமே  பொங்கி நிவேதனத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. 

கார்த்திகைக் கட்டு: சபரிமலைக்கு இருமுடி கட்டியவர்கள்  வணங்கும் முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று. 

பிரார்த்தனையும் பரிகாரமும்: தம்மை ஏளனமாகப் பேசியவர்களுக்கு வாய்க்குப் பூட்டுப் போடும் வாய்ப்பூட்டு பிராத்தனை உண்டு.  கோரிக்கைச் சீட்டாக எழுதி அய்யனார் காலில் கட்டி   பிரார்த்தனை செய்தல் உண்டு. குலத் தெய்வக்காரர்கள்  "மொட்டை, காதுகுத்தல்' போன்ற வேண்டுதல்களை மேற்கொள்கின்றனர். அய்யனார் குதிரைக்குத் துணையாக குதிரைக் குட்டிகள் பொம்மை செய்து வைத்தல்,  பொங்கல் வைத்து மஞ்சனீஸ்வரருக்கு படையல் செய்தல், ஆடு கோழி காணிக்கைகளை மளையாளத்தார் சந்நிதியில் விடுதல்,  அய்யனார் குதிரைகாலில் சீட்டு கட்டுதல் போன்ற பிரார்த்தனைகள் உள்ளன.

திருமணத் தடை நீக்கம்,  குழந்தைப்பேறு,   மன வளமை, தேக ஆரோக்கியம், சத்ரு சம்காரம் போன்றவை இவரை வேண்டி  பெற்றது பலரின் அனுபவம். மஞ்சனீஸ்வரரை சனிக்கிழமைகளில் வணங்கினால், தோஷங்களின் தாக்கம் குறையும்.

தரிசனம்:   தினமும் காலை 7 மணி முதல் மாலை  6 வரை கோயில் திறந்திருக்கும்.  திங்கள்,  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷம்.   ஆடி, தை ,  கார்த்திகை மாதங்களில் அனைத்து நாள்களிலும் சிறப்புப் பூஜைகள் உண்டு.

தொடர்புக்கு : 99947 07957 ,  97870 66564.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com