தாலி பாக்கியம் அருளும் தயாபரி

மங்கலக்குடி,  மங்களாம்பிகை,  மங்கள விமானம், மங்களத் தீர்த்தம்,  மங்கள விநாயகர் என்று ஐந்தும் மங்களமே உருவாக இருப்பதால் "பஞ்ச மங்கள ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
பிராணவரதேஸ்வரர் -  மங்களாம்பிகை
பிராணவரதேஸ்வரர் -  மங்களாம்பிகை

""பிராணன் தந்த பிராணவரதேஸ்வரர் -  மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை''  என்று அழைக்கப்படும் திருத்தலம் திருமங்கலக்குடி.  சம்பந்தர்,  அப்பரால் பாடப் பெற்றது.  மங்கலக்குடி,  மங்களாம்பிகை,  மங்கள விமானம், மங்களத் தீர்த்தம்,  மங்கள விநாயகர் என்று ஐந்தும் மங்களமே உருவாக இருப்பதால் "பஞ்ச மங்கள ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்த அலைவாணர்,  அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் கோயில் கட்டினார். இதனால் கோபம் கொண்ட மன்னரின் உத்தரவின்படி,  அமைச்சர் சிரச் சேதம் செய்யப்பட்டார்.  அமைச்சரின் மரணத்தை அறிந்த மனைவி,  கோயிலில் உள்ள மங்களாம்பிகையிடம் சென்று உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டினாள்.  அம்பிகையும் ஈசனிடம் கேட்டுக் கொள்ள,  அமைச்சரும் பிழைத்தெழுந்தார். 

உயிர்த்தெழுந்த அமைச்சர் மகிழ்ச்சியில்,  ஈசனை "பிராணநாதா'  என்று கூறி பூஜித்தார். அன்று முதல் ஈசன் "பிராணநாதேசுவரன்'  என்று அழைக்கப்பெற்றார்.

"நவக் கிரகங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது'  என்றும், "முற்பிறவியில் செய்த பாவ,  புண்ணியத்தின் பலனை மட்டுமே தர வேண்டும்'  என  பிரம்மா பணித்திருந்தார். காலவ முனிவர், தனக்கு ஏற்படவிருந்த தொழுநோய் வராதிருக்க,  நவக் கிரகங்களை ஆராதிக்கவே வரமும் கிடைத்தது. இதையறிந்த பிரம்மா, காலவ முனிவருக்கு சாபமிட்டார். இதிலிருந்த விடுபட, பிரம்மா  கூறியபடி திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு வனப் பகுதியில் கார்த்திகை மாத முதல் ஞாயிறு முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் 9  தீர்த்தங்களில் நீராடி, பின்னர் திங்களன்று காவிரியில் நீராடி பிராணநாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டார். பின்னர்,  எருக்க இலையில் தயிர் சாதம் நைவேத்யம் செய்து அந்த பிரசாதத்தைப் புசித்து சாப விமோசனம் பெற்றார். 

கோயில் கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் அமைந்துள்ள இத்தலத்தின் தல விருட்சம் வெள்ளெருக்கு.  ப்ராணநாதேஸ்வரர் என்ற பெயருடன் நீண்ட பாண வடிவில் சுயம்பு லிங்கமாக ஈசன் அருள்பாலிக்கிறார்.  சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரைவிட உயரமாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர்.  உள் சுற்றில் விநாயகர், ஆறுமுகர்,  கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும், நடராஜ சபையும் உள்ளன. நடராஜர் சந்நிதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்துக்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. 

சிவன் சந்நிதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல காட்சி தருகின்றனர். இருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார். 

பிரகாரத்தில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்  ஆகியன சிவனது இரண்டு கண்களாக இருப்பதாக ஐதீகம். சிவன் சந்நிதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். இதுதவிர, சிவதுர்க்கை,  சோமாஸ்கந்தர் சந்நிதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவிரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். 

காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், சூரியன், அம்பாள் ஆகாசவாணி , பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். நவக் கிரகங்கள் சிவனை வழிபட்ட தலமென்பதால் நவக்கிரகங்களுக்கு இங்கு சந்நிதி இல்லை.  கோயிலில் வழிபட்ட பின்னர் சற்று தொலைவில் அமைந்துள்ள சூரியன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

பலன்கள்: தோல் நோய் உள்ளவர்கள் வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. பித்ரு தோஷம் உள்ளவர்கள் சுவாமிக்கு தயிர்சாத நைவேத்யம் படைத்து வழிபடுகின்றனர்.  

தனிச்சந்நிதியில் தெற்கு நோக்கி வரப்பிரசாதியாக அருள்பாலிக்கும் அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறுகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த மாங்கல்ய சரடுகள் பெண்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. மங்களாம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியன நீங்கப்பெறும். 

கோயில் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறையை அடைந்து,  அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com