ஐப்பசி ஓடத்திருநாள்

சிவத் தலங்களைத்  தரிசனம் செய்து வந்த திருஞான சம்பந்தர், திருக்கொள்ளம்புதூர் ஈசனை வணங்க வந்துகொண்டிருந்தார்.
ஐப்பசி ஓடத்திருநாள்

சிவத் தலங்களைத்  தரிசனம் செய்து வந்த திருஞான சம்பந்தர், திருக்கொள்ளம்புதூர் ஈசனை வணங்க வந்துகொண்டிருந்தார். ஐப்பசி அமாவாசை நாள் தீபாவளியன்று கோயிலுக்கு அர்த்தஜாம பூஜையில்  தரிசிக்க வருவது குறித்து தகவல்  அனுப்பியிருந்தார்.  அவர் தம் அடியார்களுடன் முள்ளி ஆற்றைக் கடக்க அக்கரையில் நின்று கொண்டிருந்தார்.  ஓடக்காரர்கள் ஈசனைத் தரிசிக்கவும் ஞானசம்பந்தரின் நற்றமிழை கேட்கவும் ஓடங்களைக் கரையில் நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டனர்.  

கோயிலில் அர்த்தஜாமம் செய்யாமல் நிர்வாகிகள் பூரணக் கும்பத்துடன் சம்பந்தர் வரவுக்காகக் காத்திருந்தனர். அக்கரையில் நின்ற திருஞானசம்பந்தர் ஓடம் இயக்க யாரும் இல்லாததால்,  தாமே படகை அவிழ்த்து அதில் அமர்ந்து அடியவர்களையும் அமரச் செய்தார். வெள்ளத்தைக் கடந்து படகு சென்று  மறுகரையை அடைந்தபோது,   அதிகாலை ஆகிவிட்டது.  ஈசனை வணங்கி 10 பாடல்கள் கொண்ட பதிகத்தை பாடி முடித்தார்.  

திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 113}ஆவது சிவத்தலமாகும்.  இந்தக் கோயிலுக்கு  பிரம்மவனம், காண்டீபவனம்  பஞ்சாக்ஷரபுரம் ஆகிய பெயர்கள் உண்டு.  இத்தலம் வில்வவனம் } கூவிளவனம் என்னும் சிறப்புக் கொண்டது. கூவிளம் என்றால்  வில்வம் ஆகும். கூவிளம்புதூர் என்பது கொள்ளம்புதூர் என மருவியது.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத் திவலைகள் சிதறி இங்கு விழுந்து, வில்வ மரங்களாக மாறி, தலமரமாக  வில்வவனம் ஆகியது . சிவலிங்கமாய் எழுந்தருளும் கருவறை  இறைவன் வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர் எனப்படுகிறார்.  இறைவி செüந்தரநாயகி, அழகு நாச்சியார் எனும் பெயர்களிலும் வணங்கப்படுகிறார்.   செüந்தர மகாலட்சுமியும் வில்வாரண்யத்தில் எழுந்தருளியுள்ளாள்  கொடிமரம் தாண்டி, மண்டபத்துக்குள் தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி உள்ளது.  

1947}இல்  ஆசிரியர் சுவாமி விபுலானந்தர் "யாழ்நூல்'என்னும் இசைக் கருவியைப் பற்றிய நூலை இங்கு  வெளியிட்டார். விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகு முனிவர், காஸ்யபர், கண்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர் முதலியோர்  வழிபட்ட தொன்மையும் சிறப்பும் வாய்ந்த தலம் .
சித்தப் பிரமை உள்ளவர்கள், மனக் குழப்பத்தில் தவிப்பவர்கள்,  பயத்துடன் கலங்குபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் மனதில் தெளிவு பிறக்கும் 
என்பது ஐதீகம்.

கோயில் அமைப்பு:  கோயிலின் முன் பிரம்மத் தீர்த்தம்,முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்ரமணியர் சுதைத் திருமேனிகளுடனுள்ளது.  துவார விநாயகர்  உள்ளே  நந்தவனத்தில்  5 நிலையுடைய இரண்டாம் கோபுரம் வாயிலில் இருபுறமும் விநாயகர், தண்டபாணி சந்நிதிகள், பிரகாரவலத்தில் கோயில் வரலாற்றுடன் தொடர்புடைய சந்நிதிகள் அமைந்துள்ளன.

மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கசோழன் காலத்திய கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன. கல்வெட்டுக் குறிப்பில் சுவாமி "கொள்ளம்புதூர் உடையார்' என்றும், தேவி "அழகிய நாச்சியார்' என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.

ஓடத்திருவிழா:  திருஞான சம்பந்தர் இத்தலத்துக்கு வருகை தந்ததை நினைவு கூரும் வகையில் ஓடத்திருவிழா ஐப்பசி அமாவாசை மறுநாள்  நடக்கிறது. இந்த ஆண்டு (2022) அக். 24}ஆம் தேதி இரவு  6 மணி முதல் 7.30 மணிக்குள் பக்தர்கள் கங்கை நீராட்டம் செய்வார்கள்.

அக்.  25}ஆம் தேதி  இரவு  10 மணிக்கு சம்பந்தப் பெருமான் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகி அக்கறைக்கு செல்வார்.  விடியற்காலை 4 மணிக்கு மேளதாளம் முழங்க திருஞான சம்பந்தரின் உத்ஸவத் திருமேனியை படகில் வைத்து ஓதுவார்கள். 

தேவாரம் ஓத, முள்ளி ஆற்றின் அக்கரையிலிருந்து இக்கரைக்கு வரும் . அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் படகு கரைசேரும். அங்கே ஞானசம்பந்தப் பெருமானுக்கு ஞானப்பால் தந்து  ரிஷபாரூடராய் வில்வவனநாதர் ஞான சம்பந்தரை எதிர்கொண்டழைத்து ஆலயத்துக்கு அழைத்துச் செல்வார். இந்த விழாவுக்காகவே இறைவன் திருவருளால் அன்று முள்ளியாற்றில் நீர் கரைபுரண்டோடும் அதிசயம்1300 ஆண்டுகளுக்கு மேலாக  இன்றுவரை தொடர்கிறது.  அக். 26-இல்  கோயிலில் அர்த்தஜாம பூஜை நடக்கும்.  இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீக விழா நடைபெறும்.

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவில் பேருந்து வசதிகளுடன்  இத்தலம் அமைந்துள்ளது. 

தொடர்புக்கு - 9943019181; 7502281432.

ஆர்.அனுராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com