பகை விலக்கி வளம் கூட்டும் பகளாமுகி

எதிரி என்று எதிரில் வந்து நின்றால் அம்பை விடு;  அன்பு காட்டி நெகிழ்ந்துவிடாதே! என்று பாரதப் போரில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சொன்னார்.
பகை விலக்கி வளம் கூட்டும் பகளாமுகி


உத்யோக சத்ரு (பணி செய்யும்போது கூடவே இருந்து இடையூறு செய்பவர்கள்),  அந்தர் சத்ரு  (கண்களுக்கு தெரியாமல் இருந்து இடர் தருவோர்),   பஹிர் சத்ரு (திடீரென உருவாகி நம்மை நிலைகுலையச் செய்வோர்) ஆகிய  மூன்று வகையான சத்ருக்களை வாழ்வில் நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.  

"எதிரி என்று எதிரில் வந்து நின்றால் அம்பை விடு;  அன்பு காட்டி நெகிழ்ந்துவிடாதே!' என்று பாரதப் போரில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சொன்னார். இந்தக் கலியுகத்தில் எதிரிகள் எந்தத் திசையில் இருந்தும் வரலாம். "தசமஹா வித்யா' என்னும் பத்து வகையான தந்திர வித்யைகளில் எட்டாவது தந்திரமே பகளாமுகியின் எதிர்ப்பை விலக்கி நலம் கூட்டும் மகா கவசம். 

முற்காலத்தில், கிருத யுகத்தில் மூன்று பக்கங்களிலும் கடல் பொங்கி மகா பிரளயம் ஏற்பட்டபோது,  பாற்கடலில் பள்ளிகொண்ட ஸ்ரீமன் நாராயணன், சிவனைத் தியானிக்க, அவர் பகளாமுகி தேவியின் மூல மந்திரத்தை பிரம்மாஸ்திரமாய் உபதேசம் செய்தார்.

மகா விஷ்ணு பகளாமுகியை ஆராதனை செய்ய, மகிழ்ச்சி அடைந்த தேவி, நீரில் தன்னுடைய விளையாட்டை நிகழ்த்த எண்ணி, செüராஷ்டிர தேசத்தில் உள்ள மஞ்சள் நீர் நிரம்பிய திருக்குளத்தில் பிரம்மாஸ்திர ரூபினியாக அவதாரம் எடுத்து, மூன்று உலகையும் ஸ்தம்பிக்கச் செய்து, சூறாவளி, கடல் சீற்றத்தை நிறுத்தினாள். தேவரும், மும்மூர்த்திகளும் துதித்து "ஸ்தம்பினி' என்று போற்றினர். இவளே மதம் கொண்டு எதிர்த்த பஸ்மாசுரனிடம் இருந்து பரமனையும் காத்து நின்றாள். இந்த மகா சக்தியே திருவானைக்காவலில் அருளாட்சி புரியும் வராஹி தேவியின் அம்சம் உடையவள். 

முன்னொரு காலத்தில் போரில் தோற்றோடிய அசுரர்கள், தேவர்களுக்கு தீமை உண்டாக்க நினைத்தனர். சிதறிய சில தேவர்களது தசை, எலும்பு, நகம், தலைமுடிகளைச் சேகரித்து பூமியில் புதைத்து துர்மந்திரப் பூஜை செய்தனர்.  இதைத் திரும்ப எடுத்து செயலிழக்கச் செய்யும் முறைக்கு "வலஹணம்' என்று பெயர்.

அதர்வண வேதத்தில் "பகளாமுகி சுக்தம்' என்னும் 12 செய்யுள் கொண்ட பகுதியில் "வல்கா'  என்னும் பதம் இதை எடுத்துச் சொல்கிறது.  வல்கா என்றால் லகான்  - குதிரையின் கடிவாளம்  எனப் பொருள்படும். இதுவே "வல்காமுகி' என்றாகி பின்னர் மருவி "பகளாமுகி' என்றானது.

தேவியின் தோற்ற மகிமை:  அமிர்தக் கடலில் நவமணிகள் நடுவில் ரத்தினப் பரல்கள் நிறைந்த மாளிகையில் தங்க நிற மேனியோடு பிறைச் சந்திரனைத் தலையில் சூடி, வானவில்லை பிரதிபலிக்கும் புருவங்களைக் கொண்டவளாக, எதிரியின் நாக்கை இழுத்து, கதையால் சிரசில் அடித்து புத்தி புகட்டுகிறாள். இடது கால் முட்டியால் எதிரியின் மார்பை அழுத்தி அவனைச் செயல் இழக்கச் செய்து நகர விடாமல், தவறுகளை உணர வைக்கும் ஏகாந்த வடிவினளாகக் காட்சி தருகிறாள்.

இந்த உலகில் மற்ற வர்ணங்கள் ஒளி குறைந்துவிட்டால் முடிவில் மஞ்சள் நிறமாக மாறிவிடும். அவ்வாறே மனிதர்களின் சக்தி குறைந்தால் பீதாம்பரி எனும் மஞ்சள் நிறமாகி விடுகிறது. இதை விளக்குவது பகளாமுகி பூஜா கல்பம். மஞ்சள் நிற ஆடை அணிந்து, அதே நிற பூஜை சாதனங்கள், நிவேதனங்கள் எல்லாம் இவளுக்கு மஞ்சள் வர்ணத்திலேயே செய்து வந்தால் வெற்றிகளைக் குவிப்பாள் என்பது ஐதீகம்.

"யுகங்கள் தோறும் எங்கேனும் இந்த மகா சக்தி தோன்றுவாள்' என்ற சாஸ்திரச் சொல்லின்படி, 2006}இல் சோமநாதன் என்ற அந்தணனின் கனவில் தோன்றி, தனக்கு கோயில் எழுப்பி பக்தர்கள் குறைகளைப் போக்கி, மங்கள வாழ்வுக்கு மந்திர உபதேசம் செய்யப் பணித்தாள் பகளாமுகி.

ஓர் ஓட்டுக் கட்டடத்தில் உற்சவர் சிலை வழிபாட்டைத் தொடங்கி, 2017}இல் நான்கு பட்டை வேத விமானக் கருவறையில் சிம்ம பீடத்தில் மூலஸ்தானத்தில் தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டாள். ஆகம விதிப்படி,  குடமுழுக்கும் நடைபெற்றது. கருவறைக்கு எதிர்ப்புறத்தில் காப்புக் கணபதியாக "ஹரித்ரா கணபதி' வீற்றிருக்க, மகா மண்டபத்தில் பாலாம்பிகா உடனுறை அமிர்த மிருத்யுஞ்சயராக சிவலிங்கத் திருமேனியும் காட்சி தருகின்றனர்.

கோயிலைச் சுற்றி நான்கு வில்வ மரங்கள் திசைகளைக் காட்டி நிற்க, மூலிகைத் தென்றல் நம் உடலை வருடும்போது பேரானந்தம் உண்டாகிறது.  கோயிலின் வடகிழக்கு ஈசானிய திசையில் அம்பிகையின் அமிர்த நீர் சுரக்கும் நாழிக்கிணறு "பகளா தீர்த்தம்' என்ற பெயரில் நோய் அகற்றும் அமிர்த சஞ்சீவினியாக உள்ளது.

செவ்வாய், ஞாயிறு, வெள்ளிக்கிழமைகள் வழிபாட்டுக்கு உகந்த நாள்கள். தேய்பிறை சதுர்த்தசி நாளில் எதிர்ப்புகளை அகற்றி நலம் பயக்கும் "விரும்பாஸ்திர யக்ஞம்' என்ற பூஜை நடத்தப்படுகிறது.  ஆக. 29}இல் பகளாமுகி ஹோமம் ஆவணி அவிட்டம்,  பெளர்ணமி தீப வழிபாடு, ஆகியன நடைபெறவுள்ளன.  

சென்னை அருகேயுள்ள  வல்லக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து எரையூர் போகும் வழியில் 1 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. 

விவரங்களுக்கு: 9789803857.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com