ஸ்ரீரங்கத்தில் மன்னரின் உருவச் சிலை!

ஸ்ரீரங்கம் பெருமாள் மீது  தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் விசயரங்கன் மிகுந்த பக்தி கொண்டவர்.
ஸ்ரீரங்கம் (கோப்பிலிருந்து)
ஸ்ரீரங்கம் (கோப்பிலிருந்து)


ஸ்ரீரங்கம் பெருமாள் மீது  தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் விசயரங்கன் மிகுந்த பக்தி கொண்டவர். அவர் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற கற்பூரப் படியேற்ற விழாவுக்கு வருகை தருவதற்குள் விழா நிறைவடைந்தது.  மீண்டும் ஒருமுறை விழா நடத்த முடியாது. இதனால் மன்னர் தனது குடும்பத்தினர், அமைச்சர்கள், சகாக்களுடன் வலப்புற பிரகாரத்தில் தங்கிவிட்டார். ஓராண்டு கோயிலிலேயே தங்கியிருந்து, கற்பூரப் படியேற்ற விழாவைக் கண்ட பின்னரே புறப்பட்டு சென்றார். இவ்வாறு, மன்னர் ஓராண்டு தங்கியிருந்த இடத்தில் இன்றும் மன்னர், அவருடைய மனைவி ஆகியோரின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

-தேனி பொன்.கணேஷ்

கோயில் வழிபாடு

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. குறிப்பாக, சில கோயில்களில் சில பூஜைகளைத் தரிசித்து வழிபட்டால், சிறப்பான பலன்களைப் பெறலாம்; கோயில்கள் வாரியாக, பங்கேற்க வேண்டிய பூஜைகள்:
திருக்குற்றாலம் கோயில்- திருவனந்தல் பூஜை,  ராமேசுவரம் கோயில்- காலை நேர பூஜை,  திருவானைக்காவல் கோயில்- மதிய பூஜை,  திருவாரூர் கோயில்- மாலை நேரப் பூஜை,  மதுரை மீனாட்சியம்மன் கோயில்} ராகு கால பூஜை,  சிதம்பரம் நடராஜர் கோயில்} அர்த்தஜாம பூஜை.

உத்தராயண மகிமை

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் எனப்படும். இது தேவர்களுக்கு பகல் காலம் என்பர். மங்களகரமான காரியங்கள் உத்தராயணத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும். அதனால்தான் தட்சிணாயன காலத்தில் (பாரதப் போர் நிகழ்ந்தபோது..) அடிபட்டு கீழே விழுந்த பீஷ்மர், தன் இறப்புக்காக உத்தராயண புண்ணிய காலம் வரும்வரை காத்திருந்து உயிர்நீத்தார். உத்தராயண புண்ணிய காலம் தை மாதம் தொடங்குவதால்தான் தை மாதப் பிறப்பு பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

-அ.யாழினி பர்வதம், சென்னை}78.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com