கங்கையை மணந்த கங்காதரன்

கர்தர்ப்ப நகரத்தில் ரேணு என்ற முனிவர் சிவனை நினைத்து "கங்கை தேவியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்' என்று கடும் தவம் புரிந்தார்.
கங்கையை மணந்த கங்காதரன்

கர்தர்ப்ப நகரத்தில் ரேணு என்ற முனிவர் சிவனை நினைத்து "கங்கை தேவியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்' என்று கடும் தவம் புரிந்தார். அதே சமயம் கயிலையில் வீற்றிருந்த சிவனை - தன்னை அவரோடு இணைத்துக் கொள்ளும்படி பிரார்த்தித்தாள் கங்கை. இதைக் கண்டு ஆவேசம் அடைந்த பார்வதி தேவி, "நீ பூலோகத்தில் மானிடராய் பிறப்பாய்' என்று கங்கைக்கு சாபம் கொடுத்தாள். ஒருநாள் ரேணு முனிவர் தனது தர்மபத்தினியுடன் துயிலும்போது, நடுவே குழந்தையாக வந்து விழுந்தாள் கங்கை தேவி. மகிழ்ந்த தம்பதியர் குழந்தைக்கு "ஆதிரை' என்று பெயரிட்டனர். ஆதிரை எட்டு வயதை எட்டினாள்.

களந்தையை (களக்காடு) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த அரசனுக்கு புத்திர பாக்கியம் இல்லாததால், ஆதிரையை பார்த்ததும் மிகவும் பிடித்துப் போய், தத்து கேட்டார் அரசன். ரேணு முனிவரும் சம்மதித்தார்.

அரச மாளிகையில் ஆதிரை சிவனையே பூஜித்துவந்தாள். அவளது வழிபாட்டால் மகிழ்ந்த சிவன், வெள்ளி ரிஷபத்தின் மேல் வந்து, காட்சி கொடுத்து மந்திரேசுரம் அழைத்துச் சென்றார். மகளைக் காணாத மன்னன் மனமுடைந்து உயிரை விட்டு விடும் செயலில் ஈடுபட முயன்றார். அப்போது ஓர் அசரீரி , "பொருநை நதிக்கரை அருகே மந்திரேசுரத்தில் சிவன் ஆதிரையோடு வீற்றிருக்கிறார். நீ அங்கு சென்று யாகம் செய். உன் மகள் உனக்குத் தெரிவாள்' என்றது. மன்னனும் யாகம் மேற்கொள்ள தூய ஓமகுண்டத்தில் இருந்து ஓங்கி ஒலித்த பிரணவ மந்திரத்தோடு சிவன் ஆதிரையுடன் தோன்றினார்.

"இறைவா... ஆதிரையை என் கண்முன்பு கரம் பிடியுங்கள்'என்று மன்னன் கேட்க, இறைவனும் சம்மதித்தார். அதன்படி குறிப்பிட்ட நாளில் திருமணம் நடந்தது. அனைவரும் விண்ணுலகம் செல்ல தயாரான நிலையில் அரசனால் தன்னுடைய மகளைப் பிரிய மனம் இல்லாமல் தேம்பி நின்றார். அதைக் கண்ட சிவன் ஆதிரையை பாதியாகப் பிரித்து ஒரு பாதியை தன் தலையில் வைத்துகொண்டு, மற்றொரு பாகத்தை அரசன் ஆட்சிக்குட்பட்ட வயிரமலையில் விட்டார். அங்கிருந்து புறப்பட்ட கங்கை, தாமிரவருணி நதியில் கலந்து மந்திரேசுர ஆலயத்தின் அருகே வந்து சேர்ந்தது.

ஆதிரை - நதியாய் ஓடிய காரணத்தால் அந்த நதிக்கு "ஆதிரா நதி' என்று பெயர் வந்தது. இந்த நதியைத்தான் "பச்சை ஆறு' என்றும் அழைக்கின்றனர். சிவனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடக்க தேவதச்சனால் கட்டப்பட்ட கோயில் பத்தமடை வழியாக, பிராஞ்சேரி என்னும் ஊருக்கு அருகேயுள்ள மேலஓமநல்லூர் என்ற இடத்தில் இருக்கிறது. சுவாமிக்கு ஸ்ரீ மந்திர மூர்த்தி என்ற திருநாமமும் உள்ளதால், செய்வினை கோளாறினால் பாதிப்படைந்தோர் இங்கு வந்து மனமுருகி வழிபட்டால் அனைத்தும் விலகி விடும் என்பது ஐதீகம்.

பத்தமடை வழியாக திருநெல்வேலி } பாபநாசம் செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது பிராஞ்சேரி.

தொடர்புக்கு: 99946 77321

- ர. முத்துசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com