Enable Javscript for better performance
சித்திரை முழுநிலவுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு?- Dinamani

சுடச்சுட

  

  சித்திரை முழுநிலவுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு?

  By kirthika  |   Published on : 28th May 2016 10:35 AM  |   அ+அ அ-   |    |  

  கேரள நாட்டில் மங்களாதேவி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளில் கண்ணகி தேவிக்கு வழிபாடு, பூசைகள் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கானோர் சென்று வழிபட்டு வருகிறார்கள்.
   ÷நம் வினா என்னவெனில், சித்திரை முழுநிலவுக்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு? கண்ணகி கோவலனைக் கைப்பிடித்த மண நாளா? மதுரையைத் தீக்கிரையாக்கிய நாளா? மதுரையினின்று நீங்கித் திருச்செங்குன்றத்து வேங்கை மர நிழலிலிருந்து பதினான்காம் நாள் வானவூர்தியில் வானவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட நாளா? சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கோயிலில் கண்ணகி எழுந்தருளிய நாளா?
   ÷திருமண நாள் பற்றிய வரிகளில், வானூர் மதியம் சகடணைய(வானில் ஊர்ந்து செல்லும் மதி உரோகிணியைக் கூடும் நாள்) என்னும் குறிப்பு உள்ளது. மதுரை தீப்பற்றி எரிய பழைய சாபம் உள்ளதாகக் குறிப்பிடுமிடத்து,
   
   "ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
   அழல்சேர் குட்டத்(து)அட்டமி ஞான்று
   வெள்ளி வாரத்(து)ஒள்ளெரி உண்ண'
   
   ÷என்னும் வரிகள் உள்ளன (ஆடித் திங்களில் கிருஷ்ண பட்சத்து அஷ்டமியும், கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று மதுரையைச் சுடர்மிகு தீயுண்ணும் எனும் செய்தி காணப்படுகிறது). திருச்செங்குன்றிலிருந்து கண்ணகியை வானவர்கள் அழைத்துச் சென்றமை பற்றிய பாடல் வரிகளிலும் சித்திரை முழுநிலவு நாள் பற்றி ஏதும் குறிப்பில்லை.
   ÷கண்ணகி, பத்தினிக்கோட்டத்துத் தெய்வமாகியது பற்றிய வரிகளைப் பார்ப்போம்.
   
   "வித்தகர் இயற்றிய விளங்கிழை கோலத்து
   முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
   பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
   வள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்து!'
   
   ÷"கடவுள் மங்கலம் செய்க' என்று செங்குட்டுவன் ஆணையிட்ட இடத்திலும் சித்திரை முழுநிலவு பற்றிய குறிப்பில்லை.
   ÷செங்குன்றத்து வேங்கைமர நிழலிலிருந்து வானவர் அழைத்துச் சென்ற நாள் சித்திரா பெளர்ணமி எனக் கூறுகிறார்கள். இந்திர விழா நிகழ்ந்த சித்திரையில் கோவலன் கண்ணகியோடு, கவுந்தியடிகள் துணையாக வர மதுரை நோக்கி நடந்து சிலம்பு விற்கச்சென்று கொலையுண்டான். கண்ணகி வழக்குரைத்து, மதுரையை எரித்தது ஆடித் திங்களில். நடந்தே மதுரை வருவதற்கும் பிற நிகழ்வுகளுக்கும் மூன்று மாத இடைவெளி பொருத்தமாய் உள்ளது. மதுரையிலிருந்து சேரநாட்டுச் செங்குன்றத்திற்கும் கண்ணகி நடந்தே வந்தாளாதலின் இப்போதும் இரண்டு மூன்று மாதங்கள் (ஆடியிலிருந்து)ஆகியிருக்கலாம். அப்படியாயின், ஐப்பசிக்கு மேல் தாண்ட இயலாது. மீண்டும் எப்படி சித்திரை வரும்?
   ÷பழந்தமிழகத்தில் மருதநிலக் கடவுளாக இந்திரன் வணங்கப்பட்டான். சோழன் காவிரி நாடனன்றோ! காவிரி கடலொடு கலக்குமிடம் நெய்தலாயினும் காவிரி நாடு மருத வளநாடு. ஆதலின், ஆண்டுதோறும் புகார் நகரில் இந்திர விழா அரசின் விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தது. அந்த விழாவின் தொடக்கம் சித்திரை நாள்மீன்(நட்சத்திரம்) கூடிய சித்திரை முழுநிலவு நாளில் (சித்திரா பெளர்ணமியில்) நடைபெற்றது. இச்செய்தியைச் சிலப்பதிகாரம் எப்படிச் சொல்லுகிறது?
   
   "கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
   நடுக்கின்றி நிலைஇய நாளங் காடியில்
   சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென'
   
   இந்திர விழவூர் எடுத்தகாதையில், நாளங்காடிப் பூதத்திற்குப் பலியிட்டு மன்னனை வாழ்த்தி விழாவைத் தொடங்குகிறார்கள். அந்த நாள், சித்திரா பெளர்ணமி நாளாகும். சித்திரை முழுநிலவு நாளில் இந்திர விழா தொடங்கியது. கண்ணகி வழிபாட்டிற்கும் இந்திர விழாவுக்கும் என்ன தொடர்பு?
   ÷எழுபதுகளில் மு.கருணாநிதி, பூம்புகாரில் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட எழுநிலைமாடம், பூதசதுக்கம், பாவைமன்றம், இலஞ்சிமன்றம், நெடுகல் மன்றம், வெள்ளிடை மன்றம் எனக் கட்டுமானங்கள் பல செய்து அந்நகரை விரிவுபடுத்தினார். அத்துடன் ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு நாளில் விழா எடுத்துக் கொண்டாட்டங்கள் நிகழச் செய்தார். அந்த இந்திர விழாவுக்கான சித்திரை முழுநிலவு நாள் கண்ணகி வழிபாட்டிற்கு எப்படிப் பொருந்தும்?
   ""அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் / நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறி'' என்று சிலப்பதிகாரம், கண்ணகி சென்றேறிய குன்று பற்றி உரைத்துள்ளது. திருச்செங்குன்று, "வெவ்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்' என்று கண்ணகியே உரைத்தவாறு முருகன் குன்று. கேரளாவில் கண்ணகி வழிபாடு நிகழும் குன்றில் முருகன் கோயில் யாதொன்றும் இல்லை. திருச்செங்குன்று எனும் பெயரும் இப்போது இல்லை.
   ÷தமிழ் நாட்டில் திருச்செங்கோடு எனும் ஊர் உள்ளது. கோடும் குன்றும் ஒரு பொருளுடையன. இத்தலத்தில் முருகன் கோயில் உள்ளது. இங்குள்ள அர்த்தநாரீசுவரர் உண்மையில் கண்ணகிப் படிவமே என்று வாதிடுவார் உளர்.
   ÷ஆக, கண்ணகி வழிபாடு, விழா சித்திரை முழுநிலவு நாளில் கொண்டாடப்படுவது ஏன்? சரியான காரணத்தை அறிஞர் பெருமக்கள் சான்றோடு முன்வைப்பார்களா?
   -கவிக்கோ ஞானச்செல்வன்
   ----------------------------------------------------------}
   இது தொடர்பான கருத்துகள்
   வரவேற்கப்படுகின்றன.
   - ஆசிரியர்

  kattana sevai