Enable Javscript for better performance
இசைக்கு வசமான ஈசன்!- Dinamani

சுடச்சுட

  

  இசைக்கு வசமான ஈசன்!

  By kirthika  |   Published on : 28th May 2016 11:30 AM  |   அ+அ அ-   |    |  

  இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். வேதங்கள்: ரிக் வேதம். யஜுர் வேதம். சாம வேதம், அதர்வண வேதம் என்பனவாகும். வேதங்களை நான்கு வகையாக வகுத்தவர் வியாசர். இவற்றில் சாம வேதம், சடங்குகளின் போது இசைப்பதற்காகவே இயற்றப்பட்டது என்று கூறுவர். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோன்றியதாகவும் கூறப்படுகின்றது.

  சாம வேதத்தின் பெயரில் கருவறையில் சாமவேதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஒரு கோயிலில் இறைவன் சிவபெருமான் காட்சி தருகிறார். வேறு எந்த வேதத்தின் பெயராலும் இறைவன் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை என்பதே இக்கோயிலின் சிறப்பு.

  திருச்சி மாவட்டம், லால்குடியில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமங்கலம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள, உலகநாயகி சமேத சாமவேதீஸ்வரர் திருக்கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த தலமாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் சிறப்பு வாய்ந்தது இத்தலம். "திரு' என்று அழைக்கப்படும் லட்சுமிதேவி இங்குள்ள சாமவேதீஸ்வரரை வழிபட்டு மங்கலம் பெற்றதால் இந்த தலம், "திருமங்கலம்' என்று அழைக்கப்படுகிறது.

  தல புராணம் பறைசாற்றும் சிறப்புகள்: ஜைமினி முனிவர் சாம வேதத்தை 1000 சாகைகளாகப் பிரித்து ஓதி, இறைவனை இங்குதான் வழிபட்டார். தனது தாயை கொன்ற பாவம் நீங்க பரசுராமர் இங்கு வந்து வழிபட்டு இத்தல இறைவன் அருளால் தோஷம் நீங்கப் பெற்றார். இதனால் இங்குள்ள தீர்த்தம் "பரசுராம தீர்த்தம்' என்றும், இந்த தலத்துக்கு "பரசுராமேஸ்வரம்' என்றும் ஒரு பெயர் உள்ளது.

  சண்டிகேசுவரர் தனது தந்தையை, கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்க பல சிவஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டார். தோஷம் நீங்காத நிலையில் சண்டிகேசுவரர் கனவில் இறைவன் தோன்றி, இத்தலம் வந்து வழிபடும்படி கூற, அவ்வாறே இத்தலம் வந்து இறைவனை வணங்கி தனது பித்ருதோஷம் நீங்கப் பெற்றார். சுவாமி சந்நிதியில் இடதுப்புறம் சண்டிகேசுவரர் காட்சி அளிப்பது வேறு எந்த தலத்திலும் பார்க்க இயலாத ஒன்றாகும். இத்தலத்தில் உதங்கரிஷி, இந்திரன், குபேரன் ஆகியோர் பூஜித்து வழிபட்டுள்ளனர்.

  63 நாயன்மார்களுள் ஒருவரான ஆனாய நாயனார் அவதரித்து முக்திபெற்ற தலம் திருமங்கலம். இடையர் குலத்தில் அவதரித்து ஆனாய நாயனார், தன் குலத்தொழிலாகிய ஆடு மேய்த்தல் தொழிலோடு புல்லாங்குழலில், சாமவேதத்தின் உண்மை பொருளாகிய திரு ஐந்தெழுத்தை (நமசிவாய) தம்மை மறந்த அளவில் வாசிக்கும் வழக்கம் உண்டு. இந்த நிலையில் கார்த்திகை மாதம் அஸ்த நட்சத்திரம் கூடிய நன்னாளில் ஆனாய நாயனார் கொன்றை மரத்தடியில் தன் குழலில் திருஐந்தெழுத்தினை இசைக்க கேட்டு, அதற்கு வயப்பட்ட சிவபெருமான் உமையம்மையுடன் அங்கு வந்து முக்தி அருளினார். ஆனாய நாயனாரும் குழல் வாசித்தபடியே கைலாயம் சென்றார். நாயனார், குழலை ஏந்திய நிலையில் அமையப்பெற்ற சந்நிதி, இவ்வாலயத்தின் பிரகாரத்தில் வடமேற்கில் அமைந்துள்ளது.

  கோயில் அமைப்பு: கிழக்கில் மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் கடந்தவுடன் நான்கு கால் மண்டபம், நந்தி, பலிபீடம் மற்றும் கொடிமரம் இருக்கக் காணலாம். இரண்டாவது நுழைவாயில் கடந்து உள்ளே சென்றால் மூலவர் "சாமவேதீஸ்வரர்' என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வெளிச் சுற்று கோஷ்டங்களில் பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி, சங்கரநாராயணன், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அமைந்துள்ளனர். பிரகாரத்தில் பரசுராமர் பூஜித்த லிங்கம் உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் வடபுறத்தில் தனி கோயில் கொண்டு, "உலகநாயகி' என்ற திருநாமத்துடன் அம்பிகை தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

  கருவறை சுற்றுப்பிரகாரத்தில் முருகப்பெருமான், கல்யாண சுப்பிரமணியர் எனும் திருப்பெயருடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு அருகில் தெய்வானை நின்ற கோலத்திலும், வள்ளி மட்டும் தனி மயிலில் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது வேறு எந்த கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். தலவிருட்சமாக பலாமரம் அமைந்திருப்பது விசேஷமாகச் சொல்லப்படுகின்றது. சனிபகவான் தனி சந்நிதி கொண்டு அருள்புரிகின்றார். இத்தலத்தில் பைரவரும் காலபைரவரும் சேர்ந்து இருப்பது மிக விசேஷமாகும்.

  திருஞானசம்பந்தர் பதிகம் - முதலாம் திருமுறை திருவலிவலம் தலப்பதிகம். 2-வது பாடலிலும், திருநாவுக்கரசர் பதிகம் - நான்காம் திருமுறை திருவாலங்காடு தலப்பதிகம். 8-வது பாடலிலும், திருப்புகலூர் தலப்பதிகத்திலும், சுந்தரர் பதிகம் - ஏழாம் திருமுறை திருமுருகன்பூண்டி தலப்பதிகம் 5-வது பாடலிலும், திருகச்சியேகம்பம் (காஞ்சிபுரம்) பாடலிலும், சாமவேத சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். பெரியபுராணத்தில் சேக்கிழார் சுவாமிகள் "இசை விரும்புக்கூத்தன்' என்று இத்தல இறைவனை கூறுகின்றார்.

  தற்போது இவ்வாலயத்தில் 2003 ஆம் ஆண்டு நடந்த குடமுழுக்கிற்குப்பிறகு பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் இத்திருப்பணிகளில் பங்கு கொண்டு ஈசனின் அருளைப் பெறலாம்.

  பித்ரு தோஷம், சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள், கல்வி ஞானம் பெறவும் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும் இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் உலகநாயகி உடனுறை சாமவேதீஸ்வரரை லால்குடி அருகிலுள்ள திருமங்கலம் சென்று தரிசித்து வாருங்கள்.

  (திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடிக்கு நகரப்பேருந்து வசதி உண்டு. அங்கிருந்து திருமங்கலத்திற்கு மினி பஸ், ஆட்டோவில் செல்லலாம்)

  - என்.எஸ். நாராயணசாமி

  kattana sevai