பாகிஸ்தானில் முக்கிய சுரங்கப்பாதையை தகர்த்த தீவிரவாதிகள்: 8 பேர் சாவு
பெஷாவர்,ஜன.29: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள முக்கியமான சுரங்கப்பாதை மீது வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை மோதி தீவிரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதல் நடந்த அடுத்த நிமிடத்தில் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை மோதி தாக்குதல் நிகழ்த்தினர்.
இவ்விரு சம்பவங்களிலும் 8 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். லேசாக காயம் அடைந்தவர்கள் அனைவரும் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த நால்வரும் பெஷாவரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் தெற்குப் பிராந்தியத்தையும், பெஷாவர் நகரையும் இணைக்கும் முக்கியமான இந்த சுரங்கப்பாதை ஜப்பான் வல்லுநர்களால் கட்டப்பட்டது. இச்சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஏற்கெனவே தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்திருந்ததால் அது பல மாதங்களாக மூடிக்கிடந்தது.
சமீபத்தில் பாகிஸ்தானின் தெற்குப் பிராந்தியத்தில் இருந்து பெஷாவர் பகுதிக்கு செல்லும் மாற்றுப்பாதையில் 24 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுரங்கப்பாதை சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால் சுரங்கப்பாதையில் பகலில் மட்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் தக்கத் தருணம் பார்த்து காத்திருந்த தீவிரவாதிகள், சுரங்கப்பாதை மீதும், சுரங்கப்பாதைக்கு முன்னதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சோதனைச்சாவடி மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர்.
சுமார் 500 கிலோ வெடிபொருள் நிரப்பிய லாரியை சுரங்கப்பாதையில் மோதி முதலில் தாக்குதல் நடத்தினர். இதில் சுரங்கப்பாதை தர்ந்தது. லாரி மோதும் போது சுரங்கப்பாதைக்குள் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் எண்ணெய் லாரியில் வெடிபொருள்களை நிரப்பி அருகில் இருந்த சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் தாக்குதல் நடந்த போது சோதனைச்சாவடியில் இருந்து சற்று தூரத்தில் பாதுகாப்பு வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ஆனால் இத்தாக்குதலில் சோதனைச்சாவடிக்கு அருகில் நின்று கொண்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியது. இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அப்பகுதி முழுவதிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். தாக்குதல் நடந்ததுமே சுரங்கப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.