பொருளாதார மந்த நிலையால் கிரேக்கத்தை விட்டு வெளியேறும் இந்தியர்கள்

லண்டன், ஜூலை 3: பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கிரேக்க நாட்டிலிருந்து, அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் வெளியேறி வருகின்றனர்.  மிகப் பெரிய பொருளாதார மந்தநிலையினாலும், கடன் சுமையாலும் தன்னுடைய
Published on
Updated on
1 min read

லண்டன், ஜூலை 3: பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கிரேக்க நாட்டிலிருந்து, அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் வெளியேறி வருகின்றனர்.

 மிகப் பெரிய பொருளாதார மந்தநிலையினாலும், கடன் சுமையாலும் தன்னுடைய தேசிய சொத்துக்களை விற்க கிரேக்க நாடு முனைந்துள்ளது. துறைமுகங்கள், விமானங்கள், லட்சக்கணக்கான விவசாய நிலங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் வங்கிகள் போன்றவற்றை விற்க அந்த நாடு முன்வந்துள்ளது.

 இதன் மூலம் தனது மொத்த கடன் தொகையான 10,000 கோடி யூரோவில், பாதி தொகையைத் திரட்டி கடனை அடைக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது. "விற்பனைக்கு வந்துள்ள கிரீஸ் நாடு' என்று அந்நாட்டு பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியிடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கியுள்ளது.

 அந்நாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களும் வேலையிழப்புக்கு ஆளாகியுள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கிரேக்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

 இந்த நிதி நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் கட்டுமானத் துறையைச் சார்ந்துள்ள இந்தியத் தொழிலாளர்கள்தான் என்று அங்குள்ள "இந்திய வம்சாவளியினர் கூட்டமைப்பின்' தலைவர் மதூர் காந்தி தெரிவித்தார். கிரேக்கத்திலுள்ள 30,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களில் 18,000 பேரே முறையாகக்ó குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 நாட்டில் நடைபெறும் கலவரத்தில் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்படாமல் இருப்பதற்குக் அவர்கள் பல்வேறு தீவுகளில் பரவலாக வேலை செய்வது மட்டுமல்லாது, கிரேக்கர்கள் இந்தியர்கள் மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருப்பதே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 கிரேக்க நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் இப்போது சீன நாட்டின் முதலீடுகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.

 ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் இப்போது நாடு திரும்பத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.