கொழும்பு, ஜூலை 3: மனித உரிமைகளை மீறியது விடுதலைப் புலிகள்தான் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக விடுதலைப் புலிகள் கொடூரமாக செயல்பட்டதற்கான விடியோ படங்களையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மனித உரிமை மீறல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கை ராணுவத்தினர் கைது செய்யப்பட்ட போர் குற்றவாளிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற காட்சிகள் விடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விடியோ படங்களை இங்கிலாந்தின் சேனல் 4 எனும் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது. இந்த படம் வெளியானதும் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை ஏற்பட்டது. இலங்கை அரசு மனித உரிமைகளை மீறி செயல்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இந்த வீடியோ ஆதாரங்களை மறுத்துவந்த இலங்கை அரசு, இப்போது விடுதலைப் புலிகள் மனித உரிமைகளை மீறியதாக குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் உபாய மதவெலா தெரிவித்துள்ளதாவது: பிபிசி ஒளிபரப்பிய படங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ராணுவத்தினரை விடுதலைப் புலிகள் கொடூரமாகக் கொலை செய்த காட்சிகளை தனியார் நிறுவனம் விடியோ படங்களாக எடுத்துள்ளது. இதை முற்றிலுமாக மாற்றி ராணுவ வீரர்கள் கொடூரமாகக் கொன்றுள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். உண்மையான படப் பதிவில் தமிழில் உரையாடல் இருப்பதையும் எதிர்ப்பாளர்கள் சிங்களத்தில் பேசியதையும் அறியலாம். ஆனால் பிரிட்டனின் சேனல் 4 வெளியிட்ட படங்களில் இலங்கை ராணுவத்தினர் மிகக் கொடூரமான முறையில் விடுதலைப் புலிகளைக் கொன்றுள்ளதாக உள்ளன. ஆனால் போரின்போது பல ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்றனர். இவர்களில் வெகு சிலரை மட்டுமே சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் அவர்கள் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்படாதவர்களில் பலரை வீடியோ படத்தில் தெரிவதைப் போல கொடூரமாகக் கொன்றுள்ளனர். இந்த விடியோ படப் பதிவுகள் ராணுவத்திடம் அளிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட விடியோ பதிவுகள் போலியானவை என்றும், அது இலங்கையின் புகழை சீர்குலைப்பதற்காக ஒளிபரப்பானது என்றும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.