இஸ்லாமாபாத், ஜூலை 9: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்கள் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
பாகிஸ்தான் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் இந்த ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மும்பை தாக்குதல் தொடர்பாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஷகியூர் ரஹ்மான் லக்வி உள்பட 6 பேர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் தேசிய விசாரணை அமைப்பு (எஃப்ஐஏ) இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் பயங்கரவாதிகள்தான் மும்பை தாக்குதலுக்குக் காரணம் என்பதை நிரூபிக்கும் வகையில், தாக்குதலின் போது உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாபின் வாக்குமூலம், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இந்த ஆதாரங்கள் இப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஆதாரங்களின் பிரதிகள், குற்றவாளிகளுக்கும், அவர்களின் வக்கீல்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு 2009-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் 5 பேர் இதுவரை மாற்றப்பட்டுள்ளனர். இப்போது புதிய நீதிபதி ஷாகித் ரபீக் இந்த வழக்கை விசாரிக்கிறார். ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டபின் வழக்கு விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 2008 நவம்பர் 26-ல் பாகிஸ்தானின் லஷ்கர் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பை நகருக்குள் புகுந்தனர். ரயில் நிலையம், ஹோட்டல்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டவர்கள் உள்பட மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப் மும்பை சிறையில் உள்ளார்.