பெய்ஜிங், ஜூலை 23: பொதுவாக வறுமை காரணமாக தங்களால் குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற சூழலில் மற்றவர்களுக்கு குழந்தைகளை விற்பவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இணையதளத்தில் ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காக தங்களது மூன்று குழந்தைகளையும் விற்றுள்ளனர் சீனாவைச் சேர்ந்த பெற்றோர். இவர்களை போலீஸôர் கைது செய்துள்ளார்.
மத்திய சீனா பகுதியைச் சேர்ந்த லி லோங்வாங் (19), அவரது மனைவி லி யங் (18) ஆகிய இருவரும் தங்களது மூன்று வயது மகன், இரண்டு வயது மகள் மற்றும் சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை ஆகிய மூவரையும் விற்றுள்ளனர். இதன் மூலம் கிடைத்த பணத்தில் இன்டர்நெட் மையங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பது, உணவு விடுதிகளுக்குச் சென்று விரும்பியதை உண்பது போன்றவற்றுக்கு செலவிட்டுள்ளனர்.
விற்ற குழந்தைகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று இவர்கள் தெரிவித்துள்ளனர். 2007-ம் ஆண்டு இணையதள மையத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதில் லியிங் கர்ப்பமானார். கருவைக் கலைக்க முயன்றபோது அதற்கு லோங்வாங்கின் தாய் அனுமதிக்கவில்லை. 2008-ம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இவ்விருவரும் குழந்தையை பெற்றோரிடம் விட்டுவிட்டு கிராமத்திலிருந்து 30கி.மீ. தொலைவில் உள்ள இணையதள மையத்துக்கு சென்றுவிடுவராம். அங்கிருந்து லோங்வாங்கின் தாய் இவர்களிருவரையும் வீட்டிற்கு இழுத்துவருவாராம். இதனிடையே 2009-ம் ஆண்டில் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. வேலை ஏதும் இல்லாத நிலையில் மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தையும் சமீபத்தில் பிறந்தது.
இந்நிலையில் பெண் குழந்தையை 3,000 யுவானுக்கு விற்றுள்ளனர். இந்தப் பணத்தை செலவிட்ட சிறிது நாள்களிலேயே மூத்த மகனை 30 ஆயிரம் யுவானுக்கு விற்க ஒரு இடைத்தரகரை அணுகியுள்ளனர். அடுத்து பிறந்த குழந்தையை 7 ஆயிரம் யுவானுக்கு விற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸôர் இவர்களை கைது செய்தனர்.