ஆஸ்லோ, ஜூலை 23: நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மோசமான இரட்டை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நார்வேயில் மிகக் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இங்குள்ள இடிலிக் உடோயா தீவில் பெருமளவிலான இளைஞர்கள் திரண்டிருந்தனர். அவர்களை நோக்கி போலீஸ் உடையணிந்த பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் நாட்டின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது என்று பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மிக துயரமான சம்பவத்துக்குக் காரணமானவர்களை போலீஸôர் தீவிரமாக தேடி வருவதாகக் கூறினார்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்துக்குக் காரணமான பயங்கரவாதி குறித்த விவரம் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் தன்னை ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரெவிக் என அடையாளப்படுத்திக் கொண்டதாக உள்ளூர் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தாக்குதல் நடத்திய இளைஞருக்கு 32 வயது இருக்கும் என போலீஸôர் அடையாளம் கண்டுள்ளனர். இவர் முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார் என்று போலீஸ் ஆணையாளர் ஸ்வைனங் ஸ்போனிம் தெரிவித்தார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவருக்கு வலதுசாரி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் நார்வேயிலிருந்து வெளியாகும் சில செய்தி பத்திரிகைகளில் ஃபேஸ்புக் பக்கத்தில் பழமைவாத, கிறிஸ்தவ, கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் உலகப் போர் சார்ந்த நவீன போர் விளையாட்டுகள் பிடிக்கும் என அந்த இளைஞன் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
2004-ம் ஆண்டில் மாட்ரிட் குண்டு வெடிப்புக்குப் பிறகு மேற்கு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதல் சம்பவம் இதுதான். ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா விவகாரங்களில் நார்வே பங்கேற்பதைக் கண்டித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அனேகமாக இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர் நார்வேயைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தலைநகரில் தாக்குதல் ஆபத்து மிகுந்த கட்டடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்கள் தங்களது வீடுகளில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் நட் ஸ்டோர்பெர்கெட் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் 7 பேர் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தனர். அரசு கட்டடம், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சக அலுவலகம் ஆகியவற்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இவர்கள் உயிரிழந்தவர்களாவர்.
முதலில் அரசு கட்டடங்களுக்கு குண்டு வைத்துவிட்டு போலீஸ் உடையணிந்து உடோயா தீவுக்குச் சென்று அங்கு துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இத்தீவில் நடைபெற்ற முகாமில் சுமார் 560 இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர். இந்த இளைஞர் முகாமுக்கு ஆளும் தொழிலாளர் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
துப்பாக்கி குண்டிலிருந்து தப்பிக்க விரைந்து ஓடி தண்ணீரில் மூழ்கி சிலர் இறந்துள்ளனர்.
நாஜிக்கள் படங்களில் வருவதைப் போல தாக்குதல் நடத்தப்பட்டதாக குண்டுக்காயத்துடன் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அட்ரியன் பிரகான் என்பவர் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார். மிகவும் நெருக்கமாக நின்று துப்பாக்கியால் சுட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். முதலில் அருகிலிருந்தவர்களை சுட்டபிறகு தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். அந்த இளைஞனின் கையில் எம் 16 ரக துப்பாக்கி இருந்தது, அது தானியங்கி துப்பாக்கியாகும். அவரிடமிருந்து தப்பிக்க உயிரிழந்தவரைப் போல தரையில் விழுந்து தப்பித்தேன் என்றும் அவர் கூறினார். உயிரிழந்தவர்களை காலால் உதைத்து அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று பார்த்துச் சென்றதாகவும் தான் 2 மீட்டர் தூரத்தில் படுத்திருந்ததால் தன்னிடம் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தத் தீவில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸôர் தீவு முழுவதிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். உடோயா தீவுக்கு 1974-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் வருவதாகக் குறிப்பிட்ட அவர் இந்தத் தீவில் மகிழ்ச்சிக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அதேசமயம் பாதுகாப்பானதும்கூட. ஆனால் இப்போது வன்முறைக் களமாகிவிட்டது என்று பிரதமர் ஸ்டோல்டென்பெர்க் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் மிகவும் அமைதியான நாடாக நார்வே திகழ்ந்துவந்தது. இந்நிலையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டார். இதற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.