திம்பு, ஜூலை, 23: ""தங்கள் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கங்களையும் பயங்கரவாதிகளையும் ஒடுக்க வேண்டியது எல்லா நாடுகளுடைய கடமை; அவர்களுக்கு அரசு ஆதரவு இல்லை, அவர்கள் தாங்களாகவே செயல்படுகிறார்கள் என எந்த நாடும் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது'' என்று சுட்டிக்காட்டினார் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.
"சார்க்' (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டு அமைப்பு) நாடுகளின் உள்துறை அமைச்சர்களுடைய 4-வது சர்வதேச மாநாடு பூடான் தலைநகர் திம்புவில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பேசியபோது, பாகிஸ்தானைப் பெயர் குறிப்பிடாமல் - அதே சமயம் - பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளும் யாரை அவர் குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொள்ளும் வகையில் பேசினார் சிதம்பரம்.
"ஒரு நாட்டின் நிலப்பகுதியை பயங்கரவாதிகள் தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டால் அதைத் தடுக்கவும் தகர்க்கவும் வேண்டிய சட்டப்பூர்வமான, தார்மிகமான கடமை அந்த நாட்டுக்கு இருக்கிறது. அரசு ஆதரவு பயங்கரவாதிகள், அரசு ஆதரவில்லாத பயங்கரவாதிகள் என்றெல்லாம் பயங்கரவாதிகளை இனம்பிரிப்பதே தவறு. அது நம்முடைய நடவடிக்கைகளை திசைதிருப்பிவிடும்.
பயங்கரவாதிகள் தங்களுடைய இயக்கங்களுக்கு இளைஞர்களை ஈர்க்கும் இடங்கள், அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சிகளும் ஆயுதப் பயிற்சிகளும் தரும் முகாம்கள், அவர்கள் பாதுகாப்பாக தங்கியிருக்கும் இடங்கள், அவர்கள் தப்பிச்செல்லும் வழிகள் ஆகியவற்றைத் தாக்கி அழிக்க வேண்டியது அரசுகளின் கடமை.
தெற்காசியாவில் நாடுகளுக்கும் மக்களுக்கும் பெருத்த சவாலாக இப்போது இருப்பது பயங்கரவாதம்தான். சார்க் நாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு இருந்தால் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். பயங்கரவாதத்துக்கு எதிராக நம்மிடம் உள்ள மிகச் சிறந்த படைகளையும் பயிற்சி பெற்ற நிபுணர்களையும் பயன்படுத்துவதைத் தவிர மாற்று வழிகள் ஏதும் இல்லை.
பயங்கரவாதத்தை ஒடுக்கவும் போதை மருந்து கடத்தலைத் தடுக்கவும், பாலியல் தொழிலுக்காக இளம் பெண்களும் சிறுமிகளும் கடத்தப்படுவதைத் தடுக்கவும், ஆயுதங்களைக் கடத்துவது, போலி கரன்சிகளை அச்சிட்டு வேற்று நாட்டில் பயன்பாட்டுக்கு விடுவது போன்ற குற்றங்களையும் நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு தடுக்க வேண்டும்.
உலகிலேயே பயங்கரவாதத்துக்கு அதிகம் இரையாகும் பகுதி தெற்காசியாவாகத்தான் இருக்கிறது. இப் பகுதியில்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
அரசுகளும் அரசு அல்லாத அமைப்புகளும் தரும் ஆதரவால்தான் பயங்கரவாத இயக்கங்கள் இங்கே வலுவுடன் திகழ்கின்றன. தெற்காசிய நாட்டு மக்களின் உயிர் உடமைகளுக்கு மட்டும் அல்லாமல் அவர்களுடைய சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் பயங்கரவாதம் பெருத்த தடையாக விளங்குகிறது.
பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல்களால் நம்முடைய மக்களின் பாதுகாப்பும் வாழ்க்கையும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே தொடர்கிறது.
சார்க் அமைப்பு மிக வலுவுள்ள பொருளாதார அமைப்பாக உருவெடுக்க தன்னாலியன்ற அனைத்தையும் செய்ய இந்தியா தயாராகவே இருக்கிறது. 2010 ஜூன் மாதம் இஸ்லாமாபாதில் நடந்த இதே போன்ற மாநாடு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததை நினைவுகூர்கிறேன். பயங்கரவாதத்தை ஒடுக்க அப்போது நாம் அனைவருமே உறுதி எடுத்தோம். அந்தப் பொது லட்சியத்தில் நம் அனைவருக்கும் அதே உறுதி தொடர்கிறது என்று இப்போதும் நாம் நம்புகிறேன்.
சமூகவிரோத கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைக்க செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
சார்க் நாடுகளுக்கிடையே பிராந்திய தொடர்புகள் பெருக வேண்டும், போக்குவரத்து, அடித்தளக் கட்டமைப்பு இணைப்புகள் மேம்பட வேண்டும், சரக்குகள் போக்குவரத்து அதிகரிக்க வேண்டும், எல்லைகளைத் திறம்பட நிர்வகிக்க வேண்டும் என்ற உணர்வு நம்முடைய தலைவர்களிடையே வலுப்பட ஆரம்பித்திருக்கிறது.
குற்றச் செயல்களிலும் பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடுவோர் குறித்த தகவல்களைத் திரட்டிப் பகிர்ந்து கொள்வதிலும் ஆதாரங்களைச் சேகரித்து அளிப்பதிலும் சார்க் நாடுகள் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும் என்று 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்டது. நம்மிடையே ஏற்படும் ஒத்துழைப்பு சர்வதேச அளவில் விரிவாக வேண்டும்' என்றார் சிதம்பரம்.
பூடான் நாட்டின் திம்பு நகரில் சனிக்கிழமை நடைபெற்ற 4-வது சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற சார்க் நாடுகளின்
உள்துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். உடன் பூடான் பிரதமர் ஜிக்மி ஒய். தின்லே (நடுவில்).