வாஷிங்டன், ஜூலை 30: இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளிலும் அதிகரித்து வரும் பெட்ரோலியப் பொருள்களின் தேவையே சர்வதேச அளவில் அப்பொருள்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
இத்தகைய விலை உயர்வு அமெரிக்கப் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வாகன எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் ஒபாமா இதைத் தெரிவித்தார். மேலும் அவர் பேசியது:
உலகம் முழுவதும் பெட்ரோலியப் பொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அமெரிக்காவிலும் பெட்ரோலியப் பொருள்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்ய நாம் வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையை மாற்ற நாம் முயல வேண்டும். உள்நாட்டு தேவைக்கான பெட்ரோலியப் பொருள்களை முழுமையாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நம்மால் முடியாத காரியமல்ல. ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கணிசமானத் தொகை மானியமாகக் கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகையை பெட்ரோலிய நிறுவனங்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவல்ல, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத எரிபொருளை கண்டறியும் ஆய்வுக்கு பயன்படுத்த வேண்டும். பசுமை இல்ல வாயுக்களால் வளிமண்டலம் கடுமையாக சீர்கெட்டுவருகிறது. இதனால் புவியின் வெப்பம் உயர்ந்து கடலின் நீர்மட்டம் அதிகரிக்கிறது. இது மனித சமுதாயத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகவுள்ளது. இதனால் படிப்படியாகப் பெட்ரோலியப் பொருள்களின் உபயோகத்தைக் குறைத்து புவியை பாதுகாக்கும் கட்டாய நிலையில் உள்ளோம். இந்த பொறுப்பை உணர்ந்து அமெரிக்க விஞ்ஞானிகள் செயலாற்ற வேண்டும் என்றார் ஒபாமா.