இஸ்லாமாபாத், ஜூலை 30: பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ஒரு பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென் மேற்கு நகரான குவெட்டா நகரில் சனிக்கிழமை இச் சம்பவம் நிகழ்ந்தது. இப்பகுதியில் நிகழ்ந்த இனப் படுகொலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
ஹஸரா ஷியா பிரிவைச் சேர்ந்த சிலர் வேலைக்குச் செல்வதற்காக ஒரு வேனில் ஏறிக் கொண்டிருந்தனர். இவர்கள் மீது அருகிலிருந்த பஸ் நிலையத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
ஈரானில் உள்ள வழிபாட்டுத்தலத்திற்கு சென்ற 7 ஷியா பிரிவு முஸ்லிம்களை வெள்ளிக்கிழமை சிலர் சுட்டுக் கொன்றனர். லஷ்கர்-இ-ஜாங்வி என்ற தீவிரவாதக் குழு இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்றது.
சன்னி பிரிவு முஸ்லிம் கல்வியாளர் மெüல்வி கரீம் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஷியா பிரிவினர் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அலி ஷேர்ஹைத்ரி தெரிவித்துள்ளார்.தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஷியா முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராகவும், இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். பிரதான சாலையில் மறியல் நடத்தியதோடு, வாகனங்களுக்கும் தீ வைத்தனர். மருத்துவமனைக்கு வெளியே கடைகள் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகரில் பிரிவினைவாத மோதல் அதிகரித்து வந்துள்ளது. இங்கு ஷியா முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.வெள்ளிக்கிழமை மாஸ்துங் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலுசிஸ்தான் மாகாண முதல்வரின் நெருங்கிய உறவினர் உள்ளிட்ட இருவர் இறந்தனர். கால்பந்து மைதானத்துக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 30 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நகரில் போலீஸôர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதாக போலீஸôர் தெரிவித்தனர். இதனிடையே தங்களது சமுதாய மக்களைக் காப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
குவெட்டா சம்பவத்துக்குக் காரணமானவர்களை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யாவிடில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக ஷியா பிரிவு முஸ்லிம் தலைவர் ரஹீம் ஜாஃப்ரி அறிவித்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து ஜூலை 31-ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாகவும், 40 நாள் துக்கம் அனுசரிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.