லண்டன், பிப். 11: பிரிட்டனில் எம்.பி.ஏ. படித்துவரும் இந்திய மாணவர் பிரவீண் (26) கத்தியால் குத்தப்பட்டு கடுமையாகக் காயமடைந்தார்.
லண்டனின் புறநகர்ப் பகுதியான நியூஹாமில் வெள்ளிக்கிழமை இரவு பிரவீண் ஒரு கும்பலால் கத்தியால் குத்தப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நியூஹாம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸôர் கூறியது:
இந்தியாவைச் சேர்ந்த பிரவீண் எனும் மாணவர் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக, முதலில் 11 பேரை நியூஹாம் போலீஸôர் கைதுசெய்தனர். அவர்களில் 7 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மற்ற நால்வரும் தொடர்ந்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்றனர் ஸ்காட்லாந்து யார்டு போலீஸôர்.
இந்தச் சம்பவம் பற்றி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, லண்டனில் உள்ள இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் ராஜேஷ் பிரசாத்துடன் பேசினார். பின்னர் ஆந்திரத்தில் இருக்கும் பிரவீணின் தந்தை சுதாகர் ரெட்டியிடம் தனது ஆறுதலைத் தெரிவித்தார்.
பிரிட்டனில் உள்ள தூதரக அதிகாரிகள், பிரவீணுக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர்களுடனும் புதுதில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிளுடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
கத்திக்குத்துக்கு ஆளான மாணவரின் பெற்றோர் லண்டனுக்குச் செல்ல வசதியாக அவர்களுக்கு விசாவை விரைந்து வழங்க வேண்டுமென பிரிட்டன் தூதரத்தை இந்தியா கேட்டுக்கொள்ளும் என்று தெரிகிறது.
பிரிட்டனில் கடந்த 2 மாதங்களில் இந்திய மாணவர்களுக்கு நேர்ந்துள்ள 4வது சம்பவமாகும் இது.
முந்தைய 3 சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இறந்துபோய் விட்டனர். அண்மையில் அனுஜ் பித்வே எனும் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.