மாலே, பிப்.11: ஆட்சிமாற்றம் காரணமாக கடந்த சில நாள்களாக கொந்தளிப்புடன் காணப்பட்ட மாலத்தீவு தலைநகர் மாலேயில் சனிக்கிழமை அமைதி திரும்பியது.
மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான முகமது நஷீத் கடந்த வாரம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து தலைநகர் மாலேயில் கடந்த 4 நாள்களாக போராட்டங்கள் வெடித்தன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடைகளும், வணிக நிறுவனங்களும் சனிக்கிழமை காலையில் திறக்கப்பட்டன. தேசிய பாதுகாப்புப் படையின் தலைமையகம் மற்றும் காவல் தலைமையகம் ஆகியவற்றைச் சுற்றிலும் இயல்பு நிலை காணப்பட்டது. நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்து எவ்வித இடையூறுமின்றி சகஜமாகக் காணப்பட்டது.
புதிய அதிபர் முகமது வாஹித் ஹசனின் அலுவலகத்தின் அருகிலும் நிலைமை இயல்பாகக் காணப்பட்டது. அதேபோலவே முன்னாள் அதிபர் நஷீத்தின் அலுவலகம் அருகிலும் இயல்பு நிலை காணப்பட்டது. நஷீத் அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவதாக அவரது அலுவலக ஊழியர் தெரிவித்தார். ஆனால் நிலைமையில் மாற்றமில்லை என்று நஷீத்தின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரசு விஷயங்களிலிருந்து தான் தள்ளியே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நஷீத்தும் வெள்ளிக்கிழமை மாலை தனது ஆதரவாளர்களுடன் பேரணி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அதிபர் ஹசன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தேர்தலுக்கு வழிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிய சிறப்பு தூதுக் குழுவின் தலைவர் ஜி.கணபதி, அதிபர் ஹசன் மற்றும் நஷீத்தை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கும் சனிக்கிழமை மாலத்தீவு வந்தார்.
மாலத்தீவில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் ஒருவர்கூட ஆட்சிமாற்றத்தின்போது தாக்கப்படவில்லை.
இந்தியர்களுக்குச் சொந்தமான சொத்துகள் ஒன்றுகூட சேதப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் இந்தியர்கள் மீது மாலத்தீவு மக்கள் வைத்துள்ள மரியாதையே காரணமாகும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்தது.