
சனி கிரகத்தின் துணைக்கோளான சந்திரனில் (டைட்டன்) ஆறு இருப்பதை நாஸா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பூமியில் உள்ள நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாஸôவின் காசினி செயற்கைக்கோள் செப்டம்பர் 26ஆம் தேதி எடுத்துள்ள மிக துல்லியமான புகைப்படத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. பூமிக்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் நதி இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. டைட்டனின் வட பகுதியிலிருந்து புறப்பட்டு கிராக்கன்மரே என்ற கடலில் கலக்கிறது.
இந்த கடல், பூமியில் உள்ள காஸ்பியன் கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையிலான பகுதியின் அளவுக்கு சமமாக இருக்கிறது.
இந்த நதி சுமார் 400 கிலோமீட்டர் நீளத்துக்கு விரிந்து இருப்பதாக நாஸôவின் ஜெட் ஆய்வகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை குட்டி நைல் நதி என குறிப்பிட்டுள்ளனர். பூமியில் உள்ள நைல் நதி 6,700 கி.மீ. நீளம் கொண்டது குறிப்பிடத்தக்கது.
""மழையின் மூலம் உருவாகும் திரவப் பொருள், ஏரிகள் மற்றும் ஆறுகள் வழியாகக் கடலில் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக டைட்டனில் மட்டுமே பரந்த கடல் பகுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது'' என ஆய்வக அதிகாரி ல்டீவ் வால் தெரிவித்துள்ளார்.
டைட்டனில் உள்ள இந்த திரவப் பொருள் நீர் என்று கூற முடியாது. இது மீத்தேன் மற்றும் ஈத்தேனை உள்ளடக்கிய ஹைட்ரோகார்பன்களின் கூட்டுப் பொருளாக உள்ளது. இப்பகுதியில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருப்பதால் அந்த திரவம் உறைந்த நிலையில் காணப்படுகிறது.