இலக்கியம்: சீன எழுத்தாளருக்கு நோபல் பரிசு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு சீன எழுத்தாளர் மோ யானுக்கு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு சீன எழுத்தாளர் மோ யானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மோ யான்(57), உணர்ச்சிகரமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். நிதர்சனத்தின் மாயத்தன்மை, நாட்டுப்புற வழக்குகள், வரலாறு, சமகாலம் அனைத்தையும் இணைக்கும் வகையில் இவரது எழுத்துகள் உள்ளன என நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.

மோ யான் என்பது அவரின் புனைப்பெயராகும். இயல்பில் அதிகமாகப் பேசும் வழக்கமுடைய மோ யான், "பேசாதே' என்ற அர்த்தமுடைய இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் சீனக்குடிமகன் மோ யான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதல் சீனர் அல்லர்.

சீனாவில் பிறந்து, பிரான்ஸூக்குக் குடிபெயர்ந்த காவோ ஜின்ஜியான், 2000ஆவது ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றிருந்தார். குறிப்பாக அவரின் "ஸோல் மவுண்டெய்ன்' என்ற நாவலுக்காக அவருக்கு நோபல் வழங்கப்பட்டது. ஆனால், சீனா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாவலை சீனாவில் தடை செய்தது.

மோ யான்: 1955ஆம் ஆண்டு சீனாவில் பிறந்த மோ யானின் இயற்பெயர் குவான் மோயே. ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் 1987ஆம் ஆண்டு எழுதிய "ரெட் சோர்கம்' (Red Sorghum) நாவல் ஹாலிவுட் படமாக எடுக்கப்பட்டு பெரும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. The Republic of Wine, Life and Death Are Wearing Me Out ஆகியவை இவரின் குறிப்பிடத்தக்க பிற படைப்புகளாகும்.

நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தச் செய்தி எனக்குக் கிடைத்த போது, நான் உணவருந்திக் கொண்டிருந்தேன். இலக்கியத்துக்கான நோபல் பரிசு என்பது மிகவும் உயர்வானது. ஆனால், அதுவே உச்சபட்ச விருது அல்ல. எனது படைப்புகள் குறித்து நான் திருப்தி அடைகிறேன்; தொடர்ந்து எழுதுவேன். எனது படைப்புகள் சீனர்களின் வாழ்க்கை, நாட்டின் பிரத்யேகக் கலாசாரம், நாட்டுப்புறக் கூறுகளை  உள்ளடக்கி இருக்கின்றன. மனித உணர்வுகளை விவரிப்பவை. எல்லைகள், இனங்களுக்கு அப்பாற்பட்டவையாக அவை இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com