Enable Javscript for better performance
அதிபர் தேர்தல்: முன்னதாக வாக்களித்தார் ஒபாமா- Dinamani

சுடச்சுட

    

    அதிபர் தேர்தல்: முன்னதாக வாக்களித்தார் ஒபாமா

    By dn  |   Published on : 27th October 2012 01:16 AM  |   அ+அ அ-   |    |  

    அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது வாக்கை முன்கூட்டியே செலுத்தினார் பராக் ஒபாமா.

    அமெரிக்க வரலாற்றில், அதிபர் பதவியில் இருப்பவர் தனது வாக்கை முன்கூட்டியே செலுத்துவது இதுவே முதல் முறை. அங்கு நவம்பர் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 12 நாள்கள் முன்னதாக வியாழக்கிழமை தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.

    அமெரிக்காவில் வாக்குகளை முன்கூட்டியே செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமாவும் ஏற்கெனவே தனது வாக்கைச் செலுத்திவிட்டார்.

    தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஒபாமா வெர்ஜீனியாவில் இருந்து தனது சொந்த ஊரான சிகாகோவுக்கு விமானம் மூலம் வந்தார். அங்குள்ள மார்ட்டின் லூதர் கிங் மையத்தில் உள்ள வாக்குச் சாவடிக்குச் சென்றார்.

    அடையாள அட்டை வேண்டும்: ஒபாமா அதிபர் என்றபோதிலும், அவரை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக ஓட்டுநர் உரிமத்தை வாங்கி சரிபார்த்த பின்னரே அங்கிருந்த பெண் அதிகாரி அவரை வாக்களிக்க அனுமதித்தார்.

    வாக்களித்த பின் தனது வாக்கு முறையாக பதிவாகிவிட்டதை அதிகாரிகளிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

    ஓட்டுநர் உரிமத்தில் உள்ள புகைப்படத்தில் எனது தலை முடி பழுப்பு நிறத்தில் இருக்காது என்று அப்போது ஒபாமா நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

    "வாக்கை முன்கூட்டியே செலுத்தியது மிகவும் வித்தியாசமான அனுபவம். முன்கூட்டி வாக்களித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயரும் எனக்குக் கிடைத்துள்ளது.

    இதற்காக ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக் கொண்டேன்' என்றார் ஒபாமா.

    ரோம்னி முட்டாள் - ஒபாமா தாக்கு: தன்னை எதிர்த்துப் போட்டியிடும் ரோம்னி முட்டாள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ஒபாமா. அவரது இந்த கடுமையான விமர்சனம் தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    "ரோலிங் ஸ்டோன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:

    அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் என்ற பட்டியலில் ரோம்னி விரைவில் இடம் பெற இருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில் அவர் தொடர்ந்து முட்டாள்தனமாகப் பேசி வருகிறார். அவரது பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாது என்றார்.

    அதே நேரத்தில் அதிபர் தேர்தலில் போட்டி மிகக்கடுமையாக இருக்கிறது என்பதையும் ஒபாமா ஒப்புக் கொண்டார்.

    முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது, நம்பகத்தன்மையற்றவர் என்று ரோம்னியை ஒபாமா விமர்சித்தார். இப்போது முட்டாள் என்று கூறியுள்ளார்.

    குவிகிறது நிதி: இதனிடையே ஒபாமா திரட்டியுள்ள தேர்தல் நிதி ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.5,400 கோடி) தாண்டியுள்ளது.

    அதிபர் தேர்தலில் இந்த அளவுக்கு அதிக நிதி திரட்டியவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

     

    பெண்களை தரக்குறைவாக பேசுவதா? குடியரசுக் கட்சியினருக்கு கண்டனம்

     

    தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களை தரக்குறைவாக பேசியதற்காக குடியரசுக் கட்சியினருக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் கருக்கலைப்புக்கான உரிமைகள் குறித்த பிரச்னையும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

    இண்டியானா மாகாண செனட் தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் ரிச்சர்ட் மொர்டாக். இவர் கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பாகப் பேசுகையில், "பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைவது என்பது கடவுளின் விருப்பத்தின்படி நடக்கிறது' என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கட்சியின் கண்டனத்தை அடுத்து தனது பேச்சுக்காக ரிச்சர்ட் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

    அதே நேரத்தில் ரிச்சர்ட்டின் பேச்சை அவரது கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் ரோம்னிக்கு எதிராகத் திருப்பி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஒபாமா பேசியது: பாலியல் பலாத்காரம் என்பது மிகப் பெரிய குற்றம். ஆனால் அதனை ஒரு சாதாரண நிகழ்வு என்பதுபோல குடியரசுக் கட்சியினர் பேசியிருப்பது பெண்களை தரக்குறைவாக கருதும் செயல். அவர்களால் எப்படி இதுபோன்றெல்லாம் பேச முடிகிறது என்பது தெரியவில்லை.

    ரிச்சர்டின் பேச்சு அபத்தமானது. பெண்கள் குறித்துப் பேச இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை. பலாத்காரம் என்ற குற்றத்துக்கு ஆதரவாக புதிய விளக்கத்தைக் கொடுக்க முயற்சித்துள்ள அவமானகரமானது என்றார் ஒபாமா.

    kattana sevai