Enable Javscript for better performance
பிரபாகரனின் மகன் கொடூரமாகக் கொலை: புகைப்படத்தை வெளியிட்டது சேனல்-4 டி.வி.- Dinamani

சுடச்சுட

    

    பிரபாகரனின் மகன் கொடூரமாகக் கொலை: புகைப்படத்தை வெளியிட்டது சேனல்-4 டி.வி.

    By dn  |   Published on : 20th February 2013 04:31 AM  |   அ+அ அ-   |    |  

    விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகக் கொன்றது தொடர்பான புகைப்படங்களை பிரிட்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

    இலங்கையின் வடக்குப் பகுதியில் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரின்போது ராணுவம் இழைத்த மனித உரிமை மீறல்களை சேனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தி வருகிறது.

    வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தையொட்டி வெளியிடுவதற்காக ஆவணப்படம் ஒன்றை சேனல்-4 தொலைக்காட்சி தயாரித்துள்ளது. அதில், பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொன்றது தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    அதில், பதுங்குழியில் உட்கார வைக்கப்பட்டிருந்த பாலசந்திரன் பிஸ்கட் போன்ற உணவுப் பொருளை உண்பதும், பின்னர் தனது முன்பு நிற்பவர்களை பரிதாபமாகப் பார்க்கும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சில மணிநேரங்களுக்குப் பின் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், உடலில் 5 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயத்துடன் அச்சிறுவன் தரையில் கிடக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    இந்தியாவின் நிலை என்ன?÷இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் கெல்லம் மெக்ரே கூறுகையில், ""பாலசந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள், இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கையை அம்பலப்படுத்தியுள்ளது. இப்போது எங்களது கவனமெல்லாம் இந்தியாவின் நிலை என்ன என்பது குறித்துத்தான். அதற்காகத்தான் இந்த ஆவணப்படத்தையே தயாரித்துள்ளோம்.

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இதன் மூலம், இலங்கையை கண்டிக்கும் அதே வேளையில், சர்வதேச நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் அந்நாட்டுக்குத் தண்டனையைப் பெற்றுத் தரவும் வாய்ப்பு ஏற்படும்'' என்றார்.

    இலங்கை ராணுவம் மறுப்பு:÷இப்புகைப்படங்கள் தொடர்பாக இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரியா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ""இதுபோன்று இலங்கை ராணுவம் மீது உறுதிப்படுத்த இயலாத புகார்களை பலமுறை அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை தொடர்பான விவாதம் வரும்போதெல்லாம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவதும், பின்னர் காணாமல்போவதும் வாடிக்கையாக உள்ளது.

    இதுவரை நாங்கள் விசாரணை நடத்துவதற்கு வசதியாக சந்தேகத்துக்கிடமற்ற உறுதியான ஆதாரங்களை யாரும் தரவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்போர், அது உண்மையா, இல்லையா என்பதை அறிய விசாரணை நடத்தப்படுவதில் ஆர்வம்காட்டுவதில்லை. இந்தப் புகார்களுக்கு தீர்வு காணப்படாமல் மர்மமாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றனர். இலங்கைக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர்.

    இந்தப் புகைப்படம் பொய்யானது; இதில் பாதி மட்டுமே உண்மை, ஊக அடிப்படையிலானது. இந்தச் சம்பவத்தைப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று சேனல்-4 தொலைக்காட்சி விரும்பினால், எங்களிடம் தகுந்த ஆதாரங்களைத் தர வேண்டும். அது தொடர்பாக ராணுவம் சார்பில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் ருவான் வனிகசூரியா.

     

    விஜயகாந்த்

    இறுதிப் போரில் அப்பாவிகள் கொத்துக் குண்டுகள் வீசி கொல்லப்பட்டனர் என்றும், உயிருடன் பிடிபட்டவர்கள் கடும் சித்ரவதை செய்யப்பட்டனர் என்றும் உலக நாடுகள் சொன்னபோது, இலங்கை அரசு மறுத்தது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் உண்மையானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்திய அரசு எப்போதும்போல் இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் இனியாவது இருக்க வேண்டும்.

     

    ராமதாஸ்

    பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் புகைப்பட ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானவை என்று தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். பாலச்சந்திரனை முதல் குண்டிலேயே சுட்டுச் சாய்த்துவிட்டு, பின்புறமாக தரையில் வீழ்ந்து கிடக்கும் அந்தச் சிறுவன் மீது மேலும் 4 குண்டுகளை நெஞ்சில் சுட்டிருக்கின்றனர். ராஜபட்சவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத் தர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     

    வைகோ

    பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவத்தை, விடியோ ஆதாரத்தோடு சேனல் 4 வெளியிட்டுள்ளது. இந்தக் கோரமான கொலைகளுக்கு ராஜபட்சவும், கொலைகார சகோதரர்களும், ராணுவத்தின் தலைமைத் தளபதிகளும், சிங்கள அரசுமே குற்றவாளிகள் ஆவார்கள்.

     

    பழ.நெடுமாறன்

    ஈழப்போரின் இறுதியில் சிங்கள ராணுவம் புரிந்துள்ள கொடூரங்களுக்கும், பெண்கள், குழந்தைகளை படுகொலை செய்ததற்கும் இப்படம் சான்றாக விளங்குகிறது. இது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் சர்வதேச அளவில் விசாரணைக் குழுவை அமைத்து முழுமையாக விசாரித்தால் மட்டுமே உண்மைகள் வெளிவரும்.

     

    ஜி. ராமகிருஷ்ணன்

    இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு இந்த கொடூரமான கொலையே உதாரணமாகும். நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மிகக் கொடூரமான செயலை இலங்கை ராணுவம் நிறைவேற்றியுள்ளது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களும், அதற்கு துணைபோனவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp