
பாகிஸ்தானின் தந்தை எனப் போற்றப்படும் முகம்மது அலி ஜின்னாவின் வீட்டை பயங்கரவாதிகள் சனிக்கிழமை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.
பாகிஸ்தானின் தென் மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜின்னாவின் வீடு 121 ஆண்டு கால பழமை வாய்ந்தது. தலைநகர் குவெட்டாவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வீட்டை பயங்கரவாதிகள் சனிக்கிழமை அதிகாலை முற்றுகையிட்டனர்.
சக்தி வாய்ந்த நான்கு குண்டுகளை வெடிக்க வைத்து வீட்டின் முகப்புப் பகுதியைத் தகர்த்த பயங்கரவாதிகள் அதையடுத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் ஜின்னாவின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது.
வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீ பரவியது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடினர். ஆனாலும் வீட்டிலுள்ள அரிய நினைவுச் சின்னங்கள், ஆவணங்கள், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட மரச்சாமான்கள் உள்ளிட்ட பல பொருள்கள் தீக்கிரையாகின.
காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜின்னா, தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியை இந்த வீட்டில்தான் கழித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு இந்த வீடு தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.