Enable Javscript for better performance
ஹையான் புயல்: பிலிப்பின்ஸில் 10,000 பேர் சாவு?- Dinamani

சுடச்சுட

  
  typhoon

  பிலிப்பின்ஸ் நாட்டை வெள்ளிக்கிழமை தாக்கிய "ஹையான்' புயலால், 10 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

  அந்நாடு இதுவரை கண்டிராத மிக மோசமான இயற்கைப் பேரழிவான இந்தப் புயலால், பல நகரங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்தப் புயல் உருவாக்கிய சுனாமி போன்ற அசுர அலைகள் பிலிப்பின்ஸ் தீவுகளில் பெரும் பகுதியை சேதப்படுத்தியுள்ளன.

  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் மீட்புக்குழுவினர் ஏராளமான அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

  பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பலர் கடைகளையும், வர்த்தக நிறுவனங்களையும் சூறையாடி வருகின்றனர். இதனை சமாளிக்க டாக்லோபன் நகரில் சிறப்பு காவல்படையை அமைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

  ""உறவினர்களை பறி கொடுத்த விரக்தியாலும், வாட்டும் பசியாலும் பலர் பொறுமை இழந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை இன்னும் மோசமாகலாம்'' என்று நிலவரத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

  டாக்லோபன் நகரம் அமைந்துள்ள லேய்டீ மாகாண காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் எல்மர் சோரியா கூறுகையில், ""ஹையான் புயல் கடந்து சென்ற பகுதிகளில் இருந்த 70 முதல் 80 சதவீதம் வரையிலான வீடுகளும், கட்டடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. அரசின் முதல்கட்ட மதிப்பீட்டின்படி, இதுவரை 10,000 பேர் உயிரிழந்திருக்கலாம்'' என்று தெரிவித்தார்.

  லேய்டீயை அடுத்த சமர் தீவிலுள்ள பேசர் நகரில், புயல் காரணமாக 300 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 2,000 பேரை காணவில்லை என்றும் அந்த நகரத்தின் பேரிடர் தடுப்புப் பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

  மணிக்கு 315 கி.மீ. வேகத்தில் ஹையான் புயல் இந்தத் தீவில்தான் முதலில் கரையைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  அமெரிக்கா உதவிக்கரம்: இதற்கிடையே, பிலிப்பின்ஸýக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.

  இதுகுறித்து அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ""பிலிப்பின்ஸ் அரசின் கோரிக்கையை ஏற்று, அந்நாட்டுக்கு ஹெலிகாப்டர்கள், விமானங்கள், தேடுதல் மற்றும் மீட்பு உபகரணங்களை அனுப்ப பாதுகாப்புத்துறை அமைச்சர் சக் ஹேகல் பசிபிக் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடற்படைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உன்னிப்பாக கவனிக்க அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்பு மற்றும் பிலிப்பின்ஸ் நாட்டுக்கான அமெரிக்கத் தூதருடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், பாதிப்புகளிலிருந்து பிலிப்பின்ஸ் மீள்வதற்கான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

  ஐ.நா. சபையும், அவசரகால உதவிக்குத் தேவையான பொருள்களை பிலிப்பின்ஸýக்கு அனுப்பவிருப்பதாக அறிவித்துள்ளது.

  சீனாவில் அபாய எச்சரிக்கை

  பிலிப்பின்ஸில் கடும் சேதத்தை விளைவித்த ஹையான் புயல், அதனைத் தொடர்ந்து சீனாவில் கரையைக் கடக்கவிருப்பதால், அந்நாட்டில் செம்மஞ்சள் நிற எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இது சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய அபாய எச்சரிக்கையாகும்.

  இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கும் 30-ஆவது புயலான ஹையான், இந்த ஆண்டிலேயே அதிகபட்ச வேகம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

  ஹைனான் மாகாணத்திலுள்ள சன்ஷா நகருக்கு தென்கிழக்கில் 370 கி.மீ. தொலைவில் தெற்கு சீனக் கடலில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புயல் மையம் கொண்டிருந்தது.

  வியத்நாமில் மக்கள் வெளியேற்றம்

  வியத்நாம் நாட்டையும் ஹையான் புயல் தாக்கும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சக்கணக்கான மக்கள் அபாயகரமான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  தலைநகர் ஹனோயில், கடும் மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ள மக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 6 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெள்ளம் மற்றும் புயல் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

  மேலும், வடக்கு மாகாணங்களில் 52,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து வந்து தங்க வைக்கப்பட்டுள்ளதாக வியத்நாமிலிருந்து வெளியாகும் "வி.என்.எக்ஸ்பிரஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai