Enable Javscript for better performance
ஹையான் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு: பிலிப்பின்ஸில் குடிநீர், மருந்து இன்றி மக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    ஹையான் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு: பிலிப்பின்ஸில் குடிநீர், மருந்து இன்றி மக்கள் அவதி

    By dn  |   Published on : 13th November 2013 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    child

    ஹையான் புயலால் பிலிப்பின்ஸில் 1,774 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-யும் தாண்டக்கூடும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஐ.நா-வின் மனிதாபிமான சேவைகளுக்கான இயக்குநர் ஜான் கிங் திங்கள்கிழமை கூறுகையில்,""பிலிப்பின்ஸ் புயலில் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக நெருங்குகையில், மேலும் மேலும் அழிவுகளையும், உயிரிழப்புகளையும் காண்கிறோம்.

    இப்பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம்.

    தற்போது அங்குள்ள மக்களுக்கு உணவும், பாதுகாப்பான குடிநீரும் அவசரத் தேவையாக உள்ளது. இந்தப் புயலின் தாக்கம் மிக கோரமானது என்பதால், அதற்கேற்ப பிரம்மாண்டமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது'' என்று தெரிவித்தார்.

    இந்தப் புயலால் சுமார் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6,60,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

    மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருந்துகள், இருப்பிடம் ஆகியவற்றை அளிக்க முடியாமல், மீட்புக்குழுவினர் திணறி வருகின்றனர்.

    அவர்களுக்கு உணவு, மருத்துவ சேவை, கழிப்பிட வசதி, தங்குமிடம் ஆகியவற்றை அளித்து, சீரழிவிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக 30.1 கோடி டாலர் நிதியுதவி வழங்குமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    பிலிப்பின்ஸூக்கு உதவுவதற்காக அமெரிக்காவும், பிரிட்டனும் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் கப்பல்களை அனுப்ப முன்வந்துள்ளன.

    அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான யூ.எஸ்.எஸ். ஜார்ஜ் வாஷிங்டன், 5,000 வீரர்கள் மற்றும் 80 விமானங்களுடன் செவ்வாய்க்கிழமை பிலிப்பின்ஸூக்கு புறப்பட்டது.

    உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளுடன் மேலும் நான்கு அமெரிக்க கப்பல்கள் இன்னும் ஓரிரு நாள்களில் பிலிப்பின்ûஸ சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், சிங்கப்பூர் அருகே நிறுத்தப்பட்டுள்ள தங்கள் நாட்டு போர்க் கப்பல், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக பிலிப்பின்ஸூக்கு விரைந்துள்ளது என்று கூறினார்.

    கடந்த வெள்ளிக்கிழமை, பிலிப்பின்ஸின் சமர் தீவை ஹையான் புயல் தாக்கியது. அதன் வேகம் மணிக்கு 315 கி.மீ. வேகத்தில் இருந்தது. இது, இந்த ஆண்டு வீசிய மிக உக்கிரமான புயலாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai