மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் கிளை அமைப்பான ஜமாத்-உத்-தாவாவை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தலைவர்களையும் சர்வதேச பயங்கரவாதிகளாக அமெரிக்கா பிரகடனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்புகளான ஜமாத்-உத்-தாவா, அல்-அன்ஃபல் அறக்கட்டளை, தெஹ்ரிக்-இ-ஹர்மத்-இ-ரசூல், தெஹ்ரிக்-இ-தஹாபுஜ் குவிப்லா அவ்வல் உள்ளிட்ட அமைப்புகளை தீவிரவாத அமைப்புகளாக அமெரிக்கா அறிவிக்கிறது.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் நிதித்துறை தலைவர் முகம்மது ஹுசேன் கில், மக்கள் தொடர்புத்துறை மூத்த தலைவர் நஜிர் அகமது சௌத்ரி ஆகியோரையும் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கிறோம்.
மும்பைத் தாக்குதல்: மும்பையில் 2008ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் பலியாக காரணமான சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா பொறுப்பேற்றுள்ளது. 2011ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர் தாக்குதல்களை அந்த அமைப்பு நடத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டும் காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. எனினும், பெயரை மாற்றிக் கொண்டு அந்த இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. குறிப்பாக ஜமாத்-உத்-தாவா அமைப்பு, லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்பாக செயல்பட்டது. அல்-அன்ஃபல் அறக்கட்டளை, தெஹ்ரிக்-இ-ஹர்மத்-இ-ரசூல், தெஹ்ரிக்-இ-தஹாபுஜ் குவிப்லா அவ்வல் ஆகியவையும் 2011ஆம் ஆண்டு முதல், லஷ்கரின் முன்னணி அமைப்புகளாக செயல்பட்டன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் கூறுகையில், "அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மூலம், எதிர்காலத்தில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துக்கு தங்களது சதித்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவு மற்றும் நிதி கிடைப்பது தடுக்கப்படும்.
அமெரிக்கா-இந்தியா இடையேயான ஒத்துழைப்பால், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி உள்பட பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய அரசு நடத்தி வரும் விசாரணைக்கு, அமெரிக்க நீதித்துறையும், எஃப்பிஐ அமைப்புகளும் தேவையான ஒத்துழைப்பை அளித்து வருகின்றன.
ஹெராத் தாக்குதல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் மீது கடந்த மே மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பே காரணமாகும். இதுதொடர்பான உறுதியான ஆதாரம் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது' என்று தெரிவித்தார்.